Wednesday, April 11, 2012

திரு மந்திரம் - சொல்லிப் புரியாது காதலும் பக்தியும்




பக்தி என்றால் என்ன ?

கடவுள் இருக்கிறா என்பது பற்றிய சந்தேகம் ஆதி காலம் தொட்டு இருந்து வருகிறது.

"நாத்திகம் பேசி நாத் தழும்பு ஏறி " என்பார் மாணிக்க வாசகர். அவர் காலத்திலேயே நாத்திகம் பேசியவர்கள் இருந்திருக்கிறார்கள்.

புண் வந்தால் தழும்பு வரும் அல்லவா ?

அது போல் நாத்திகம் பேசினால் நாக்கில் தழும்பு வருமாம்.
அது புறம் இருக்கட்டும்.

ஆழ்வார்களும், நாயன்மார்களும், ஆசாரியர்களும் இறை உணர்வு பெற்றவர்கள். அதை ஏன் நம்மிடம் அவர்கள் தெளிவாக சொல்லவில்லை ?

ஏன் சுத்தி வளைக்கிறார்கள் ?

நமக்கு என்ன அறிவு இல்லையா ?

இப்படி இப்படி செய்தால், அந்த அனுபவத்தை பெறலாம் என்று நேரடியாக சொல்ல வேண்டியது தானே ?

அதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.

மகள், வயதில் ரொம்ப சின்ன பொண்ணு, தாயிடம் பேசிய ஒரு உரையாடல்.

மகள்: அம்மா, இந்த கல்யாணம், குடும்பம் எல்லாம் நல்லா இருக்குமா ?

அம்மா: ஆமா..அதுல என்ன சந்தேகம் உனக்கு.

மகள்: நீ அப்பாகூட இருப்பது உனக்கு சந்தோஷமா ?

அம்மா: (கொஞ்சம் வெட்கத்துடன்): ஆமா .. ஏன் கேக்குற

மகள்: அந்த சந்தோசம் எப்படிமா இருக்கும் ...

அம்மா: போடி இவளே, அது எல்லாம் உனக்கு சொன்னா புரியாது, போய் வேலையப் பாரு...

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே!
திரு மூலர் எழுதிய திரு மந்திரம்

முகத்திற் கண்கொண்டு= முகத்தில் உள்ள கண்களை கொண்டு

காண்கின்ற மூடர்கள் = காண்கின்ற காட்சி மட்டும் தான் உண்மை என்று நினைக்கும் மூடர்களே 

அகத்திற் கண்கொண்டு = மனக் கண் கொண்டு 

காண்பதே ஆனந்தம் = காண்பதே உண்மையான ஆனந்தம் 

மகட்குத் = மகளுக்கு 

தாய் = ஒரு தாயானவள் 

தன் மணாளனோடு = தன் கணவனோடு 

ஆடிய சுகத்தைச் = பெற்ற இன்பத்தை 

சொல்லென்றால் = மகள் சொல் என்று தாயிடம் கேட்டால் 

சொல்லுமாறு எங்ஙனே! = அந்த தாய் அதை எப்படி சொல்ல முடியும் 

அது போல், இறை உணர்வை நாமே தான் பெற வேண்டும், மற்றவர்கள் சொல்லி நம்மால் உணர முடியாது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்.

1 comment: