Thursday, April 12, 2012

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் அழகுணர்ச்சி

கும்ப கர்ணனுக்கு அழகு உணர்ச்சி இருக்குமா ?


தன்னை ஒரு அழகான ஆண் என்று அவன் நினைத்து இருப்பானா ?

தன் உருவத்தின் மேல் அவனுக்கு ஒரு பெருமை இருந்து இருக்குமா ?
 
 
கம்பன் காட்டுகிறான்....
 
 
மூக்கு, காது, இரண்டு கைகள், இரண்டு கால்கள் எல்லாவற்றையும் இழந்து முண்டமாய் கிடக்கிறான் கும்பகர்ணன்.

அப்போது இராமனிடம் வேண்டுகிறான் ஒரு வரம்.
 
 
"என்னைப் பார்த்து இந்த தேவர்கள் எல்லாம் பயந்து, நடுங்கி, ஒடுங்கிப் போய் நிற்பார்கள். நான் இறந்த பின், என் மூக்கு இல்லாத, காது இல்லாத உருவத்தைப் பார்த்து என்னை எள்ளி நகையாடுவார்கள். எனவே, என் தலையை துண்டித்து, அது யார் கண்ணிலும் படாமல் கடலுக்குள் போய் விழும்படி செய்து விடு" என்று இராமனை வேண்டுகிறான்.
 
 
அந்த உருக்கமான பாடல் ....
 
-------------------------------------------------------
 
மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை  நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின், நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள் ‘‘ என்றான்
--------------------------------------------------------------------------------------
 
 
மூக்கு இலா = மூக்கு இல்லாத 
முகம் என்று = முகம் என்று 
முனிவர்களும் = முனிவர்களும் 
அமரர்களும் = அமரர்களும் 
நோக்குவார் = நோக்குவார்கள். பார்த்தால் ஏளனம் செய்து சிரிப்பார்கள். எள்ளி நகையாடுவார்கள்
 
 
நோக்காமை = அப்படி அவர்கள் நோக்காமல்

நுன் கணையால் = உன்னுடைய கூறிய அம்பால்

என் கழுத்தை = என்னுடைய தலையயை 
 
 
நீக்குவாய்; = நீக்குவாய்
 
 
நீக்கியபின் = அப்படி துண்டித்தபின்
 
 
நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்; = என்னுடைய பெரிய தலையை (யார் கண்ணிலும் படாமல் ) கடலுக்குள் கொண்டு போட்டு விடுவாய்
 
 
இது நின்னை = இது உன்னிடம் 
வேண்டுகின்ற பொருள் என்றான் = வேண்டும் வரம் என்றான் 
 
இறந்த பின்னும், தன்னை தன் எதிரிகள் பார்த்து நகையாடக் கூடாது என்ற தன் மான உணர்ச்சி, அவனின் வீரம், அதில் எழுந்த பெருமிதம், அவனின் அழகு உணர்ச்சி, தோற்ற பின் வந்த அவமான உணர்ச்சி அனைத்தையும் கம்பன் பிழிந்து தருகிறான் .....


1 comment: