Sunday, April 8, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இராகவனே தாலேலோ


குல சேகர ஆழ்வார் இராமன் மேல் மிகுந்த ஈடிபாடு உள்ளவர். 

இராமன் எவ்வளவோ துன்பங்களை தாங்கி இருக்கிறான். 

அரசாட்சியை துறந்தான், கானகம் சென்றான், மனைவியை மாற்றான் கவர்ந்து சென்றான், கல்லிலும் முள்ளிலும் தேடி அலைந்தான்...

அப்படி துன்பப் பட்ட இராமனுக்கு வால்மீகியும் சரி, கம்பனும் சரி ஒரு தாலாட்டு பாடவில்லேயே என்று அவர் மனம் மிக வேதனை பட்டு இருக்கிறது. 

அவரே இராகவனுக்கு தாலாட்டு பாடினார். பத்து இனிமையான பாடல்கள்:

அதில் முதல் பாடல் .......



----------------------------------------------------------------------------------------
மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ
------------------------------------------------------------------------------------


பதம் பிரித்த பின்


--------------------------------------------------------------------------------------------------
மலை அதனால் அணை கட்டி மதில் இலங்கை அழித்தவனே
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே
கலை வல்லவர் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிலை வல்லவா சேவகனே சீராமா தாலேலோ
----------------------------------------------------------------------------------------------
எளிமையான பாடல்

மலை அதனால் = கல்லினால்

அணை கட்டி = பாலம் கட்டி

மதில் இலங்கை அழித்தவனே = மதில் சூழ்ந்த இலங்கையை அழித்தவனே

அலை கடலை கடைந்து = அலை பாயும் பார்க் கடலை கடைந்து

அமரர்க்கு = தேவர்களுக்கு

அமுது அருளிச் செய்தவனே = அமுதம் அருளியவனே

கலை வல்லவர் = கலைகளில் வல்லவர்கள்

தாம் வாழும்= வாழும்

கணபுரத்து என் கருமணியே = திருக்கண்ணபுரம் என்ற ஊரில் வாழும் என் 
கண்ணின் கரு மணியை போன்றவனே

சிலை = வில்

வல்லவா = வல்லவனே

சேவகனே = பக்தர்களுக்கா சேவை செய்பவனே

சீராமா = சீதாரமனே

தாலேலோ = தாலேலோ

தவறு செய்பவர்களுக்கு, அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் 
(இராவணன்) தண்டனை தருகிறான்.

நல்லவர்களுக்கு நல்லது செய்கிறான் (கடலை கடைந்து அமுது தருகிறான்)


உரை எழுதியவர்களுக்கு ஒரு சங்கடம் இருப்பதை பார்க்கிறேன். 

அது எப்படி இராமனை "சேவகன்" என்று சொல்லலாம் என்று வருத்தப் படுகிறார்கள்.


சேவகன் என்றால் யாருக்கு சேவகன் ? என்ன சேவை ?


நாம் தானே ஆண்டவனுக்கு சேவை செய்ய வேண்டும், எப்படி ஆண்டவன் நமக்கு சேவை செய்வான் என்று ரொம்ப சிந்தித்து வலிந்து பொருள் சொல்கிறார்களோ என்று தோன்றுகிறது.


எனக்கு அப்படி ஒன்றும் அது நெருடலாய் படவில்லை. பக்தர்கள் கேட்டதை செய்து தருவதால், சேவகன். முனிவர்கள் வேள்வியை காப்பதால் அவர்களுக்கு சேவகன்.


அந்த அதீத பக்தி, இராமனை தாலாட்ட வேண்டும் என்ற ஆசை, கம்பனும் வால்மீகியும் தாலாட்ட வில்லையே என்ற ஆதங்கம், 

குழந்தையை கொஞ்சும் அந்த தாய்மை மனம், இது எல்லாம் இந்த பாடலில் காணலாம்

http://www.blogger.com/blogger.g?blogID=4597935220111682070#editor/target=post;postID=9090371538601966438

No comments:

Post a Comment