Friday, May 11, 2012

கம்ப இராமாயணம் - அகலிகை தவறு செய்தாளா ?


கம்ப இராமாயணம் - அகலிகை தவறு செய்தாளா ?


காமமும் காதலும் மறை பொருளாகவே இருந்து வந்திருக்கிறது.

ஒரு பெண் தன் காதலை, காமத்தை வெளிப்படையாக சொல்ல முடிவதில்லை.

அப்படி சொல்ல முயன்ற பெண்களை இந்த சமுதாயம் சந்தேகக் கண் கொண்டு தான் பார்த்து வந்திருக்கிறது.

இராமாயணத்தில் அகலிகை அறிந்தே தவறு செய்தாளா? அல்லது அவள் அறியாமல் நடந்ததா ?

இராமாயணத்தில் இருந்து இது சம்பந்தப் பாடல்களை பின்னிருந்து முன்னாக தருகிறேன்.

நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்....





தீது இலா உதவி செய்த சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு,
மாதவன் அருள் உண்டாக வழிபடு, படர் உறாதே
போது நீ அன்னை என்று பொன் அடி வணங்கிப் போனான்.


தீது இலா உதவி செய்த = நாம் சிலருக்கு உதவி செய்வோம். ஆனால் அது சில சமயம் உபத்ரவத்தில் போய் முடியும். ஆனால் இராமன் செய்த உதவி, தீது இல்லாத உதவி.

சேவடிக் = சிவந்த அடி

கரிய செம்மல் = கரிய நிறம் கொண்ட இராமன்


கோது இலாக் குணத்தான் = குற்றம் இல்லாத குணங்களை கொண்ட விஸ்வாமித்திரன்


சொன்ன பொருள் = சொன்ன வரலாறு


எலாம் மனத்தில் கொண்டு = அனைத்தையும் மனதில் கொண்டு


மாதவன் = பெரிய தவம் செய்த கௌதமன் (அதாவது உன் கணவன்)


அருள் உண்டாக வழிபடு = அவன் அன்பும் அருளும் கிடைக்க 
இறைவனை வழிபடு


படர் உறாதே = துன்பப்படாதே


போது நீ = நீ சென்று வா


அன்னை = என் அன்னையே என்று இராமன் அகலிகையை அன்னை என்று அழைக்கிறான். ஏன் ? ஒரு தாய் தன் பிள்ளையை சுமப்பவள். அது போல,இந்த அகலிகையும் என்னை இத்தனை காலம் தன் மனத்தில் சுமந்து இருக்கிறாள். எனவே, அவளும் ஒரு தாய்.


என்று பொன் அடி வணங்கிப் போனான் = என்று கூறி அவளுடைய அடிகளை வணங்கிப் போனான். சில பதிப்புகளில் (போனாள் என்று இருக்கிறது).


இராமன் அவளை அன்னை என்று சொல்கிறான். அவள் குற்றம் செய்து இருப்பாளா ?


அவள் குற்றமே செய்து இருந்தாலும், அது அவள் அறிந்து செய்த பிழை என்று காட்ட வந்த கம்பன் சொல்வான்....


1 comment:

  1. இந்த அகலிகை விஷயம் ரொம்பக் கஷ்டமானது. அவள் தெரிந்து செய்தாளா? தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும், மன்னிப்புக் கொடுப்பது சரிதானே? கணவன் தவத்தில் இருந்தால், மனைவி தன் உணர்ச்சிகளை மறந்துவிட வேண்டியதுதானா? இவை எல்லாம் கடினமான கேள்விகள். கம்பர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம். நன்றி.

    ReplyDelete