Sunday, May 20, 2012

நந்தி கலம்பகம் - நெருப்பு நிலா


நந்தி கலம்பகம் - நெருப்பு நிலா


ஒரு நாள் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் (உ.வே.சா.) இரவு உணவு உண்ட பின் மாடியில் காற்றாட அமர்ந்திருந்தார்.

தூரத்தில் ஒரு பிச்சைக்காரன்

"ஊரைச் சுடுமோ, உலகம் தனை சுடுமோ
யாரைச் சுடுமோ அறிகிலேன்"

என்று பாடியது காதில் விழுந்தது.

அடுத்த வரி கேட்பதற்குள் அந்த பிச்சைக்காரன் வேறு தெருவுக்குள் நுழைந்து விட்டான்.

உ.வே. சா யோசிக்கிறார். எது ஊரையும், உலகையும் சுடும் என்று.

செய்த பாவமா ? எது என்று யோசித்தார். விடை கிடைக்கவில்லை.

சரி, அந்த பிச்சைக்காரனை தேடி கண்டு பிடிக்கலாம் என்று கிளம்பி விட்டார்.

அந்த பிச்சைக்காரன் பின்னால் தெரு தெருவாய் அலைந்தார்.

அந்த பிச்சைகாரனோ முதல் இரண்டு வரி தாண்டி பாடுவதாய் இல்லை.

நேரே அவனிடமே கேட்டு விட்டார்...அடுத்த இரண்டு வரிகளை பாடும்படி.

"பாட்டா...பசி உயிர் போகிறது என்றான் அந்த பிச்சைக்காரன்"

அவனுக்கு உணவு வாங்கித் தந்து அடுத்த இரண்டு வரியும் என்ன என்று குறித்துக்கொண்டு வந்தார்.

நந்தி கலம்பகத்தில் வரும் அந்த பாடல்....


காதலனை பிரிந்து தனித்து இருக்கிறாள் காதலி.

தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டிருக்கிறாள்.

நிலவைப் பார்க்கிறாள். அது கொதிக்கிறது.

இந்த நிலவு நம்மை மட்டும் தான் சுடுகிறதா இல்லை எல்லாரையும் சுடுகிறதா என்று யோசிக்கிறாள்...



ஊரைச் சுடுமோ உலகம் தனைச்சுடுமோ
யாரைச் சுடுமோ அறிகிலேன் -நேரே
பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த
நெருப்புவட்ட மான நிலா.

ஊரைச் சுடுமோ = இந்த ஊர் எல்லாம் சுடுமோ (என்றால் இந்த ஊரில் உள்ள எல்லோரையும் என்று பொருள்)

உலகம் தனைச்சுடுமோ = இந்த ஊர் மட்டும் அல்ல, உலகில் உள்ள எல்லோரையும் சுடுமோ?

யாரைச் சுடுமோ அறிகிலேன் = யார் யாரை எல்லாம் சுடுமோ, தெரியவில்லை

நேரே = நேரில் உள்ள இந்த நிலா

பொருப்பு = மலை முகடு, மலைத் தொடர்ச்சி போன்ற

வட்ட மானமுலைப் =

பூவையரே = பூவை சூடும் பெண்களே

இந்த நெருப்புவட்ட மான நிலா. = இந்த நெருப்பு வட்டமான நிலா


4 comments:

  1. "என்னைச் சுடுகின்றது" என்று சொல்லாமல் சொல்லி விட்டாள்!

    தமிழர்கள் உ.வே.சா. அவர்களூக்கு எவ்வளவோ கடன் பட்டிருக்கிறார்கள். அவர் அலைந்து தமிழ்ப் பாடல்களைச் சேர்த்த கதைகள் எங்கேயாவது புத்தகமாக வெளி வந்திருன்க்கின்றனவா? அவருக்கு எங்கேயாவது சிலை வைத்திருக்கிறார்களா இந்த இரண்டு தமிழ் திராவிடக் கட்சியினரும்?

    ReplyDelete
    Replies
    1. என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவருக்கு சிலையும் இல்லை, அவர் பட்ட பாட்டினை விளக்கும் புத்தகமும் இல்லை.

      தமிழர்கள் அவருக்கு காலம் எல்லாம் கடன் பட்டிருக்கிறார்கள். அவர் இல்லை என்றால் நாம் எவ்வளவோ இழந்திருப்போம்.

      என்ன இழந்தோம் என்று கூட தெரிந்திருக்காது. அவர் பெயரில் ஒரு award கூட இல்லை என நினைக்கிறேன்.

      நாம் அவருக்கு நியாம் செய்யவில்லை என்பது வேதனையான உண்மை.

      Delete
  2. நம் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பது அவர்க்கு நாம் காட்டும் நன்றி ஆகும்.ஏனெனில் கி.வா.ஜ. அவர்களே நாம் உ.வே.சாக்கு ஏதும் செய்யவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார்

    ReplyDelete
  3. ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. அவர்கள் எழுதிய, தன் வரலாற்று நூல், என் சரித்திரம்.
    Everyone of us should read. Published by vikatan

    ReplyDelete