Wednesday, May 30, 2012

திருக்குறள் - காதல் என்றும் புதிது


திருக்குறள் - காதல் என்றும் புதிது



நாம் புதியதாய் ஒன்றை படித்து அறிந்து கொள்ளும் போது நமக்கு ஒரு சந்தோஷம் வரும் தானே?

"அட, இதை இத்தனை நாள் அறியாமல் போனோமே" என்று தோன்றும்.
தெரிந்த பின், ஒரு சந்தோஷம் தோன்றும். மேலும் மேலும் அந்த விஷயத்தை பற்றி அறிந்து கொள்ள தோன்றும்.


அது போல, இந்த பெண்ணுடன் பழகும் ஒவ்வொரு நாளும் புதியதாய் இருக்கிறது.


அந்த சிணுங்கல், அந்த வெட்கம், அந்த கனிவு, பரிவு, பாசம், என்று ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று புதியதாய் இருக்கிறது.

ஒரு விஷயத்தை படித்து அறிந்தவுடன் , அந்த விஷயம் நமக்கு பழையதாகிப் போகிறது.


அதில் உள்ள சுவாரசியம் குறைந்து விடுகிறது.


ஆனால், நம் அறியாமை மட்டும் அப்படியே இருக்கிறது.


அது மேலும் மேலும் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள தூண்டிக் கொண்டே இருக்கிறது.


அறிய அறிய நம் அறியாமை புதிது புதிதாக தோன்றுவதைப் போல, இந்த பெண்ணோடு பழகும் போது ஒவ்வொரு தடவையும்
ஏதோ புதியதாய் தோன்றி கொண்டே இருக்கிறது.



--------------------------------------------------------------
அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
--------------------------------------------------------------


அறிதோறும் = ஒவ்வொரு முறை அறியும் போதும்



அறியாமை கண்டற்றால் = எப்படி நம் அறியாமையை எப்படி புதியதாய் அறிந்து கொள்கிறோமோ



காமம் = காதல் (அவள் மேல் கொண்ட )



செறிதோறும் = ஒவ்வொருமுறை அவளோடு சேரும் போதும்



சேயிழை மாட்டு. = சிறந்த அணிகலன்களை அணிந்த அவளோடு சேரும் போதும் அப்படியே தோன்றுகிறது


 

(Appeal: If you like this blog, please click g+1 below to express your liking)

2 comments:

  1. சரிதான். "நவில்தொறும் நூல் நயம் போலும்" என்பது போல.

    இதே பாடலை இன்னும் கொஞ்சம் "வயதானவர்களுக்கு மட்டும்" பொருள் விளங்கும்படிப் படிக்கத் தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. நடத்துங்க ... நடத்துங்க...

      Delete