Sunday, May 6, 2012

திரு ஞான சம்பந்தர் - பிறவி நோய்க்கு மருந்து


திரு ஞான சம்பந்தர் - பிறவி நோய்க்கு மருந்து


நல்லது நினைத்து தான் எல்லாம் தொடங்குகிறோம்.

நல்லதோடு சேர்ந்து சில அல்லாதனவும் நடக்கத்தான் செய்கிறது.

அமிழ்தம் வேண்டி தான் பாற்கடலை கடைந்தார்கள். 

அமிழ்தோடு சேர்ந்து ஆலகால விஷமும் வந்தது. 

நல்லதை நமக்களித்து, அல்லாததை அவன் ஏற்றுக் கொண்டான்.

அவன் திருவடி பணிந்தால் இந்த பிறவி என்னும் நோய் தீரும் என்கிறார் திரு ஞான சம்பந்தர்



பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகிக்
கருகும் மிடறுடையார் கமழ் சடையார் கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய் அடையாவே.


பெருகும் புனல் = எங்கெங்கும் நீர் நிறைந்து இருக்கும்

அண்ணாமலை = திரு அண்ணாமலை என்ற ஊரில்

பிறை சேர் கடல் = நிலவு பாற்கடலில் சென்று தினமும் சேர்கிறது என்பது ஒரு ஐதீகம்

நஞ்சைப் = அந்தப் பாற்கடலை கடைந்த போது தோன்றிய நஞ்சை

பருகும் தனை துணிவார் = துணிந்து பருகியவர்

பொடி அணிவார் = சாம்பலை அணிவார்

அது பருகிக் = அந்த நஞ்சைப் பருகி

கருகும் மிடறுடையார் = தன் கழுத்து கருகியவர். திரு நீல கண்டர்

கமழ் சடையார் = மணம் வீசும் சடை முடி உடையவர்

கழல் பரவி = அவருடைய திருவடியைப் போற்றி

உருகும் மனம் உடையார் தமக்கு = உருகும் மனம் உடையவர்களுக்கு

உறுநோய் அடையாவே. = உறுநோய் = உற்ற நோய், உருகின்ற நோய், 

உறும் நோய் (வந்த நோய், வருகின்ற நோய், வரும் நோய்) எதுவும் வராது.

அது என்ன வந்த, வருகின்ற, வரும் நோய் ? 

பிறவி நோய். 

பிறவி நோய்க்கு மருந்து அவன் திருவடி



2 comments:

  1. நல்ல பாட்டு. "உறு நோய்" என்பது சிறப்பாக இருந்தது.

    இந்தக் கடவுள்கள் பற்றி இல்லாமல் வேறு பாடல்களைப்பற்றி எழுதக்கூடாதா?! இறைப் பாடல்களை விட மனித உணர்வுகளைப் பற்றிய பாடல்களை (காதல், சோகம், ஆச்சரியம், மகிழ்ச்சி, உறவு, பிறிவு, இன்ன பிற) இன்னும் இரசிக்க முடியும் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. எழுதி கொண்டு தானே இருக்கிறேன். இராமாயணம், குறுந்தொகை, சிலப்பதிகாரம், போன்றவற்றில் இருந்து. சமய பாடல்கள் அதிகம் என்பது உண்மை. சமய பாடல்களின் ஆச்சர்யம் இன்னும் குறையவில்லை எனக்கு.

      மற்றவற்றைப் பற்றி அதிகம் எழுத முயற்சி செய்கிறேன்.

      சுட்டி காட்டியமைக்கு நன்றி.

      Delete