Monday, May 28, 2012

முத்தொள்ளாயிரம் - சைட் அடிக்கும் பெண்கள்


முத்தொள்ளாயிரம் - சைட் அடிக்கும் பெண்கள்


நமக்கு பிரியமானவர்களோடு இருக்கும் போது, அந்த நேரம் நீண்டு கொண்டே போகக் கூடாதா என்று இருக்கும்.

அவர்களோடு எவ்வளவு பேசினாலும், பார்த்தாலும் போதாது.

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று மனம் ஏங்கும்.

அவளுக்கு அந்த ஊர் அரசன் மேல் கொள்ளைக் காதல். 

அவன் குதிரையின் மேல் போகும் போது வரும் போது பார்த்து அவன் பால் மனதை பறிகொடுத்து விட்டாள்.

கதவின் மறைவில் நின்று அவன் வரும் போதும் போகும் போதும் பார்ப்பாள்.

நிறைய நேரம் பார்க்க ஆசை தான், ஆனால் அவன் ஏறிச் செல்லும் குதிரை மிக வேகமாக சென்று விடுகிறது.

அவள் அந்த குதிரையிடம் பேசுகிறாள்.

"போர்க் களத்தில் வேகமாக செல்கிறாய், சரி. ஊருக்குள் என்ன எதிரிகளா இருக்கிறார்கள், ஏன் இவ்வளவு அவசரம், கொஞ்சம் மெதுவாத்தான் போயேன். நான் இன்னும் கொஞ்சம் அவனை பார்த்து இரசிப்பேன்ல" என்று குதிரையிடம் முறை இடுகிறாள். 

அந்த ஜொள்ளு பாடல் 




போரகத்துப் பாயுமா! பாயா(து) ஒருபடியா,
ஊரகத்து மெல்ல நடவாயோ ! - பார
மதவெங் களியானை மாறன் தன் மார்பம்
கதவங்கொண்(டு) யாமும் தொழ.

போரகத்துப் = போர்க் களத்தில்

பாயுமா! = பாய்ந்து செல்வாயா (செல்வாய்)

பாயா(து) = அப்படி பாய்ந்து செல்லாமல்

ஒருபடியா = ஒரு நிதானமாக

ஊரகத்து = ஊருக்குள்

மெல்ல நடவாயோ ! = கொஞ்சம் மெல்ல நடந்து வாராயோ

பார = பார்க்க

மதவெங் களியானை = மதம் கொண்ட வெம்மையான யானை போன்ற 
மாறன் தன் மார்பம் = மாறன் (அரசன், தலைவன்) மார்பு 

கதவங்கொண்(டு) யாமும் தொழ = கதவுக்கு பின்னால் இருந்து யாம் தொழ


குதிரையிடம் "சைட்" அடிக்க என்றா சொல்ல முடியும்...:)


(appeal to reader: If you like this blog, please click g+1 button below the blog to express your liking.)



3 comments:

  1. இதெல்லாம் எந்த வருடத்தில் எழுதியது?

    நம் பழைய பாடல்களில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த உணர்வுகள் இன்னும் நாம் உணரக்கூடியவைகளாகவே இருப்பதுதான்.

    அருமையான பாடல். ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் சைட் அடிப்பதில் இளைத்தவர்கள் அல்ல!

    ReplyDelete
    Replies
    1. There are various estimates on the date. The most conservative estimate is 9th century. (1000+ years old for sure)

      Delete
  2. கடைசி வாக்கியம் மிகவும் பிடித்தது :)

    ReplyDelete