Wednesday, May 16, 2012

கம்ப இராமாயணம் - கம்பனின் காய் நகர்த்தும் அழகு


கம்ப இராமாயணம் - கம்பனின் காய் நகர்த்தும் அழகு

சொல் அழகு, பொருள் அழகு, நடை அழகு என்று எத்தனையோ அழகு கம்பனின் காப்பியத்தில்.

கம்பன் கதா பாத்திரங்களை நகர்த்தும் அழகே தனி.

கார் காலம் முடிந்து விட்டது.

அந்த கார்கலத்தில் இராமன் சீதையை பிரிந்து தவித்த தவிப்பை, ஒரு ஆணின் காதலை காமத்தை கம்பன் படம் பிடித்து காட்டுவது மாதிரி வேறு எங்காவது இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

காதலியின் பிரிவால் கவிதை எழுத ஆரம்பிக்குமுன் இளைஞர்கள் இந்த பாடல்களை படிப்பது உசிதம்.

சீதையை தேட ஆரம்பிக்காமல் சுக்ரீவன் காலம் கடத்திக் கொண்டு இருக்கிறான்.

இராமனுக்கு கோவம் வருகிறது. இலக்குவனை அனுப்புகிறான்.
மிகுந்த கோவத்தோடு இலக்குவன் வருகிறான்.

வானரங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

சுக்ரீவன் தண்ணி அடித்துவிட்டு போதையில் இருக்கிறான்.
அனுமன் யோசிக்கிறான்.

இங்கு தான் கம்பனின் காய் நகர்த்தும் அழகை பார்க்காலாம்.

அனுமன் விதவை கோலத்தில் உள்ள தாரையை இலக்குவன் முன் அனுப்புகிறான்.

விதவை கோலத்தில் வந்து தாரை இலக்குவனிடம் வினவுகிறாள்...



வெய்தின் நீ வருதல் நோக்கி,
வெருவுறும் சேனைவீர!
செய்திதான் உணர்கிலாதுதிருவுளம்
தெரித்திஎன்றார்;
'ஐய! நீ ஆழி வேந்தன்
அடி இணை பிரிகலாதாய்;
எய்தியது என்னை?' என்றாள்,
இசையினும் இனிய சொல்லாள்.


வெய்தின் = கோபத்தோடு

நீ வருதல் நோக்கி, = நீ வருவதைப் பார்த்து

வெருவுறும் சேனை = வானர சேனைகள் பயந்து நிற்கின்றன

வீர! = வீரனே

செய்திதான் உணர்கிலாது = (நீ வந்த காரணம்) செய்தி அறியாது

திருவுளம் தெரித்தி' என்றார்; = உன் திருவுள்ளம் என்ன என்று கூறு

ஐய! = ஐயனே

நீ ஆழி வேந்தன் = நீ, ஆழி சக்கரம் செலுத்தும் வேந்தனான (இராமனின்)
அடி இணை பிரிகலாதாய்; = திருவடி பிரியாதவன் அல்லவா

எய்தியது என்னை?' என்றாள், = எப்படி இப்படி தனியாக வந்தாய் என்றாள்

இசையினும் இனிய சொல்லாள்.= இசையினும் இனிய சொல்லாள்

அடுத்து வருவது இன்னும் சுவையான பாடல்...அது அடுத்த blog ல்....



1 comment:

  1. அடுத்த பாடலை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete