Wednesday, May 23, 2012

திருவிளையாடல் புராணம் - புண் சுமந்த திரு மேனி


திருவிளையாடல் புராணம் - புண் சுமந்த திரு மேனி


மண்ணை படைத்தவன் மண் சுமந்தான்

அடியவர்களுக்காக ஆண்டவன் அடி வாங்கிய கதை அது

மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான், கூலி ஆளாக வந்து, பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்ட கதை.

அதை பரஞ்சோதியார் எப்படி கூறுகிறார் பாருங்கள்...




பண்சு மந்தமறை நாட ரும்பொருள் பதஞ்சு மந்தமுடி யார்மனம்
புண்சு மந்ததுயர் தீர வந்தபரி நகரி ளாயடவி போனபின்
விண்சு மந்தசுர நதியெ னப்பெருகு வித்த வையையிது விடையவன்
மண்சு மந்துதிரு மேனி மேலடி வடுச்சு மந்தகதை யோதுவாம்.

பதம் பிரிக்கவிட்டால் பல் உடைந்து விடும் போல் இருக்கிறது....

பண் சுமந்த மறை நாட அரும் பொருள் பதம் சுமந்த முடியார் மனம்
புண் சுமந்த துயர் தீர வந்த பரி நரிகளாய் அடவி போன பின்
விண் சுமந்த சுர நதி என பெருகுவித்த வையை இது விடையவன்
மண் சுமந்து திரு மேனி மேல் அடி வடு சுமந்த கதை ஓதுவாம்

அப்பாட...இப்ப தான் ஏதோ தமிழ் மாதிரி இருக்கு இல்ல ?


பண் சுமந்த = இசையை சுமந்த (கொண்ட)

மறை = வேதங்கள்

நாட = அடைய முயலும்

அரும் பொருள் = அருமையான பொருளான (இறைவனின்)

பதம் = திருப் பாதங்களை (திருவடி)

சுமந்த = தன் தலையில் சுமந்த

முடியார் மனம் = அடியார் மனம்

புண் சுமந்த = புண் பட்டு, அதனால் வந்த (பாண்டிய மன்னன் மணி வாசகரை ரொம்ப கஷ்டப் படுத்தினான்)

துயர் தீர வந்த = துயரம் தீர வந்த

பரி = குதிரைகள்

நரிகளாய் = நரிகளாய் மாறி

அடவி போன பின் = கானகம் போன பின்

விண் சுமந்த = சுவர்க்கம் சுமந்த

சுர நதி = தேவ நதி (சுர = தேவர்கள், எதிர்பதம் அசுரர் = அரக்கர்கள்). கங்கை என்று சொல்லுவர்

என பெருகுவித்த = அது போல பெருகி வந்த

வையை இது = வைகை நதி இது

விடையவன் = எருதின் மேல் ஏறிய (சிவன்)

மண் சுமந்து = மண் சுமந்து

திரு மேனி மேல் = திரு மேனி மேல்

அடி = அடி வாங்கி

வடு = அதானால் உண்டான வடுவை

சுமந்த கதை ஓதுவாம் = சுமந்த கதை சொல்லுவோம்





2 comments:

  1. நல்ல பாட்டு. எதுவெல்லாம் என்னவெல்லாம் சுமக்கின்றன என்பதை வைத்தே ஒரு பாடல். அதற்குள்ளே, இரண்டு புண். இந்த இரண்டு பொருள்களையும் வைத்து என்ன ஒரு கட்டுக்கட்டி ஒரு பாடல் பண்ணியிருக்கிறார்! அருமை!

    நன்றி இதை எமக்குத் தந்ததற்கு.

    ReplyDelete
  2. எல்லாம் பொக்கிஷங்கள். இத்தனை நாள் தெரியாமலே இருந்து விட்டோம்

    ReplyDelete