Wednesday, May 23, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - குளிருதுடா...


நாலாயிர திவ்ய பிரபந்தம் - குளிருதுடா...


அவளுக்கு அவனை அணைத்துக் கொள்ள ஆசைதான்.


ஆனா, அவன் கிட்ட அதை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை.


ஆசை ஒரு புறம். நாணம் மறு புறம்.


அவன் எப்ப "ஏய், உன்னை ஒரு தடவை கட்டி பிடிக்காட்டா" என்று கேட்கும் போதெல்லாம்
"சரி" என்று வார்த்தை வாய் வரை வரும், ஆனால் வெளியே விருப்பம் இல்லாத மாதிரி காட்டிக் கொள்வாள்.


இன்னைக்கு அவன் வரவுக்காக யமுனை ஆற்றின் கரையில் காத்து இருக்கிறாள்.


அவன் வர்ற மாதிரி தெரியல. அப்படியே ஆற்றில் நடந்து போய், ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டின் மேல் ஏறி நின்று பார்க்கிறாள்...


அந்தி சாயும் நேரம். வாடை காற்று அவளை வாட்டுகிறது.


குளிரில் அவள் தளிர் மேனி நடுங்குகிறது. விடிய விடிய அவன் வரவு பார்த்து நிற்கிறாள்.


அவ்வளவு காதல்.




ஏர்மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர் எனைப்பலர் உள்ள இவ்வூரில் உன்தன்
மார்வு தழுவுதற் காசை யின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு
கூர்மழை போல்பனிக் கூதல் எய்திக் கூசி நடுங்கி யமுனை யாற்றில்
வார்மணற் குன்றில் புலர நின்றேன் வாசு தேவா! உன்வரவு பார்த்தே.





ஏர்மலர்ப் = அழகிய பூக்களை


பூங்குழல் = சூடியதால் பூ போன்ற வாசம் உள்ள கூந்தலை உடைய


ஆயர் மாதர் = ஆயர் குலப் பெண்கள்


எனைப்பலர் = என்று பல பெண்கள்


உள்ள இவ்வூரில் = உள்ள இந்த ஊரில்


உன்தன் = உன்னுடைய

மார்வு = மார்பை


தழுவுதற் காசை யின்மை = தழுவ ஆசை இல்லை (என்று பொய் சொன்னதால்)


அறிந்தறிந்தே = உண்மை அறிந்து


உன்தன் பொய்யைக் = நீ சொன்ன பொய்யை (வருவேன் என்று சொன்ன பொய்)


கேட்டு = கேட்டு

கூர்மழை = கூரிய மழை

போல் = போல

பனிக் கூதல் = கூதல் அடிக்கும் பனிக் காற்றில்

எய்திக் = வந்து

கூசி = உடல் குளிரில் கூசி

நடுங்கி = நடுங்கி

யமுனை யாற்றில் = யமுனை ஆற்றில்

வார்மணற் குன்றில் = பெரிய மணல் குன்றில்

புலர = பொழுது புலரும் வரை

நின்றேன் = உனக்காக காத்து நின்றேன்

வாசு தேவா! = வாசு தேவா

உன்வரவு பார்த்தே. = உன்னுடைய வரவை எதிர் பார்த்து

அவள் ஒரு பொய் சொன்னாள். அவனும்.



1 comment:

  1. ஆஹா, இது என்னய்யா இது? இப்படி ஒரு சினிமா மாதிரி ஒரு சீன் எழுதியிருக்கீங்களே! சூப்பர்யா!

    ReplyDelete