Thursday, June 7, 2012

நாலடியார் - பெண்ணே உன்னை வணங்குகிறேன்


நாலடியார் - பெண்ணே உன்னை வணங்குகிறேன்


ஒரு தாய் தனியே இருந்து யோசிக்கிறாள். 

அவளுடைய மகள் காதலனோடு சென்று விட்டாள்.

அவளோ செல்வச் சீமாட்டி. பணக்கார வீட்டுப் பெண்.

காதலன் ஒரு ஏழை பையன். எப்படி எல்லாம் செல்லமாய் வளர்ந்த பெண் இப்ப அந்த வீட்டில் போய் எப்படி எல்லாம் துன்பப் படப் போகிறாளோ என்று தவிக்கிறாள். 

"அந்த பெண் சின்னவளாக இருக்கும் போது ஒரு நாள், காலில் மருந்தாணி இட, அந்த மருதாணி குழம்பை பஞ்சில் தொட்டு தொட்டு வைத்தேன், அது கூட வலிக்கிறது "பைய , பைய" என்று காலை இழுத்துக் கொண்டாள். இப்ப அந்த காட்டில் கல்லிலும் முள்ளிலும் எப்படி தான் நடந்து போவாளோ" என்று எண்ணி எண்ணி சோகத்தில் ஆழ்கிறாள்.




அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ, -அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி.

சீர் பிரித்த பின்

அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம் மருங்கிற் கன்னோ
பரல் கானம் ஆற்றின கொல்லோ - அரக்கு ஆர்ந்த
பஞ்சி கொண்டு இடினும் பைய பைய என என்று 
அஞ்சி பின் வாங்கும் அடி

பொருள் 


அரக்கு = அரக்கு போல் சிவந்த

ஆம்பல் = ஆம்பல் மலர் போல் அழகாய்

நாறும் = மணம் வீசும்

வாய் = வாயை உடைய

அம் மருங்கிற் கன்னோ = சிறிய இடை உடைய அந்த பெண்ணா?

பரல் = சின்ன சின்ன கற்கள்

கானம் = (நிறைந்த) கானகம்

ஆற்றின கொல்லோ = எப்படி தான் நடந்து போவாளோ

அரக்கு ஆர்ந்த = சிவந்த செம்பஞ்சு குழம்பை (மருதாணி போன்ற ஒன்று)

பஞ்சி கொண்டு = பஞ்சில் தொட்டு தொட்டு

இடினும் = வைத்து விட்டாலும்

பைய பைய = மெல்லமா மெல்லமா

என என்று = என்று சொல்லி

அஞ்சி பின் வாங்கும் அடி = பயந்து காலை இழுத்துக் கொள்வாள்


தியாகத்தின் மறு பெயர் தான் பெண்ணோ?

2 comments:

  1. So beautiful! It captures a parent's thought so well. At the same time, when the time comes, our kids are ready to venture into this world with all its trials and struggles. Great poem. Thanks for sharing.

    ReplyDelete
  2. I like the words "paiya paiya". It captures the emotions so well....

    ReplyDelete