Monday, June 25, 2012

புறநானுறு - ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா


புறநானுறு - ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா


நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்றதுபோல் ஒரு சில நல்லவர்கள் இருப்பதால் இந்த உலகம் இயங்குகிறது என்கிறது புறநானூறு.

யார் அந்த நல்லவர்கள் ? அவர்கள் என்ன செய்வார்கள்?

அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல், மற்றவர்களோடு பகிர்ந்து உண்பார்கள்.

கோபப்படமாட்டார்கள்.

மற்றவர்கள் அஞ்சுவதற்கு அஞ்சுவார்கள்.

புகழுக்காக உயிரையும் கொடுப்பார்கள்.

பழி வரும் என்றால் உலகமே கிடைத்தாலும் அதை செய்ய மாட்டார்கள்.
தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பார்கள்.


உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.



உண்டால் = அவர்கள் உண்டானதால், அவர்கள் இருப்பதால்

அம்ம இவ்வுலகம் = இந்த உலகம் இருக்கிறது

இந்திரர் = இந்திரர் உலகத்து

அமிழ்தம் இயைவ தாயினும், = அமிழ்தமே கிடைப்பதாயினும்

இனிதுஎனத் = இனிமையானது என
தமியர் உண்டலும் இலரே; = தானாக உண்ண மாட்டார்கள் (மற்றவர்களோடு பகிர்ந்து உண்பார்கள்)

முனிவிலர்; = கோவம் இல்லாதவர்கள்

துஞ்சலும் இலர்; = சோம்பல் இல்லாதவர்கள்

பிறர் அஞ்சுவது அஞ்சிப் = பிறர் செய்ய அஞ்சும் பழி செயல்களுக்கு அஞ்சி

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; = புகழ் வரும் என்றால் உயிரும் தருவர்

பழியெனின் = பழி வரும் என்றால்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; = உலகமே கிடைத்தாலும் அதை செய்ய மாட்டார்கள்

அயர்விலர்; = சலிக்க மாட்டார்கள்

அன்ன மாட்சி = அத்தகைய பெருமைகளை

அனைய ராகித் = உடையவரகளாகி

தமக்கென முயலா நோன்தாள் = தனக்கு என்று முயற்சி செய்யாமல்

பிறர்க்கென முயலுநர் = பிறருக்காக முயற்சி செய்வார்கள் (உதவி செய்வார்கள்)

உண்மை யானே. = உண்மையானவர்கள்


1 comment:

  1. Very Good! Tamil literature is a treasure-trove!
    Unfortunately most of us don't read even simple lyrics!
    Then how can we become well versed in fluency?

    ReplyDelete