Tuesday, June 26, 2012

கந்தர் அலங்காரம் - முருகன் என்ற இராவுத்தன்


கந்தர் அலங்காரம் - முருகன் என்ற இராவுத்தன்


முருகன் இந்துவா ? முஸ்லிமா ?

அருணகிரியார் முருகனை இராவுத்தனே என்று அழைக்கிறார் இந்த பாடலில்.

இராவுத்தன் என்றால் முஸ்லிம்தானே? முருகன் எப்படி முஸ்லிம் ஆனான்?

இராவுத்தன் என்றால் குதிரை விற்பவன்.

மாணிக்க வாசகருக்காக சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி பாண்டிய மன்னனிடம் விற்றார்.

அப்படிப்பட்ட சிவனின் மகன் தானே முருகன். எனவே அவனும் ஒரு இராவுத்தன் தான்.


படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை
இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே.

சீர் பிரிக்காமல் அருணகிரியை படிப்பது கடினம்:

படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினால்
பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் பெரும் பாம்பில் நின்று
நடிக்கும் பிரான் மருகா கொடும் சூரன் நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனி மயில் ஏறும் ராவுத்தனே


படிக்கும்திருப்புகழ் = எல்லோரும் படிக்கும், எப்போதும் படிக்கும் திருப்புகழ்

போற்றுவன் = நான் போற்றுவேன்

கூற்றவன் = கூற்றவன், எமன்

பாசத்தினால் = பாசக் கயிற்றினால்

பிடிக்கும் பொழுது = என்னை பிடிக்கும் போது

வந்து = என் முன் வந்து

அஞ்சல் என்பாய் = பயப்படாதே என்று சொல்வாய்

பெரும் பாம்பில் = காளிங்கன் என்ற பெரிய பாம்பின் மேல்

நின்று = நின்று

நடிக்கும் = ஆடும்

பிரான் = என்றும் பிரியாதவனான திருமாலின்

மருகா = மருமகனே

கொடும் சூரன் = கொடிய சூரன்

நடுங்க = நடுங்க

வெற்பை = மலையை

இடிக்கும் = இடித்து தள்ளிய

கலாபத் தனி மயில் = அழகிய மயிலின் மேல்

ஏறும் ராவுத்தனே = ஏறும் ராவுத்தனே


2 comments:

  1. படிக்கும்திருப்புகழ் = எல்லோரும் படிக்கும், எப்போதும் படிக்கும் திருப்புகழ் என்று அர்த்தமா? இல்லை படிக்கும் திருப்புகழ் வினைத்தொகையா ?

    ReplyDelete
    Replies
    1. படித்த திருப்புகழ்
      படிக்கும் திருப்புகழ்
      படிக்கப் போகும் திருப்புகழ் என்று வரும், அதை வினைத்தொகை என்று கொண்டால்.
      அவ்வளவாக சரியாக இல்லை என்று தோன்றுகிறது

      Delete