Friday, July 6, 2012

கம்ப இராமாயணம் - யாரும் மறக்க முடியாத பெயர்


கம்ப இராமாயணம் - யாரும் மறக்க முடியாத பெயர்


இராமன் என்று ஒருவன் இருந்தானா இல்லையா என்று ஒரு சந்தேகம் எழலாம்.

இராமாயணம் என்று ஒன்று நடந்ததா என்று கூட சந்தேகம் எழுப்பப் படலாம்.

ஆயிரம் சந்தேகம் இருந்தாலும், இராம நாமம் என்ற ஒன்று என்றென்றும் மக்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

அதை இன்றல்ல, கம்ப இராமாயணம் எழுதும்போதே கம்பர் சொல்கிறார் "யாராலும் மறக்கிலா நாமம்" என்று.

மும்மை சால் உலகுக்கெலாம் மூல மந்திரம் அது. 

இராமன் கானகம் போகிறான். 

"ஆ" அழுதன, அன்றலர்ந்த "பூ" அழுதன என்று ஊரே சோகத்தில் ஆழ்ந்த காட்சியை காட்ட வந்த கம்பன் சொல்லுவான்....

அயோத்தி அரண்மனையில் இருந்த யானைகளும், "இனி நாமும் இந்த மண்ணை விட்டு செல்வோம்" என்று கிளம்பின.

சேமம் என்பன பற்றி, அன்பு திருந்த  இன் துயில் செய்தபின்,
‘வாம மேகலை மங்கையொடு வனத்துள்,  யாரும் மறக்கிலா
நாம நம்பி, நடக்கும்’ என்று  நடுங்குகின்ற மனத்தவாய்,
‘யாமும் இம் மண் இறத்தும்’  என்பனபோல் எழுந்தன - யானையே.


சேமம் என்பன பற்றி = சேமம் என்றால் நலம். (க்ஷேமம்?). 

அன்பு திருந்த  இன் துயில் செய்தபின் = தங்கள் துணையோடு அன்போடு இனிய துயிலுக்குப் பின்னால்

வாம = அழகிய

மேகலை மங்கையொடு = மேகலை அணிந்த மங்கையான சீதையோடு

வனத்துள், = கானகத்தினுள்

யாரும் = யாராலும்

மறக்கிலா = மறக்க முடியாத

நாம நம்பி, நடக்கும்’ = நாமத்தை கொண்ட இராமன் நடந்து செல்வான்

என்று = என்று

நடுங்குகின்ற மனத்தவாய், = நடுங்கும் மனத்தோடு

‘யாமும் இம் மண் இறத்தும்’  = நாமும் இந்த நகரை விட்டு செல்வோம்

என்பனபோல் எழுந்தன - யானையே. = யானைகள் எழுந்தன


No comments:

Post a Comment