Saturday, July 14, 2012

திருவாசகம் - மாணிக்க வாசகரின் கவி நயம்


திருவாசகம் - மாணிக்க வாசகரின் கவி நயம்


இறைவா, நான் மோசமானவன் தான். ஆனால், அதற்காக நீ என்னை கைவிட்டு விட்டால், நான் உன்னை பற்றி எல்லா உண்மையும் சொல்லி விடுவேன்....நீ யார் தெரியுமா ?

எல்லோரும் அமுதினை உண்டபோது, நீ நஞ்சை உண்டாய்...இது புத்திசாலித்தனமா?

உடம்பு எல்லாம் அழகாக இருந்தாலும், உன் கழுத்து மட்டும் கருப்பா இருக்கே...இது ஒரு அழகா?

உனக்கு என்று ஒரு குணமும் கிடையாது...நீ ஒரு குணம் கெட்டவன்...

நீ ஒரு மானிடன்...

உன் தலையில் உள்ள நிலவோ தேய் பிறை

நீ ரொம்ப பழமையானவன்

என்று எல்லோரிடமும் உன்னை பற்றி பழி சொல்லுவேன்...

அப்படி எல்லாம் சொல்லாம இருக்கணும்னா, நீ என்னை கை விடாமல் காப்பாற்று"

என்று மணி வாசகர் கூறுகிறார். 


அந்த திருவாசகப் பாடல்....
உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்
    தீயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண் டாய்விடின்
    வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன்
    தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென் றறைவன்
    பழிப்பினையே.

பொருள்


உழைதரு = பெண் மானை போன்ற

நோக்கியர் = பார்வையை உடைய பெண்களின்

கொங்கைப் = அங்கங்களை

பலாப்பழத் = பலா பழத்தினை மொய்க்கும்

தீயினொப்பாய் = ஈயினைபோல் 

விழைதரு வேனை = இருக்கும் என்னை

விடுதிகண் டாய்விடின் = விட எண்ணம்  கொண்டு என்னை விட்டு விட்டால்

வேலைநஞ்சுண் = நீ அமுதை விட்டு, நஞ்சை உண்டதை

மழைதரு கண்டன் = மழை தரும் மேகம் போன்ற கரிய உன் கழுத்தை

குணமிலி = குணம் ஒன்றும் இல்லாத உன் இயல்பை

மானிடன் = மனிதர்களுள் ஒன்றான நீ

தேய்மதியன் = தேய்கின்ற மதியை தலையில் உள்ளவன் நீ

பழைதரு மாபரன் = மிகப் பழமையானவன்

என்றென் றறைவன் = என்று அறைவன், என்று சொல்லுவேன்

பழிப்பினையே. = உன்மேல் உள்ள பழிகளை 

இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம்:

வேலைநஞ்சுண் = நீ அமுதை உன் அடியார்களுக்கு தந்து, நஞ்சை நீ உண்டு அவர்களை காப்பாற்றினாய். அவர்களின் பாவங்களை நீ எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு நல்லதை வழங்கினாய்.

மழைதரு கண்டன் = மழை தரும் மேகம் போன்ற கரிய உன் கழுத்தை. 

குணமிலி = குணம் ஒன்றும் இல்லாதவன் நீ. எல்லா குணங்களையும் கடந்தவன் நீ.

மானிடன் = மனிதர்களுள் ஒன்றான நீ. அடியவர்களுக்கு அடியவனாக, 
அவர்களோடு ஒன்றாகி இருந்தவன் நீ.

தேய்மதியன் = தேய்கின்ற மதியை தலையில் உள்ளவன் நீ. சாபத்தால் தேய்ந்து ஓர் உருவமும் இன்றி போக இருந்த சந்திரனை உன் தலையில் சூடி, அவனுக்கு மறு வாழ்வு தந்தவன் நீ.

பழைதரு மாபரன் = மிகப் பழமையானவன். ஆதியும் அந்தமும் இல்லாதவன் நீ

என்றென் றறைவன் = என்று அறைவன், என்று சொல்லுவேன்

பழிப்பினையே. = உன்மேல் உள்ள பழிகளை 

இது மணி வாசகரின் கவித்திறமை.



No comments:

Post a Comment