Sunday, July 29, 2012

கம்ப இராமாயணம் - கண்ணீர் கடல்


கம்ப இராமாயணம் - கண்ணீர் கடல் 


அசோக வனத்தில் சீதை சோகமே உருவாக இருக்கிறாள்.

அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருக்கிறது. 

அந்த கண்ணீர் கடல் போல் தேங்கி கிடக்கிறது.

அந்த கண்ணீர் கடலில், நீர் சுழல் வருகிறது. அந்த சுழலில் கிடந்து சுழன்று கரை காண முடியாமல் தவிக்கிறாள்.

அப்போது, அவளை அனுமன் சந்திக்கிறான். 

அனுமனுக்கும் சீதைக்கும் நடக்கும் உரையாடல் மிக மிக அருமையான இடம் கம்ப இராமாயணத்தில். 

அனுமனும் சீதையும் அதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கிடையாது.

இருவர் மனத்திலும் சந்தேகம் இழையோடுகிறது...அது சீதை தானா என்று அனுமன் மனத்திலும், இவன் இராமனின் தூதுவந்தானா என்று சீதையின் மனத்திலும் சந்தேகம் இல்லாமல் இல்லை.

அதே சமயம், அது சீதையாக இருக்க வேண்டும் என்று அனுமனும், இவன் இராம தூதுவனாக இருக்க வேண்டும் என்று சீதையின் மனத்திலும் ஒரு ஆதங்கமும் இருக்கிறது.

இப்படி சந்தேகத்திருக்கும் நம்பிக்கைக்கும் இடையே அவர்கள் உரையாடல் தொடர்கிறது.
படித்து இரசிக்க வேண்டிய இடம்.....

சீதை கேட்கிறாள், "இந்த கடல் ரொம்ப பெரியதாயிற்றே, நீ எப்படி அதை தாண்டி வந்தாய்" என்று.....

நையுறுசிந்தையள், நயன வாரியின்
தொய்யல் வெஞ்சுழியிடைச் சுழிக்கும் மேனியள்,
'ஐய ! நீஅளப்ப அரும் அளக்கர் நீந்தினை
எய்தியது எப்பரிசு ? இயம்புவாய் !' என்றாள்.


நையுறுசிந்தையள், = நைந்த மனத்தை உடைய சீதை

நயன வாரியின்  = கண்ணில் இருந்து வழிந்த நீர் பெருக்கில்

தொய்யல் = தளர்ந்து

வெஞ்சுழியிடைச் = விழைந்த நீர்  சுழலில்

சுழிக்கும் மேனியள், = உடல் கிடந்து சுழன்று கொண்டு இருக்கும் போது

ஐய ! = ஐயனே

நீ = நீ

அளப்ப அரும் = அளக்க முடியாத

அளக்கர் நீந்தினை = கடலை நீந்தினாய் 

எய்தியது எப்பரிசு ? = எப்படி இதை செய்தாய்

இயம்புவாய் !' என்றாள். = எனக்கு சொல்லு என்று கேட்டாள்

(அளக்கர் = கடல், 
தொய்யல் = சோர்வு, தளர்வு 
வாரி = பெருக்குதல்)


5 comments:

  1. தினம் ஒன்றாக அனுமன், சீதை நடுவே நடந்த உரையாடல் எல்லாவற்றையும் முடிந்தால் எழுதுங்களேன் .

    ReplyDelete
  2. இந்த உரையாடல்களில் ஒரு பாடலில் வரும் வரி ‘இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என்ற வரத்தை ராமன் சீதையிடம் கொடுத்துள்ளான். அதை ஞாபகப்படுத்து என்று சீதை அனுமனிடம் கூறுகிறாள்.

    இதற்கு சாதாரண அர்த்தம் தெரிந்தது தான். வேறொரு பெண்ணை மனதாலும் தொடமாட்டேன் என்பது ராமனுக்கு போதிய அழகல்ல. ‘அவர் திருடவே மாட்டார்’ என்று நம்மை ஒருவர் அறிமுகப்படுத்தினால் அது நமக்கு பாராட்டா? அது போல இதற்கு சரியான அர்த்தம் என்னவென்றால் ஸ்ரீமன் நாராயணனுக்கு ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி என்று மூன்று பிராட்டிகள். இந்த ராமாவதாரத்தில் ஸ்ரீ தேவிதான் சீதை. எனவே இப்பிறவிக்கு அந்த இருமாதரான பூதேவி, நீளாதேவியை சிந்தையாலும் தொடேன் என்பதுதான் ஸ்ரீ ராமனின் வரத்தின் உண்மையான அர்த்தம். இதை வழங்கியவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள். அவருடைய ராமாயண இன்பம் என்ற 2 பகுதி புத்தகமும், உபன்யாசமும் தெள்ளமுதாகும்.

    ReplyDelete
  3. இந்த பாடலில் "கடல்" என்பது இரண்டு பொருள் கொண்டு வருவது சுவையானது. நன்றி.

    ReplyDelete
  4. Thanks for introducing many Tamil Poems.Your introduction helps a lot to understand the poem much better.

    ReplyDelete