Thursday, July 5, 2012

கம்ப இராமாயணம் - சிறை இருந்த சீதை


கம்ப இராமாயணம் - சிறை இருந்த சீதை


அசோக வனத்தில் சீதை இருந்த நிலையை கம்பன் காட்டுகிறான்.

கல்லையும் கரைக்கும் கவிதைகள் அவை. 

படித்துப் பாருங்கள். நாம் பட்ட அல்லது படும் துன்பங்கள் தூசு என்று உணர்வீர்கள்.


துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும்  துறந்தாள்;
வெயிலிடைத்தந்த விளக்கு என ஒளி இலா  மெய்யாள்;
மயில் இயல்,குயில் மழலையாள், மான் இளம் பேடை
அயில் எயிற்றுவெம் புலிக் குழாத்து  அகப்பட்டதன்னாள்.

கருத்து: 

தூக்கம் இழந்த கண்கள். ஒளி இழந்த உடல். புலிக் கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட மான் போல் சீதை அரக்கியர் மத்தியில் இருந்தாள்.

அருஞ்சொற் பொருள்:

துயில் எனக் = தூக்கம் என்று ஒன்று இருப்பதை

கண்கள் = அவளுடைய கண்கள்

இமைத்தலும் = மூடுதலும்

முகிழ்த்தலும் = மலர்வதும் (திறப்பதும்)

துறந்தாள்; = துறந்து விட்டாள். 

வெயிலிடைத் = சூரிய ஒளியில்

தந்த விளக்கு என = ஏற்றி வைத்த விளக்கு என

ஒளி இலா  மெய்யாள்; = ஒளி இழந்த மேனியள்

மயில் இயல், = மயிலின் இயல்பையும் (சாயலையும்)

குயில் மழலையாள், = குயில் போன்ற மழலை மொழி பேசுபவளும்

 மான் இளம் பேடை = பெண் மான்

அயில் = கூரிய

எயிற்று = பற்களை உடைய

வெம் புலிக் = வெம்மையான புலியின்

குழாத்து = கூட்டத்தில்

அகப்பட்டதன்னாள். = அகப்பட்டு கொண்ட மாதிரி இருந்தாள்

விளக்க உரை: 

சீதை அசோக வனத்தில் இருந்த போது உறங்கவே இல்லை.

அது எப்படி முடியும் ? உறங்காமல் யாராலும் இருக்க முடியுமா என்று ஒரு கேள்வி எழலாம் அல்லவா?

நீங்கள் உங்கள் உறவினர் அல்லது நண்பர் வீட்டிற்கு போய் இருக்கீர்கள். 

நல்ல உணவு. சிறந்த உபசரிப்பு. இரவு வந்து விட்டது.

உங்கள் நண்பர் உங்களுக்கு ஒரு அறை ஒதுக்கி, "இங்கே படுத்து கொள்ளுங்கள்...நன்றாக காற்று வரும்" என்று சொல்லி செல்கிறார்.

பிராயன களைப்பு, உண்ட மயக்கம், சிலு சிலு என்று காற்று. தூக்கம் கண்ணை சுழற்றி கொண்டு வருகிறது.

அப்போது உங்கள் நண்பர் "...அப்புறம் சொல்ல மறந்துட்டேன், இரவு ஒரு பன்னிரண்டு மணி வாக்கில், ஒரு ஆறடி நல்ல பாம்பு இப்படி இந்த ஜன்னல் வழியா வந்து அந்த கதவு வழியா போயிரும். உங்கள ஒண்ணும் பண்ணாது. நீங்க பாட்டுக்கு நிம்மதியா தூங்குங்க" என்று சொல்லிவிட்டு போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்....அதன் பின் உங்களுக்கு தூக்கம் வருமா ?

இராவணன் என்ற கரு நாகம் எப்ப வேண்டுமானாலும் வரும் என்ற நினைவோடு இருக்கும் ஜானகிக்கு எப்படி தூக்கம் வரும்?



No comments:

Post a Comment