Tuesday, July 3, 2012

கந்தர் அநுபூதி - இழந்து பெற்ற இன்பம்


கந்தர் அநுபூதி - இழந்து பெற்ற இன்பம்


நமக்கு செல்வம், பொருள், உறவு இது எல்லாம் சேர சேர இன்பம் பெருகும்.
அல்லது, நாம் அப்படி நினைப்போம்.

ஆனால், அருணகிரி நாதரோ, எல்லாம் இழந்து, தன்னையும் இழந்தபின்னும் நலம் பெற்றதாய் கந்தர் அனுபூதியில் சொல்கிறார்.

இழப்பதில் ஒரு சுகமா ?

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

என்பார் வள்ளுவர். எதில் இருந்து எல்லாம் மனிதன் நீங்கி நிற்கிறானோ, அதனால் அவனுக்கு துன்பம் வராது என்கிறார்.

பற்று குறைய குறைய துன்பம் குறையும்.

துன்பம் குறைய குறைய இன்பம் நிறையும்.

எல்லாம் இழந்த பின் என்ன இருக்கும் ? "நான்" என்ற ஒன்று இருக்கும்.
அதையும் இழந்து விட்டால் ? எவ்வளவு இன்பம் இருக்கும் ?

கந்தர் அனுபூதியில் உள்ள மிகச் சிறந்த பாடல் என்று கீழ் வரும் பாடலை சொல்லுவார்கள்.





உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீயலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே


உல்லாச = எப்போதும் மாறுபாடு இல்லாத

நிராகுல = துன்பம் இல்லாத

யோக விதச் = யோக நிலையில் உள்ள

சல்லாப = பக்தர்களிடம் பேசக் கூடிய

விநோதனும் = என்றும் புதுமையானவனும்

நீயலையோ = நீ (முருகா) அல்லவா

எல்லாம் அற = அனைத்து வித பற்றுகளும் அற்றுப் போக

என்னை இழந்த நலம் = என்னையும் இழந்த நலம்

சொல்லாய் = சொல்லுவாய்

முருகா = முருகா

சுர பூபதியே = தேவர்களின் அதிபதியே (சுர, இதன் எதிர்மறை அசுரர்)

"அற்றது பற்றெனில் ,  உற்றது வீடு" என்பது ஆன்றோர் வாக்கு.

No comments:

Post a Comment