Tuesday, July 3, 2012

திருக்குறள் - நிலையாச் செல்வம்


திருக்குறள்- நிலையாச் செல்வம்




செல்வம் நிலையானது அல்ல. அது வரும், இருக்கும், போகும்.




அது பற்றி ரொம்பவும் கவலைப் படக் கூடாது.




மேலும், செல்வம் இருக்கும் போது அதை நல்ல வழிகளில் செலவிட வேண்டும்.




இதை கீழ் காணும் குறளில் சொல்கிறார் வள்ளுவர். மிக மிக ஆழமான, அருமையான குறள்.




கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் மதுவிளிந் தற்று.

சீர் பிரித்த பின்:

கூத்தாட்ட அவை குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அது விளிந்த அற்று

பொருள்:

கூத்தாட்ட அவை = கூத்தாடும் அவை, நாடகக் கொட்டகை, சினிமா தியேட்டர்

குழாத்து அற்றே = கூட்டம் போல்

பெருஞ்செல்வம் = பெரிய செல்வம்

போக்கும் = அது போவதும்

அது விளிந்த அற்று = அந்த கூட்டம் போவது போல்

மேலோட்டமான பொருள் என்னவென்றால், கூத்தாடும் அவையில்(நாடக கொட்டகைக்கு) உள்ள கூட்டம் போல் செல்வம். அது போவதும் அப்படியே.

இதில் என்ன நயம் என்று கேட்கிறீர்களா ?

முதலாவது - செல்வம் அழியும். சரி.

ஏதோ கொஞ்சம் இருந்தால் அது செலவழிந்து விடலாம், திருடு போய் விடலாம், வீடு வாங்கி வைத்து இருந்தால், வெள்ளம் பூகம்பம் இதில் அந்த வீடு சேதம் அடையலாம்....

ஆனால் கோடிகணக்கில் செல்வம் இருந்தால், அதுவும் அழியுமா என்றால்...ஆம், "பெருஞ்செல்வம்" கூட அழியும் அல்லது கை விட்டு போய் விடும் என்கிறார் வள்ளுவர்.

சரி, பெரும் செல்வம் என்றால் எவ்வளவு ? நூறு கோடி ? ஆயிரம் கோடி ?

எவ்வளவு இருந்தால் பெரும் செல்வம் ? அதற்கு ஒரு உதாரணம் தருகிறார்

வள்ளுவர். "கூத்தாட்ட அவை குழாம்". நாடக அல்லது சினிமா கொட்டகைக்கு வரும் கூட்டம் போல என்கிறார். அதில் என்ன சிறப்பு ?

சினிமா தியேட்டருக்கு வரும் கூட்டம், படம் ஆரம்பிக்கும் முன்னால்.  கொஞ்சம் கொஞ்சமாய் வரும். படம் முடிந்தவுடன் மொத்தமாய் போய் விடும். அது போல், செல்வம் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாய் வரும். போகும் போது மொத்தமாய் போய் விடும்.

மேலும், சினிமா தியேட்டருக்கு வரும் கூட்டத்திற்கு, வரும் போது ஒரு ஆவல் இருக்கும், படத்தை பார்க்கும் போது ஒரு சுவை இருக்கும், படம் முடிந்து போகும் போது, ஒரு சோர்வு இருக்கும், அது நல்ல படமாய் இருந்தால் கூட. அது போல், செல்வம் வரும்போது ஒரு சுகம், அதை அனுபவிக்கும் போது ஒரு சுகம்...அது விட்டு போகும் போது ஒரு சோர்வு இருக்கும்.

வள்ளுவர், கூத்தாட்ட அவை என்று தான் சொன்னார். அது அங்கு உள்ள மக்களை மட்டும் அல்ல, அங்குள்ள நடிகர்கள், அந்த மேடை அலங்காரம், வேடம் என்று எல்லாவற்றையும் குறிக்கும். நாடக மேடையில் எல்லாமே பொய் தானே. கதா பாத்திரங்களும், வேடங்களும், மேடை அமைப்பும் எல்லாமே உண்மை போல் தெரியும், ஆனால் உண்மை அல்ல. அது போல் செல்வமும், வீடும், நகையும், எல்லாம் உண்மை போல் தெரிந்தாலும், உண்மை அல்ல.

ஏழே ஏழு வார்த்தை. எவ்வளவு அர்த்தம்.


1 comment:

  1. நிலையாமையை எவ்வளவு இலக்கியங்கள் எடுத்து சொன்னாலும் பெரிய படித்தவர்களால் கூட பல சமயம் புரிந்து கொள்ள முடியாமல் போவது அதிசயம் தான்.

    ReplyDelete