Wednesday, August 1, 2012

கம்ப இராமாயணம் - கூனி அறிமுகம்


கம்ப இராமாயணம் - கூனி அறிமுகம்


முதன் முதலில் கூனி அறிமுகம் ஆகும் இடம்.

அவள் எப்படி தோன்றினாள் ?

இன்னல் செய்யும் இராவணன் இழைத்த தீமை போல் அவள் தோன்றினாள் என்பான் கம்பன்.

இராவணன் என்ற பாத்திரம் அவள் கூனி தோன்றும் இந்த இடம் வரை காப்பியத்தில் அறிமுகபடுத்த படவில்லை.

நேரடியாக சொல்லாவிட்டாலும், கம்பன் ஏதோ சூசகமாக சொல்வதாகப் படுகிறது. 

அவன் செய்த தீமைகளுக்கு இணையாக இன்னொரு தீமை புறப்பட்டு விட்டது என்பது போல் ஒரு அர்த்தம் தொனிக்கிறது.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல், தீமையை தீமையால் எடுக்க கம்பன் ஒரு அச்சாரம் தருவது போல இருக்கிறது.

அவள் எவ்வளவு கொடுமைக்காரி  என்பதை நினைத்துக் கூட பார்க்க 
முடியாதாம்...அவளளவு கொடுமைகளை மனத்தில் கொண்டவள்...


அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்
பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்,
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்,
துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள்.



அந் நகர் = அந்த அயோத்தி மாநகர்

அணிவுறும் = அலங்கரிகப் பட்டு

அமலை = சந்தோஷத்தில், ஆர்வத்தில்

வானவர் = தேவர்கள் (வாழும்)

பொன்னகர் இயல்பு எனப் பொலியும் = பொன்னாலான அமராவதி பட்டணம் போல் பொலியும்

ஏல்வையில், = நேரத்தில், பொழுதில், வேளையில்

இன்னல் செய் = துன்பம் செய்கின்ற

இராவணன் = இராவணன்

இழைத்த தீமைபோல்  = செய்த தீமை போல்

துன்ன அருங் = நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு (உன்னுதல் = நினைத்துப் பார்த்தல். "உன்னலே தியானம்" என்பது கந்த புராணம்)

கொடு மனக் = கொடிய மனம் கொண்ட

கூனி தோன்றினாள். = கூனி என்பவள் தோன்றினாள்


அவள் எப்படி கைகேயின் மனத்தை மாற்றினாள் என்று பின்னால் வரும் ப்ளாகுகளில் பார்ப்போம்...



2 comments:

  1. ராவணன் சீதை சுயம்வரத்திற்கு வந்ததாக வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. கம்ப ராமாயணத்தில் அப்படி இல்லையா?
    ராவணனும், கூனியும் தான் ராமாயண கதைக்கே முக்கிய காரணம். இல்லாவிடில் ராமன் சீதை, கல்யாணம், நல்ல ஆட்சி, என்று ரொம்ப சிம்பிளாக கதை முடிந்து விடும். அவர்கள் இருவரையுமே COMPARE செய்து எழுதியது ரசிக்க தகுந்ததாக உள்ளது

    ReplyDelete
  2. ஒரு அற்புதமான தனிப்பாடல் – கிருஷ்ணன் செய்த லீலைகளெல்லாம் வாயினால்; ஆனால் அவனை ‘கண்ணன்’ என்று அழைக்கிறோம் என்ற அர்த்தத்தில்

    ராகம்: காபி
    ப: கண்ணன் என்றே அழைப்பார் – வாயனை
    வெண்ணையோடு வாய்மணக்கும் செம்பவள வாயனை

    அ.ப. பூதகி தன் பாலுடனே உயிருண்ட வாயனை
    புவனங்கள் தாய் திகைக்க காட்டி நின்ற வாயனை

    ப: ஊதுகுழல் ஆவினத்தை மேய்த்த திரு வாயனை
    ராதையினை கட்டி முத்தம் தந்த திரு வாயனை
    தூதனாக துரியனிடன் சென்ற திரு வாயனை
    வேத கீதை விசயனுக்கு விண்ட திரு வாயனை

    ReplyDelete