Tuesday, August 28, 2012

தனிப்பாடல் - வறுமையின் கொடுமை


தனிப்பாடல் - வறுமையின் கொடுமை


குமண வள்ளலை பற்றிய பாடல்.

 குமணன் ஒரு நாட்டின் அரசன். சிறந்த தமிழ் பற்று உள்ளவன். கொடை வள்ளல். 

குமணனின் தம்பி குமணனை நாட்டை விட்டே துரத்தி விட்டான். 

நாடில்லாமல், கையில் காசில்லாமல், காட்டில் மறைந்து வாழ்கிறான் குமணன்.

குமணனின் தலையை கொண்டு வருவோர்க்கு பரிசு தருவதாக அறிவித்து இருக்கிறான் பாசாக்கார தம்பி. 

இந்த நிலைமையில், வறுமையால் வாடும் புலவன் குமணனிடம் வருகிறான். 

என்வீட்டு அடுப்பில் நெருப்புக்கு பதில் ஆம்பல் பூ பூத்து இருக்கிறது. 

என் கை குழந்தை, என் மனைவியின் பால் இல்லாத மார்பை முட்டி முட்டி பசி போகாமல் அவளுடைய முகத்தைப் பார்கிறது.

அவள் என்னை பார்க்கிறாள்.

நான் உன்னை பார்க்க வந்தேன் என்கிறான். 

எவ்வளவு வறுமை. எவ்வளவு அன்யோன்யம் ஒரு புலவனுக்கு அரசனிடம். 

பசியால் அழும் குழந்தை. 

அதற்கு பால் தர முடியாமல் தவிக்கும் தாய்

கையாலாகாத புலவனாகிய தந்தை

அவனுக்கு உதவ முடியாத நிலையில் அரசனான குமணன்...

குமணன் எப்படியாவது தனக்கு உதவுவான் என்ற நம்பிக்கை ஊடாடும் அந்தப் பாடல் 


ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில்
ஆம்பி பூப்பத் தீம்பசி உழல
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைதொறும் சுவை தொறும் பால் காணாமல்
குழவி தாய் முகம் நோக்க யாமும்
நின் முகம் நோக்கி வந்தனம் குமணா


ஆடெரி = ஆடுகின்ற எரி (தீ)
படர்ந்த = பரந்து, விரிந்து எரியும்
கோடுயர் அடுப்பில் = கோட்டை அடுப்பில்
ஆம்பி பூப்ப = ஆம்பல் பூக்க (காளான்?)
தீம்பசி உழல = நாங்கள் பசியால் உழல
இல்லி தூர்ந்த = இல்லாமல் வறண்ட
பொல்லா வறுமுலை = பொல்லாத வறுமையால் தளர்ந்த தாயின் முலையை
சுவைதொறும் சுவை தொறும் = மீண்டும் மீண்டும் சுவைத்து
பால் காணாமல் = பால் எதுவும் வாராமல்
குழவி தாய் முகம் நோக்க = என் குழந்தை அதன் தாயின் முகத்தை நோக்க
யாமும் = நானும்
நின் முகம் நோக்கி = உன்னுடைய (அருள்) முகத்தை நோக்கி
வந்தனம் குமணா = வந்தேன் குமணா



1 comment:

  1. ஆஹா... என்ன உருக்கமான பாடல்!

    அந்தப் புலவருக்குத் தன் தலையையே குமணன் கொடுத்ததாகப் படித்த நினைவு. அது சரியா? அதற்கு ஏதாவது பாட்டு உண்டா?

    ReplyDelete