Wednesday, August 15, 2012

அபிராமி அந்தாதி - துடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம்


அபிராமி அந்தாதி - துடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம்


நம் நெஞ்சம்தான் எத்தனை அழுக்குகளை கொண்டு இருக்கிறது. ஆணவம், பொறாமை, பயம், அறியாமை என்று எத்தனை எத்தனையோ அழுக்கு. 

பிள்ளைகள் அழுக்காய் இருந்தால் எந்த தாய் தான் பொறுப்பாள் ? தன குழந்தை குளித்து சுத்தமாக அழகாக இருக்க வேண்டும் என்று தானே எந்த தாயும் விரும்புவாள். 

அபிராமியும், நம் நெஞ்சத்து அழுக்கை எல்லாம் தன் அருள் என்ற வெள்ளத்தால் கழுவி சுத்தம் செய்கிறாள்.

பிரபஞ்சம் என்னும் சேற்றை கழிய வழி விட்டவா என்பார் அருணகிரி 

இந்த பிறவி, பாவ புண்ணியம் என்ற இரு வினையால் மீண்டும் மீண்டும் நாம் அறியாமலேயே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. தெரியாமலேயே நடப்பதால், இது "வஞ்சப் பிறவி". அபிராமி இந்த பிறவி சக்கரத்தை உடைக்கிறாள்.

நம் மனம் கல் போன்றது. எளிதில் இளகாது. மற்றவர்கள் துன்பத்தை கண்டு உருகுகின்றதா? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுகிறதா ? இல்லையே. 

பிறர் துன்பம் கண்டு உருகும் இளகிய மனதை அபிராமி தருகிறாள்.  அவள் திருவடி நம் மனதில் படிய வேண்டுமானால், மனம் கல் போல இருந்தால் எப்படி முடியும். வைரத்தை தங்கத்தில் பொருத்த வேண்டுமானால், தங்கத்தை கொஞ்சம் இளக்க வேண்டும். உருகிய தங்கத்தில்தான் வைரத்தை பதிக்க முடியும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரி

வஞ்சப் பிறவியை உடைத்து, நெகிழ்ந்து உருகும் மனதை கொடுத்து, அந்த மனதில் உள்ள அழுக்கை எல்லாம் தன் அருளால் கழுவிய அவளின் கருணையை என்ன என்று சொல்லுவது


உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி!  நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

உடைத்தனை வஞ்சப் பிறவியை; = வஞ்சமான இந்தப் பிறவியை உடைத்தாய்

உள்ளம் உருகும் அன்பு படைத்தனை; = உள்ளம் உருகும் வண்ணம் என் மேல் அன்பு செலுத்தினாய்

பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை;= தாமரை போன்ற அவளின் திருவடிகளை தலையில் சூடும் பணியை எனக்கே தந்தாய்

நெஞ்சத்து அழுக்கை எல்லாம் = என் நெஞ்சத்து அழுக்கை எல்லாம் 

நின் அருள்புனலால் = உன்னுடைய அருள் என்ற வெள்ளத்தால் 

துடைத்தனை; = துடைத்தனை 


சுந்தரி! = அழகானவளே  

நின்னருள் = உன்னுடைய அருளை 

ஏதென்று சொல்லுவதே. = என்னவென்று சொல்லுவது 

2 comments:

  1. "சுந்தரி" என்று கூப்பிடுவது என்ன ஒரு அன்னியோன்னியமாக இருக்கிறது! ஆஹா!

    ReplyDelete