Monday, August 6, 2012

ஐங்குறுநூறு - அலையும், அலையும் மனதும்


ஐங்குறுநூறு - அலையும், அலையும் மனதும் 


இரவு நிசப்தமாக இருக்கிறது...குளிர்ந்த காற்று சிலு சிலுவென்று தலை கலைத்துப் போகிறது....தூரத்தில் கடல் அலையின் சப்தம்...

ஒருவேளை இந்த கடலுக்கும் என்னை போல் தூக்கம் வரவில்லையோ ? அந்த கடலின் இதயத்தையும் யாரவது கொண்டு போய் இருப்பார்களோ, என் இதயத்தை அவள் கொண்டு போன மாதிரி...


ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே!
வண்டு இமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல் ஒலித் திரை என
இரவில் நானும் துயில் அறியேனே



ஒண் தொடி = தொடி என்றால் வளையல். ஒண் என்றால் "தவம்" , "யோகம்" என்று அர்த்தம் தருகிறது நிகண்டு. தவம் செய்யும் வளையல் ?  தனித்த வளையல் ?

அரிவை = பெண்

கொண்டனள், நெஞ்சே! = என் மனதை கொண்டு சென்று விட்டாள்

வண்டு இமிர்  = வண்டு மொய்க்கும்

பனித்துறைத்  = குளிர்ந்த படித் துறைகளை கொண்ட

தொண்டி = தொண்டி என்ற ஊரில்

ஆங்கண் = அங்கு

உரவுக் கடல்  = உலவுகின்ற கடல்

ஒலித் திரை = சப்தம் உண்டாக்கும் அலை

என

இரவில் = இரவில்

 நானும் துயில் அறியேனே = அந்த கடலைப் போல நானும் தூக்கத்தை அறியவில்லை 

அலைக்கும் அலைக்கும் எனக்கும் தூக்கம் இல்லை....


1 comment: