Tuesday, August 7, 2012

நாலடியார் - அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்தவைகள்


நாலடியார் - அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்தவைகள்


அறியாத தெரியாத பருவத்தில் கண்டவர்களோடு சேர்ந்து நாம் சில நல்லது அல்லாத காரியங்களை செய்து இருக்கலாம்.

அந்த கெட்ட பழக்கங்கள் நம்மை விடாமல் தொடர்ந்தும் வரலாம். 

அவற்றில் இருந்து எப்படி விடு படுவது ?

எப்படி கெட்டவர்களோடு சேர்ந்த போது கெட்ட பழக்கம் வந்ததோ, அது போல் நல்லவர்களோடு சேர்ந்தால் நல்ல பழக்கம் தானே வரும்...அப்படி நல்ல பழக்கம் வரும்போது கெட்ட பழக்கங்கள் மறைந்து போகும்.

இரவில், புல்லின் மேல் பனி படர்ந்து இருக்கும். அதுவே காலையில் சூரியன் வந்தவுடன், மறைந்து போய் விடும். அது போல கெட்ட பழக்கங்கள் நல்லவர்கள் தொடர்பால் நீங்கி விடும். 



அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி
நெறி அல்ல செய்து ஒழுகி அவ்வும், நெறி அறிந்த
நல் சார்வு சாரக் கெடுமே வெயில் முறுகப்
புல் பனிப் பற்று விட்ட ஆங்

அறியாப் பருவத்து = அறியாத சிறிய வயதில்

அடங்காரோடு ஒன்றி = வீட்டுக்கும், ஊருக்கும் அடங்காதவர்களோடு சேர்ந்து

நெறி அல்ல செய்து = தவறான வழியில் சென்று 

ஒழுகி  = அந்த வழியிலேயே தொடர்ந்து

அவ்வும்  = அது

நெறி அறிந்த = நல்ல வழி, நெறி அறிந்த

நல் சார்வு சாரக் கெடுமே = நல்லவர்களோடு சேர, மறைந்து போகும். 

வெயில் முறுகப் = வெயில் ஏற ஏற

புல் பனிப் பற்று விட்ட ஆங் = புல்லானது பனியோடு கொண்ட பற்றை எப்படி விடுமோ அது போல. 

புல் பனியை விடாது. ஆனாலும், கதிரவனின் வெப்பத்தால் அந்த பனி ஆவியாகி அந்த புல்லை விட்டு போய் விடும், அது போல, கெட்ட பழக்கங்களை நாம் விடாவிட்டாலும், நல்லவர்களின் தொடர்பு அந்த கெட்ட பழக்கங்களை நம்மை விட்டு ஓடச் செய்யும்


( நெறி அல்லா நெறி பற்றி மணிவாசகர் சொன்னது 

நெறி அல்லா நெறி தன்னை நெறியாக நினைவேனை,
சிறு நெறிகள் சேராமே, திருஅருளே சேரும்வண்ணம்,
குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு
அறியும்வண்ணம் அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

- திருவாசகம்)


1 comment: