Sunday, September 23, 2012

நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை


நள வெண்பா - இசை கேட்டு உறங்கிய எருமை


எருமை.

மந்த புத்தி மகிஷம்.

வெயில் என்றாலும் விலகாது.

மழை வந்தாலும் மயங்காது.

என் வழி தனி வழி என்று அதன் வழி செல்லும்.

அவந்தி நாட்டில் அப்படி ஒரு எருமை. 

அதற்கு ஒரு நாள் ரொம்ப பசி. மாட்டிற்கும் யானைக்கும் உடல் எல்லாம் வயிறு தானே.

எதை தின்னலாம் என்று சுற்றிலும் பார்த்தது. எதிரிலே ஒரு குளம். அதிலே 
ஒரு குவளை மலர்.

அந்த மலரை பறித்து உண்ணலாம் என்று குளத்தில் இறங்கி மலரை வாயில் கவ்வியது.

அப்போது அந்த மலரில் இருந்த வண்டுகள் வெளியே தப்பி வந்து ரீங்காரமிட்டன.

அந்த இசையில் மயங்கி மலரை உண்ணாமல் விட்டது அந்த எருமை.

அப்படி எருமைக்குக் கூட இசை ஞானம் இருக்கும் ஊர் அவந்தி.

அந்த நாட்டின் தலைவன் இந்த மன்னன்...பெரிய யானையின் வலிமையையை கொண்டவன் இவன் என்று அவந்தி நாட்டின் மன்னனை தமயந்திக்கு அறிமுகப் படுத்துகிறாள் அவளுடைய தோழி...

பாடல் 

கம்ப இராமாயணம் - மின்னலோடு வருகின்ற மேகம்


கம்ப இராமாயணம் - மின்னலோடு வருகின்ற மேகம்


இராமன் கருமை நிறம். "மையோ, மரகதமோ, மழை முகிலோ" என்பான் கம்பன்.

சீதை மின்னல் போல் இருப்பாள். மின்னல் போல் இடை. மின்னல் போல் நிறம். மின்னல் போல் மெலிந்த வளைந்த உடல் அழகு.

இராமனும் சீதையும் நடந்து வரும் போது மேகத்தோடு சேர்ந்து மின்னல் வருவது போல் இருந்ததாம்....

பாடல்:

Thursday, September 20, 2012

தேவாரம் - மலரும் காதல்


தேவாரம் - மலரும் காதல் 


பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல் என்றெல்லாம் கேட்டு இருப்பீர்கள்...சில திரைப் படங்கள் கூட வந்து இருக்கின்றன.

இதற்கெல்லாம் முன்னோடி நாவுக்கரசர். 

அவள், அவனைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறாள். "அவன் பேரு என்னடி"என்று அவளுடைய நண்பிகளிடம் கேட்டு தெரிந்து கொள்கிறாள்.

"அவன் எப்படி இருப்பான், கருப்பா சிவப்பா, உயரமா, குள்ளமா" என்று அவனைப் பற்றி மேலும் விசாரிக்கிறாள்.

" அவன் இருக்கும் ஊரு, சொந்த ஊரு" எல்லாம் கேட்டு அறிந்து கொள்கிறாள்

கொஞ்சம் கொஞ்சமாய் அவன் மேல் காதல் வயப்படுகிறாள் 

அவள் சொந்த வீடே அவளுக்கு அந்நியமானது.

அப்பா அம்மா கூட யாரோ மூன்றாம் மனிதர்கள் போல நீங்கிப் போனார்கள்

அவளுடைய பழக்க வழக்கங்கள் மாறின. எந்நேரமும்  அவன் நினைப்பு தான். 

தன்னை தானே மறந்தாள்.

தன் பெயரையே மறந்தாள்

அவனுக்கே எல்லாம் என்று ஆனாள்

Monday, September 17, 2012

கம்ப இராமாயணம் - மலர் தூவும் மரங்கள்


கம்ப இராமாயணம் - மலர் தூவும் மரங்கள்


சீதை சித்ர கூடத்தில் நடந்து வருகிறாள்.

பசுமையான அடர்ந்த கானகம்.

ஈரம் நிறைந்த வழித்தடம்.

மாசில்லாத காற்று.

மரங்கள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன.

அந்த மலர்களில் வண்டுகள் தேன் எடுக்க வருகின்றன.

ஏற்கனவே பூவின் பாரம் தாங்காமல் வளைந்து நின்ற மரக் கிளைகள், வண்டும் அமர்ந்ததால் இன்னும் வளைந்தன.

தேன் எடுத்த பின், வண்டுகள் சட்டென்று பூவை விட்டு விலகுகின்றன.

அதனால், அந்த மரக் கிளைகள் பட்டென்று நிமிர்கின்றன.

அப்படி வேகமாக நிமிர்ந்ததால், அதில் உள்ள பூக்கள் கொஞ்சம் சிந்தின

அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கிறது என்றால்...

அந்த மரங்கள் சீதையை கண்டதும் அவள் பாதம் பணிந்து அவள் பாதத்தில் பூ தூவி வரவேற்றதை போல இருந்ததாம்....

அந்த கம்பனின் பாடல்...

  

Sunday, September 16, 2012

திருச்சந்த விருத்தம் - இறைவன் இருப்பிடம்


திருச்சந்த விருத்தம் - இறைவன் இருப்பிடம்


இறைவன் இத்தனையும் படைத்தான் என்றால் அவன் எங்கு இருந்து கொண்டு படைத்தான் ? அந்த இடம் அவனுக்கு முன்னாலேயே இருந்ததா ? அந்த இடத்தை யார் படைத்தது ? இதை எல்லாம் நாம் அறிந்து கொள்ள முடியுமா ? 

மனித அறிவின் எல்லைகளுக்கு அப்பால் சில விஷயங்கள் இருக்கின்றன என்கிறார் திருமழிசை பிரான்.

அவர் எழுதிய திரு சந்த விருத்தம் சந்த லயம் நிறைந்த பாடல்களை கொண்டது. 
 

Saturday, September 15, 2012

குற்றாலக் குறவஞ்சி - அவை அடக்கம்


குற்றாலக் குறவஞ்சி - அவை அடக்கம்


பூவோடு சேர்ந்த நாரும் மனம் பெரும் என்பார்கள்.

மாலை அழகாகத்தான் இருக்கிறது. அழகான பூக்கள், அதில் இருந்து வரும் மனம், அதன் நிறம் எல்லாம் அழகுதான். ஆனால் அதன் நடுவில் இருக்கும் நாருக்கு ஒரு மனமும் இல்லை, அழகும் இல்லை. இருந்தாலும் நாம் அந்த நாரை வெறுப்பது இல்லை. 

அது போல, என் பாடல்கள் நார் போல இருந்தாலும், அவை அந்த குற்றாலத்து உறையும் ஈசனைப் பற்றி பாடுவதால், அந்த ஈசன் மலராய் இருந்து, என் பாடல்களுக்கு மணம் சேர்க்கிறான் என்கிறார் திரிகூட ராசப்ப கவி ராயர்....

ஐங்குறு நூறு - Extra Marital Relationship


ஐங்குறு நூறு - Extra Marital Relationship


Extra marital relationship - இதற்கு தமிழ் என்ன என்று தெரியவில்லை. திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு என்று சொல்லலாமா ?

அவன் தன்னுடைய மனைவியை விட்டு விலகி வேறு ஒரு பெண்ணுடன் வாழுகிறான். ஒரு நாள், மனைவியை வழியில் எங்கோ பார்த்து விடுகிறான். அவர்கள் பேசுகிறார்கள். 

இந்த விஷயம் எப்படியோ அந்த "மற்ற" பெண்ணின் காதுக்கு சென்று விடுகிறது. அவளுக்குப் புரிந்து விட்டது. இனிமேல் அவன் அவளோடு இருக்க மாட்டான் , அவன் மனைவியை தேடி போய் விடுவான் என்று...அவளே சொல்லுகிறாள்...

கொக்கின் குஞ்சு, கூட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் லேசாக சப்தம் போடும். ஆனால் அந்த சப்தம் வயல் எல்லாம் கேட்கும். எல்லோரும் புரிந்து கொள்வார்கள் இந்த கொக்கு குஞ்சு இனிமேல் இந்த கூட்டில் இருக்காது என்று. அது போல் நீயும் போய் உன் மனைவியுடன் சந்தோஷமாய் இரு

பாடல் 

Thursday, September 13, 2012

கம்ப இராமாயணம் - உலக மாயை யாரால் விலகும்.


கம்ப இராமாயணம் - உலக மாயை யாரால் விலகும்.


இருட்டில் தெருவில் கிடக்கும் மாலை பாம்பு போலத் தெரியும்.
அது போல அஞ்ஞான இருட்டில் இருந்து நாம் காண்பது எல்லாம் வேறாகத் தெரியும்.

இந்த வேறாகத் தெரியும் மாயையை ஒருத்தரைப் பார்த்தால் விலகும்.

அவர் யாருன்னு கேட்டா, கையில் வில் ஏந்தி, இலங்கையில் சென்று சண்டை போட்டவர். 

அவரே  வேதங்களுக்கு எல்லாம் அந்தம் ஆனவர். வேதாந்தம் ஆனவர். 

Sunday, September 9, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணனுக்கு அஜீரணமா?


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணனுக்கு அஜீரணமா?


நாம சில நாள் கல்யாணம் போன்ற விழாக்களுக்கு சென்றால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டு அஜீரணத்தில் கஷ்டப் படுவோம்.

திருமால் ஏழு உலகங்களையும் ஒன்றாக உண்டார். 

அஜீரணம் வருமா இல்லையா ? எவ்வளவு மண்ணு, கல்லு, மலை, உப்புக் கடல்...அத்தனையும் உண்டால் வயறு என்ன ஆவது.

அந்த அஜீரணம் போகத்தான் மனிதனாக (கண்ணனாக) அவதாரம் எடுத்து, நிறைய வெண்ணையும் நெய்யும் உண்டானாம்.உண்டா யுலகேழ் முன்னமே, உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ? மாயோனே

கொஞ்சம் சீர் பிரிப்போம் 

உண்டாய் உலகம் ஏழும் முன்னமே, உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி 
மண்தான் சோர்ந்த உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ ? மாயோனே

பொருள் 

உண்டாய் = உண்டாய்

உலகம் ஏழும் =  உலகம் ஏழும்

முன்னமே = முன்பு ஒரு நாள்

உமிழ்ந்து = பின் உமிழ்ந்தாய்

மாயையால் புக்கு = பின் மாயையில் புகுந்து

உண்டாய் வெண்ணெய் = உண்டாய் வெண்ணையை

சிறு மனிசர்  = அற்ப மனித உருவம் எடுத்து

உவலை யாக்கை = சருகு போன்ற இந்த உடலை எடுத்து (உவலை = சருகு)

நிலை எய்தி = இந்த நிலையை அடைந்து

மண்தான் சோர்ந்த உண்டேலும் = மண் உண்டு சோர்வடைந்து (சோகை 
அடைந்து)

மனிசர்க்கு ஆகும் = மனிதர்களுக்கு வரும்

பீர் சிறிதும் = நோய் சிறிதும்

அண்டா வண்ணம் = வரா வண்ணம்

மண் கரைய  = முன் உண்ட மண் கரைய

நெய் ஊண் மருந்தோ ? = நெய் உணவு மருந்தா ?

மாயோனே = மாயோனே


Friday, September 7, 2012

ஐங்குறுநூறு - அவன் தந்த நோய்


ஐங்குறுநூறு - அவன் தந்த நோய் 


அம்மா: என்னடி உடம்பு கிடம்பு சரி இல்லையா ? ஏன் ஒரு மாதிரி இருக்க ?

அவள்: இல்லையே, நான் நல்லாதான இருக்கேன்

அம்மா: என்ன நல்லா இருக்கியோ போ...சரியா சாப்டிறது இல்ல...தூக்கம் இல்ல...ஆளு நாளுக்கு நாள் மெலிஞ்சிக்கிட்டே போற...டாக்டர் கிட்ட கேட்டாலும் ஒண்ணும் இல்லேன்கிறார்...உன்னைய நாளைக்கு பூசாரிகிட்டதான் கூட்டிகிட்டு போய் மந்திரிச்சு தாயத்து வாங்கி கட்டணும்....

அப்ப அங்க வர்ற தோழி சொல்லுவாள் " உங்க அம்மாவுக்கு எங்க தெரிய போகுது இது காதல் நோய்..அவன் கிட்ட இருந்து வந்ததுனு சொல்லிறவா" .....

பாடல்:

கலிங்கத்துப் பரணி - பூவோடு உயிரையும் சொருகினாள்

கலிங்கத்துப் பரணி - பூவோடு உயிரையும் சொருகினாள்


அவனும் அவளும் எதிர் எதிர் வீடு. 

பார்த்தது உண்டு. பேசியதில்லை. 

இருவருக்குள்ளும் காதல் ஊடு பாவாய் ஓடி கொண்டிருக்கிறது. 

தினமும் காலையில் அவள் வீட்டு தோட்டத்தில் உள்ள ரோஜா செடியில் இருந்து ஒற்றை ரோஜாவை பறித்து தலையில் வைத்துக் கொள்வாள். 

வைக்கும் போது அவன் பார்க்கிறானா என்று ஓரக் கண்ணில் ஒரு பார்வை வேறு. உதட்டோரம் கசியும் ஒரு புன்னகை. 

அவள் பறித்து தலையில் சொருகியது ரோஜாவை மட்டுமா ? அவன் உயிரையும் தான். 


தனிப் பாடல் - தமிழுக்காக தலை கொடுத்த வள்ளல்


தனிப் பாடல் - தமிழுக்காக தலை கொடுத்த வள்ளல்


குமணன், அவன் தம்பியால் நாட்டை விட்டு விரட்டப் பட்டு காட்டில் இருக்கிறான். குமணனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பரிசு அறிவித்து இருக்கிறான் அவன் பாசக்கார தம்பி.

அப்போது, குமணனிடம்  தன் வறுமையை சொல்கிறான் ஒரு புலவன். குமணனிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. யோசிக்கிறான். தன்னிடம் இல்லை என்று வந்தவனை எப்படி வெறும் கையோடு அனுப்பவுது என்று அவன் மனம் வருந்துகிறது. 

புலவனிடம் சொல்லுவான் "புலவரே, என் தம்பி என் தலைக்கு விலை வைத்து இருக்கிறான். என் தலையை வெட்டி கொண்டு போய் கொடுத்தால் உங்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கும். என் தலையயை எடுத்துக் கொள்ளுங்கள்"என்று தலையும் தந்தான்....

பாடல் 

கலிங்கத்துப் பரணி - மலையில் ஆடி வரும் மயில்கள்


கலிங்கத்துப் பரணி - மலையில் ஆடி வரும் மயில்கள்


காதலன் போருக்கு சென்று திரும்பி வருகிறான்.

அவன் வருவான் வருவான் என்று காத்திருந்து சலித்துப் போனாள் அவள்.

கடைசியாக வந்து விட்டான். ஒரு புறம் அவனை காண வேண்டும் என்று ஆவல். 

மறு புறம் தன்னை காக்க வைத்ததால் வந்த கோவம். "நாம எவ்வளவு நாள் அவனைப் பார்க்காமல் கஷ்டப் பட்டோம்..அவனும் கொஞ்சம் படட்டும்"என்று கதவை திறக்காமல் ஊடல் கொள்கிறாள் காதலி.

அவளை சமாதனப் படுத்த காதலன் கொஞ்சுகிறான்

" நீ நடந்து வருவதே தேர் ஆடி ஆடி வருவது மாதிரி இருக்கு. உன் மார்பில் ஆடும் அந்த chain , அலை பாயும் உன் கண்...எல்லாம் பார்க்கும் போது மலையில் இருந்து ஆடி ஆடி இறங்கி வரும் மயில் போல் இருக்கிறாய் நீ "என்று அவளுக்கு ஐஸ் வைக்கிறான்...
  

Wednesday, September 5, 2012

முத்தொள்ளாயிரம் - அழகு திருடன்


 முத்தொள்ளாயிரம் - அழகு திருடன்


அவன் அந்த நாட்டின் தலைவன். அரசன். 

அந்த ஊரில் பெண்கள் எல்லாம் மிக அழகாக இருக்கிறார்கள். (ஜொள்ளு).

கொப்பும் குலையும், மப்பும் மந்தாரமுமாய் இருக்கிறார்கள். 

அவர்கள் ஒரு முறை அவனைப் பார்த்தால் போதும், காதல் வயப் பட்டு, சோறு தண்ணி இல்லாமல், தூக்கம் இல்லாமல் மெலிந்து துவண்டு பொலிவிழந்து போகிறார்கள். 

ஏதோ அவன் வந்து அவர்கள் அழகை கவர்ந்து கொண்டு போன மாதிரி இருக்கிறது. அவனைப் பார்த்த பின் அவர்கள் அழகு காணாமல் போய் விடுகிறது. அப்ப அவன் தான திருடிக் கொண்டு போய் இருக்க வேண்டும் ? 

அப்படி அழகை திருடி கொண்டு போகும் மன்னன் எப்படி ஒரு நல்ல செங்கோல் செலுத்தும் அரசனாக இருக்க முடியும் ?

Tuesday, September 4, 2012

கம்ப இராமாயணம் - செருப்புக்கு ஈந்தான்


கம்ப இராமாயணம் - செருப்புக்கு ஈந்தான்


இராமன் திருவடி உயர்ந்தது.

அவன் திருவடியை தாங்கிய பாதுகை அதனினும் உயர்ந்தது.

அவன் காலைப் பற்றியதால் அந்த பாதுகை அரியணை ஏறியது. 

பதினான்கு ஆண்டு காலம் அரசாண்டது.

பதினான்கு ஆண்டு காலம் கழிந்து இலக்குவனும் பரதனும் சந்திக்கிறார்கள்.

இலக்குவன் பரதன் காலில் விழுகிறான். 

வீரக் கழல் அணிந்தவன் இந்திரன்.

அவனை வென்றவன் இந்திரசித்து.

அந்த இந்திரசித்தை வென்றவன் இலக்குவன்.

அப்படிப்பட்ட இலக்குவன் பரதன் காலில் விழுந்தான்.

பரதன் யார் ? யானை, தேர், குதிரை போன்ற படைகளை உடைய நாட்டின் ஆட்சியை ஒரு தோலால் செய்த செருப்புக்கு (இராமனின் பாதுகைகளுக்கு) அளித்தவன். 

புரிகிறதா கம்பனின் கவித்திறம்.

இந்திரன் பெரிய ஆள். அவனை வென்றவன் இந்திரசித்து. அவனை வென்றவன் இலக்குவன். இலக்குவன் பரதன் காலில் விழுகிறான். அந்த பரதனோ ஒரு செருப்பினை பூசிக்கிறான். அப்படியென்றால் அந்த செருப்பை அணிந்தவன் எப்படி பட்டவனாய் இருக்க வேண்டும் ?

பாடல் 

அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன் - படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான்

பொருள்
அனையது ஓர் காலத்து = அப்படிப்பட்ட ஒரு காலத்தில்

அம் பொன் சடை முடி அடியது ஆக= அழகிய பொன்னால் செய்யப்பட்ட மகுடம் அணிந்த முடி (பரதன்) காலில் பட 

கனை கழல் = வீரக் கழல் (ஆடவர் அணியும் கொலுசு போன்ற அணிகலன்)

அமரர் கோமாற் = அமரர்களின் தலைவன் (இந்திரன் )

கட்டவன் - படுத்த = வென்றவனை (இந்திரசித்து) வெற்றி கொண்ட 

காளை, = இலக்குவன் 

துனை பரி, கரி, தேர், ஊர்தி = காலாட் படை, குதிரை, யானை, தேர், மற்ற துணைகள் 

என்று இவை பிறவும், = அது மட்டும் அல்லாமல், மற்றவற்றையும்

தோலின் = தோலால் செய்த

வினை = செயல் (இங்கு ஆட்சி என்று கொள்ளலாம்)

உறு = சிறந்த, பெரிய

செருப்புக்கு = செருப்புக்கு

ஈந்தான் = தந்தவன் (பரதன்)

விரை மலர்த் தாளின் வீழ்ந்தான் = அவனுடைய திருவடியில் வீழ்ந்தான் 

Saturday, September 1, 2012

தேவாரம் - மந்தி மலர் சிந்தும் மயிலாடு துறை


தேவாரம் - மந்தி மலர் சிந்தும் மயிலாடு துறை


சின்ன குழந்தைகளுக்கு குரங்கு என்றால் ரொம்ப பிடிக்கும். அது செய்யும் சேட்டைகளை பார்த்து வியந்து இரசிப்பார்கள்.

ஞானசம்மந்தர் சிறிய வயதில் ஞானம் பெற்றவர் என்று வரலாறு பேசும்.

அவர் மாயவரம் என்று இன்று அழைக்கப்படும் மயிலாடு(ம்)  துறைக்கு சென்றார்.

அங்கே காவிரி ஆறு சுழித்துக்கொண்டு ஓடுகிறது. 

அந்த நீர் பிரவாகம் வரும் வழியில் சந்தனம், அகில், மலர்கள் எல்லாம் அடித்துக் கொண்டு வருகிறது. 

அப்படி வரும் போது அந்த ஆற்றின் நீர் கரையில் மோதி நீர் திவலைகள் தெறிக்கிறது.

தெறிக்கும் நீர் துளிகளோடு ஆற்றில் வந்த மலர்களும் அருகில் உள்ள 

மரங்களின் மேல் உள்ள குரங்குகளின் மேல் விழுகிறது.

அந்த குரங்குகள் அதனால் கோவம் அடைந்து மரத்தில் இருந்து மலர்களை பறித்து ஆற்றின் மேல் எறிகின்றன...

அப்படிப்பட்ட ஊரான மயிலாடுதுறையில் சிவன் வசிக்கிறார் 
 
அந்தண்மதி செஞ்சடைய ரங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம்
எந்தமடி கட்கினிய தானமது வேண்டிலெழி லார்பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே.

சீர் பிரித்த பின் 

அந்தண்மதி செஞ் சடையர்  அங்கண் எழில் கொன்றையோடு அணிந்த அழகராம் 
எம் தம் அடிகளுக்கு இனிய  தானம் அது வேண்டில் எழிலார் பதியதாம்
கந்த மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரும் காவிரி உள்yu
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடு துறையே 

பொருள்

அந்தண்மதி = அந்த + தண் + மதி = அந்த குளிர்ந்த நிலவை

செஞ் சடையர் =  தன்னுடைய சிறந்த சடை முடியில் அணிந்த

அங்கண் = அந்த சடையில்

எழில் கொன்றையோடு = அழகான கொன்றை மலரை

அணிந்த அழகராம் = அணிந்த அழகராம்

எம் தம் அடிகளுக்கு = எம்முடைய கடவுளான சிவா பெருமானுக்கு

இனிய  தானம் = இனிமையான இருப்பிடம்


அது வேண்டில் = அதை தெரிந்து கொள்ள வேண்டினால்  

எழிலார் பதியதாம் = எழிலார்ந்த இடமாம் 

கந்த மலி = மணம் நிறைந்த (கந்தம் = நறுமணம்)

சந்தினொடு = சந்தனத்தோடு

கார் அகிலும் = அகில் என்ற வாசனை பொருளும்

வாரி வரும் காவிரி உள் = வாரி வரும் காவிரி ஆற்றின்

வந்த திரை  = வந்த அலை (திரை கடல் ஓடியும் திரவியம் தேடு )

உந்தி எதிர் = மேல் வந்து எதிரில் தெறிக்க, அதை எதிர்த்து

மந்தி மலர் சிந்தும் = மந்தி மலரை எடுத்து வீசும்

மயிலாடு துறையே  = மயிலாடு துறையே 


வில்லி பாரதம் - ஆண் தோற்கும் இடம்


வில்லி பாரதம் - ஆண் தோற்கும் இடம்


ஒரு பெண்ணின் அன்பை பெற ஆண், அவளிடம் கெஞ்சி, கொஞ்சித்தான் பெற வேண்டியிருக்கிறது.

மிரட்டி உருட்டி புஜ பல பராகிரமங்களை காட்டி "என்னை லவ் பண்ணலேனா பிச்சிபுடுவேன் பிச்சி "என்று அவளின் காதலை பெற முடியாது.

பெண்ணின் அழகின் முன்னால் ஆண் மண்டியிடுவது அவளின் அழகுக்கு பெருமை, அவனின் ஆண்மைக்கு பெருமை. 

வில்லிபுத்ராழ்வார் எழுதிய பாரதத்தில் ஒரு இடம்.

திரௌபதியை நீராட்டி ஆடை அணிகலன்கள் அணிவித்து திருமண மண்டபத்துக்கு அழைத்து வருகிறார்கள்.

அவளின் அழகை பார்த்த ஆண்களின் ஆண்மை (வீரம்) தேய்ந்ததாம்...