Wednesday, October 31, 2012

அபிராமி அந்தாதி - மனதின் இருள் அகற்றியவள்


அபிராமி அந்தாதி - மனதின் இருள் அகற்றியவள் 


சந்தையில் புதிதாக ஒரு பொருள் வந்தால் அதை வாங்க ஆசைப் படுகிறோம். புதிய கை தொலைபேசி, கணணி, சமையலறை சாதனம், புதிய புடவை, புதிய வண்டி என்று பொருள்கள் மேல் ஆசைப் படுகிறோம். 

ஆசைப் பட்டு வாங்கிய பொருள்கள் நமக்கு இன்பம் தருகின்றன. அவற்றின் பலனை அனுபவிக்கிறோம். சந்தோஷமாய் இருக்கிறது. இது இல்லாம எத்தனை நாள் கஷ்டப் பட்டேன் என்று நிம்மதி பெரு மூச்சு விடுகிறோம். 

நாள் ஆக ஆக பொருள் பழையதாகிறது. அடிக்கடி பழுதாகிறது. அதைவிட சிறந்த பொருள் சந்தையில் வருகிறது. நாம் பெருமையாய் நினைத்த பொருள் இன்று நன்றாக இல்லை. சில சமயம் அந்தநாள் எரிச்சல் வருகிறது. " இந்த சனியனை முதலில் தலைய சுத்தி விட்டு எரியனும்...இதை கட்டி யாரு மேய்கிறது ..." என்று அங்கலாய்க்கிறோம்.

பின் கொஞ்சம் தெளிவு வருகிறது. எல்லா சாமானும் இப்படித்தான். வாங்குன கொஞ்ச நாளைக்கு நல்லா இருக்கும். அப்புறம், இப்படித்தான். சரி சரின்னு போக வேண்டியது தான் என்று ஒரு ஞானம் பிறக்கிறது. 

அபிராமி, அந்த பொருளாகவும், அந்த பொருள் தரும் சுகமாகவும், அது சுகமா அல்லது சுமையா என்ற குழப்பமாகவும், அந்த குழப்பத்தில் இருந்து வரும் அறிவாகவும் இருக்கிறாள், இதை எல்லாம் அறிந்து கொள்ளும் அருளையும் அவள் எனக்குத் தந்தாள். 

முதலில் பொருட் செல்வம். பின்னர் அருட் செல்வம் ...இரண்டு செல்வத்தையும் தருபவள் அபிராமி.  

அவள் என் மனத்தில் வஞ்சமாகிய இருள் ஏதும் இல்லாமல் அத்தனையும் ஒளி வெள்ளமாகச் செய்தாள். 

அவளின் அருளை என்னவென்று சொல்லுவது.

பாடல்


பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும் 
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து 
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் 
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.

பொருள்

பொருளே = நீ பொருளாக இருக்கிறாய். "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே " என்பார் மாணிக்க வாசகர் திருப் பள்ளி எழுச்சியில் 

பொருள் முடிக்கும் போகமே = அந்த பொருள்கள் தரும் போகமாக இருக்கிறாள் அபிராமி.

அரும் போகம் செய்யும் மருளே = அந்த போகத்த்தில் இருந்து வரும் மயக்கமாக இருக்கிறாள் அவள்

மருளில் வரும் தெருளே = அப்படிப்பட்ட மயக்கத்தில் இருந்து பிறக்கும் தெளிவாகவும் அவள் இருக்கிறாள் 

என் மனத்து = என்னுடைய மனத்தில்

வஞ்சத்து = வஞ்சமாகிய 

இருள் ஏதும் இன்றி = இருள் ஏதும் இன்றி

ஒளி வெளி ஆகி இருக்கும் = ஒளி வடிவாய் இருக்கும்

உன்தன்  = உன்னுடைய 

அருள் = அருளை

ஏது.- அறிகின்றிலேன் - எப்படி பட்டது, எவ்வளவு என்று நான் அறியேன்

அம்புயாதனத்து அம்பிகையே = தாமரை மலரின் மேல் அமர்ந்த அம்பிகையே 
.

2 comments:

  1. அபிராமி அந்தாதி படித்ததும் புஉரிகிற அறத்திற்கும் உன் விளக்கம் படித்தபின் புரியும் அரதத்திற்கும் எவ்வளவு வித்தியாசம். too good. write more.

    ReplyDelete
  2. Your Explanation for Abhirami Andhadhi poems are incredible.Never read before.Thanks for sharing such gems with us.

    ReplyDelete