Friday, October 26, 2012

அபிராமி அந்தாதி - இருவர் அறிந்த இரகசியம்


அபிராமி அந்தாதி - இருவர் அறிந்த இரகசியம்


எனக்கு அவள் மேல் தீராத காதல். 

அவள் என் மனம் எல்லாம் நிறைந்து நிற்கிறாள். எந்நேரமும் அவள் நினைவு தான். வேறு ஒருவரை பற்றியும் சிந்தனை இல்லை. 

என் மனதில் தான் அவள் இருக்கிறாள். அவள் மனதில் நான் இருக்கிறேனா என்று தெரியாது. ஒரு வேளை இருக்கலாம். 

இதை அவளிடம் சொல்லவில்லை. அவள் எங்கே , நான் எங்கே. எப்படி சொல்வது. ஒரு நாள் அவளோட அண்ணன் விசாரித்தான்..."ஆம், உன் தங்கையை நான் நேசிக்கிறேன்...ஆனால் அவளிடம் கூட இதை சொல்லவில்லை " என்றேன். என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு போய் விட்டான்.

கொஞ்ச நாள் கழித்து அவளுக்கு திருமணம் ஆகி விட்டது.  ஒரு நாள் அவள் கணவனிடம் போய் " நான் உன் மனைவியை நேசிக்கிறேன்" என்று சொன்னேன். அவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

திருமணம் ஆன பெண்ணை நேசிக்கக் கூடாது என்று யார் சொன்னது ?

நாயகன் நாயகி பாவம் என்று கேள்வி பட்டு இருக்கிறோம். இறைவனை நாயகனகாவும் தன்னை நாயகியாகவும் வரித்து பல ஆண் பக்தர்கள் பாடல் புனைந்து இருக்கிறார்கள். 

ஆனால் இறைவியை காதலியாகவோ, துணைவியாகவோ யாரும் பாடிய மாதிரி தெரியவில்லை. 

அது இலக்கண இலக்கிய வரம்புக்குள் வராத ஒன்றாக இருக்கலாம். 

அபிராமி அந்தாதியின் பாடல்களைப் படிக்கும்போது எனக்கு காதலியின் அதீத காதல் கொண்ட ஒரு காதலன் அதை சொல்ல முடியாமல் தவிக்கும் பாடல்கள் போலவே தோன்றும்.

இது சரியா தவறா என்று தெரியவில்லை. எனக்கு இப்படி தோன்றுகிறது.

பாடல் 


ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய் 
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே 
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்-- 
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.

பொருள் 

ஒன்றாய் = உலகத்தின் ஆதியில் ஒரே ஒரு பொருளாய் இருந்து 

அரும்பி, = மொட்டு அரும்புவதைப் போல் அரும்பி

பலவாய் விரிந்து = பல பொருட்களாய் விரிந்து

இவ் உலகு எங்குமாய் = இந்த உலகம் அனைத்திலும் 

நின்றாள் = இருந்தாள். எங்கு பார்த்தாலும் அவள் தான்

அனைத்தையும் நீங்கி நிற்பாள் = அனைத்திற்க்கு வெளியேயும் அவள் நின்றாள்

என்றன், = என்னுடைய

நெஞ்சினுள்ளே = மனதில் 

பொன்றாது = இடையறாது

நின்று புரிகின்றவா.= எப்போதும் நிறைந்து இருப்பவள்

இப் பொருள் அறிவார் = இதன் பொருளை அறிந்தவர்கள் 

அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், = அன்று ஆல் இலையில் துயின்ற திருமாலும் (அவளின் அண்ணனும்)

என் ஐயனுமே = அவளின் கணவனான என் ஐயனுமே

1 comment:

  1. இது மிகவும் கஷ்டமான விஷயம். கடவுள் தன் மனம் முழுவதும் பரவி இருப்பதாகவே இந்தப் பாடல் இருக்கிறது. காதலும், பக்தியும் கலக்கும் இடம் இது. ஒரு பக்தி பாவத்தில், தன்னையே மறந்து, ஒரு பரவச நிலையில் பாடிய பாடல் இது. இதற்க்கு எந்த அளவுக்கு சாதாரணமான விளக்கம் கொடுக்க முடியும் என்பது சந்தேகமானதே.

    ReplyDelete