Tuesday, October 16, 2012

நள வெண்பா - நீண்ட இரவு


நள வெண்பா - நீண்ட இரவு


இந்த இரவு ஏன் இப்படி நீண்டு கொண்டே போகிறது. எவ்வளவு நேரம் ஆகிறது பொழுது விடிய. நகரவே மாட்டேன் என்கிறதே இந்த இரவு. இந்த சேவல் கோழிகளுக்கு எல்லாம் என்ன ஆகிவிட்டது ? ஏன் அவை கொக்கரிக்க மாட்டேன் என்கிறது. இந்த இரவு விடியவே விடியாதா ? இந்த கடல் ஏன் இப்படி அலை அடித்துக்கொண்டே இருக்கிறது. தூங்கவே தூங்காதா ? இந்த நிலவு ஏன் இப்படி வெயிலாய் காய்கிறது ? ஏன்  இப்படி சுடுகிறது ? இந்த சூட்டில் என் உடலே உருகி விடும் போல் இருக்கிறதே...என்று புலம்புகிறாள் தமயந்தி...காதல் பிரிவு அவளை வாட்டுகிறது ....


பாடல் 


ஊழி பலவோர் இரவாயிற் றோவென்னும்
கோழி குரலடைத்த தோவென்னும் - ஆழி
துயிலாதோ என்னும் சுடர்மதியம் கான்ற
வெயிலால் உடல்உருகா வீழ்ந்து.

சீர் பிரித்தபின் 

ஊழி பல ஓர் இரவாயிற்றோ என்னும் 
கோழி குரல் அடைத்தோ என்னும் - ஆழி
துயிலாதோ என்னும் சுடர் மதியம் கான்ற
வெயிலால் உடல் உருகா வீழ்ந்து 

பொருள் 

ஊழி பல = பல ஊழிக் காலங்கள்

ஓர் இரவாயிற்றோ என்னும் = சேர்ந்து ஒரு இரவாக நீண்டு விட்டதோ என்று எண்ணும் 

கோழி குரல் = கொக்கரிக்கும் கோழியின் குரல்

அடைத்தோ என்னும் = அடைத்து போய் விட்டதோ என்று எண்ணும்

ஆழி துயிலாதோ என்னும் = அலை கடல் தூகாதோ என்று எண்ணும்

சுடர் மதியம் = சுடர் ஒளி வீசும் நிலவு

கான்ற = காய்கின்ற

வெயிலால் = வெயிலால்

உடல் உருகா வீழ்ந்து  = உடல் உருகி விழாமல் இருந்து 


No comments:

Post a Comment