Friday, October 5, 2012

அபிராமி அந்தாதி - பாதம் எனும் வாசக் கமலம்


அபிராமி அந்தாதி - பாதம் எனும் வாசக் கமலம்


ஒரு நாள் அவன் திடீரென்று மயக்கத்தில் இருந்து விழித்துக் கொள்கிறான்.  

சுற்றிலும் பார்த்தால் கடல். 

ஒரே தண்ணீர். கரை காண முடியாத கடல் நடுவே தத்தளிக்கிறான்.

எந்த பக்கம் போவது என்று தெரியவில்லை.

பசி ஒரு புறம்.
சுட்டெரிக்கும் வெயில் ஒரு புறம்.

உப்பு கரிக்கும் கடல் நீர் மறு புறம்.

தாகம் வேறு வாட்டுகிறது.

தூக்கம் இல்லை.

பத்தா குறைக்கு அவனுக்கு கண் தெரியாது. கண் தெரிந்தாலே கரை காண முடியா கடல். கண் வேறு தெரியா விட்டால் என்ன எப்படி இருக்கும்.  

கடைசியில் ஒரு கட்டை கையில் தட்டுப் படுகிறது. அப்பாட, அதைப் பற்றிக் கொண்டு நீந்தி கரை சேர்ந்து விடலாம் என்று நினைக்கிறான் . அந்தோ, அந்த கட்டையும், ஒரே பாசி படிந்து இருக்கிறது. பிடிக்க பிடிக்க வழுக்கிக் கொண்டே போகிறது. 

என்ன செய்யலாம் என்று தவித்துக்கொண்டு இருக்கும் போது, அவள், அவள் தான் அபிராமி, அவன் மேல் பரிதாபப் பட்டு, அவளின் திருவடியையை நீட்டுகிறாள்.

அவன் அதை பிடித்துக் கொள்கிறான். உயிர் தந்த அந்த திருவடியையை தன் மேலை மேல் வைத்துக் கொண்டாடுகிறான். 

அந்தக் கடலிலும், அந்த நேரத்திலும், அந்த பாதத்தின் மென்மை அவனுக்குத் தெரிகிறது. அதன் சிவந்த நிறம். அதில் இருந்து வரும் இனிய வாசம்....அவளை நிமர்ந்து பார்க்கிறான். 

அவளின் அன்பு அவனை சிலிக்க வைக்கிறது. " உன் அன்பை நான் என்ன வென்று சொல்வேன் " என்று உருகுகிறான். 

பாடல் 
 

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே

பொருள்:

ஆசைக்கடலில் = ஆசை என்ற கடலில்

அகப்பட்டு = சிக்கிக் கொண்டு

அருளற்ற = அருள் ஏதும் இல்லாத

அந்தகன் = குருடன்

கைப் = குருடனின் கை

பாசத்தில் = இரண்டு அர்த்தம் சொல்லலாம். ஒன்று, பாசி படிந்த இடங்களை 

பிடித்து கரை ஏற நினைக்கிறான். முடிய வில்லை. இன்னொரு பொருள்,  
பொருள்கள்  மேல், உறவுகளின் மேல் பாசம். ஆசைக் கடல், அதன் நடுவில் 
பாசம் என்னும் கடல்.

அல்லற்பட = கஷ்டப் பட்டுக் கொண்டு 

இருந்தேனை = இருந்தவனை

நின் பாதம் என்னும் = உன்னுடைய திருவடிகள் என்ற 

வாசக் கமலம் = வாசமான தாமரை மலர்களை

தலை மேல் = என்னுடைய தலையின் மேல்

வலிய வைத்து = நீயே வலிய வந்து வைத்து

ஆண்டு கொண்ட = என்னை ஆண்டு கொண்ட 

நேசத்தை = உன்னுடைய அன்பை

என் சொல்லுகேன் = என்ன என்று சொல்வேன்

ஈசர் பாகத்து = ஈசனின் ஒரு பாகம் கொண்ட

நேரிழையே = சிறந்த அணிகலன்களை அணிந்தவளே

இந்த பாடலுக்கு பொருள் எழுதிய பெரியவர்கள், "அந்தகன் கை பாசத்திடை அல்லல் படும் வேளை" என்ற வரிக்கு அந்தகன் என்றால் எமன். அவனுடைய பாசக் கயிற்றில் கட்டப் பட்டு அல்லல் படும் நேரம் என்று பொருள் சொல்லி இருக்கிறார்கள். உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வைத்துக் கொள்ளுங்கள். 


2 comments:

  1. அழகான பாட்டு. அதற்கேற்றபடி நல்ல முகவுரை.

    நன்றி.

    ReplyDelete
  2. என்னிடம் ஒரு அந்தாதி புக் கண்ணதாசன் உரையுடன் இருக்கிறது. அது பக்தியுடன் படிப்பதற்கு. இது ரசித்து அனுபவித்து படிப்பதற்கு. why cant you please complete the whole andhaadhi like this. just 108 poems.

    ReplyDelete