Tuesday, October 9, 2012

கம்ப இராமாயணம் - அவனா இவன், இவனா அவன் ?


கம்ப இராமாயணம் - அவனா இவன், இவனா அவன் ?


கன்னி மாடத்தில் இருந்து சீதை இராமனை பார்த்தாள். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். இருவரும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் மாறி இடம் பிடித்தனர்.

மறு நாள், இராமன் சிவ தனுசை உடைத்தான். சீதை மாலையிட வருகிறாள். 

அவளுக்கு ஒரு சந்தேகம். நேற்று மாலை பார்த்த காளை இவன் தானா? இவன் மாதிரி இருக்கு ? ஒரு வேளை இவன் இல்லையோ ? அது வேற ஆளோ ? இருக்காது. இவன் தான் அவன் என்று அவள் மனம் கிடந்து அலை பாய்கிறது.  எப்படி அலை பாய்கிறது ?

அவள் காதில் ஜிமிக்கி போட்டு இருக்கிறாள். அவள் நடந்து வரும் போது அது இங்கும் அங்கும், முன்னும் பின்னும், வலமும் இடமும் ஆடுவதைப் போல அவள் மனம் கிடந்து ஆடுகிறது. 

என்ன ஒரு கற்பனை. 

அந்தப் பாடல்: 


‘வெள்ளத்தின் சடிலத்தான்தன்
   வெஞ் சிலை இறுத்த வீரன்
தள்ளத் தன் ஆவி சோர.
   தனிப் பெரும் பெண்மைதன்னை
அள்ளிக்கொண்டு அகன்ற காளை
   அல்லன்கொல்? ஆம்கொல்? என்பாள்’
உள்ளத்தின் ஊசலாடும்
   குழை நிழல் உமிழ இட்டார்.


பொருள்:

வெள்ளத்தின் = வெள்ளமாக பெருக்கு எடுத்து வரும் 

சடிலத்தான்தன் = கங்கையை தலையில் கொண்டவனின் (சிவனின்)

வெஞ் சிலை = பெரிய வில்லை 

இறுத்த வீரன் = உடைத்த வீரன்

தள்ளத் = (என்) உடல் தளர

தன் ஆவி சோர = ஆவி சோர்ந்து போக.

தனிப் பெரும் பெண்மைதன்னை = ஒப்பு உவமை இல்லாத பெண்மை தன்னை

அள்ளிக்கொண்டு = அள்ளி எடுத்துக் கொண்டு 

அகன்ற காளை = சென்ற காளை போன்ற இளைஞன்

அல்லன்கொல்? = அவன் இல்லையா இவன்

ஆம்கொல்? = அவன் தானா இவன்


என்பாள் = என்று நினைப்பாள்

உள்ளத்தின் ஊசலாடும் = அவள் உள்ளத்தில் ஊசலாடும்

குழை = காதில் அணியும் ஆபரணம் 

நிழல் உமிழ இட்டார். = சீதையின் முகம் அவ்வளவு பிரகாசம். அதனால் அவள் காதில் உள்ள கம்மலில் இருந்து ஒளி வருவதற்கு பதிலாக நிழல் விழுகிறது. சூரிய வெளிச்சத்தில் வைரத்தை வைத்தால், வைரத்தில் ஒளி வராது, அதன் நிழல் தான் விழும். அது போல.


3 comments:

  1. நிழல் உமிழ இட்டார்க்கு உங்கள் விளக்கம் இல்லாமல் எங்களுக்கு ரசித்திருக்க முடியாது. Thanks.

    ReplyDelete
  2. "நிழல் உமிழ இட்டார்" - இதிலேயே பைசா வசூல்! ஆஹா, என்ன பாட்டு, என்ன விளக்கம்!

    ஆனால், சீதைக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் வந்தது? இராமனுக்கு நிகர் அவனே அல்லவா?

    ReplyDelete