Sunday, November 4, 2012

பிரபந்தம் - இந்த சொத்து எல்லாம் யாருடையது ?


பிரபந்தம் - இந்த சொத்து எல்லாம் யாருடையது ?


வேதங்களை படித்து அறிந்து கொள்வது மிகக் கடினமான காரியம். முதலில் அதற்க்கு சமஸ்க்ரிதம் தெரிய வேண்டும். அந்த மொழியின் உச்சரிப்பு புரிய வேண்டும். வேதங்கள் எழுதப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட சமஸ்க்ரித சொற்களுக்கு அர்த்தம் புரிய வேண்டும். கால வழக்கில் ஒரே வார்த்தை வேறு அர்த்தம் பெறுவதும் உண்டு. ஆத்மா என்ற சொல்லுக்கு ஐம்பத்து ஆறு அர்த்தங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். எது சரியான அர்த்தம் என்பதில் குழப்பம் வரலாம். வேதம் ஓத சில வரைமுறைகள், கட்டுப்பாடுகள், உண்டு.  

நமக்கு அந்த பிரச்சனை எல்லாம் இல்லை. வேதத்தின் சாரத்தை தமிழில் வடித்து மிக மிக இனிமையாக தந்து இருக்கிறார்கள். முன்னூறே பாசுரத்தில். 

பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்ற மூன்று ஆழ்வார்கள் நூறு பாசுரம் எழுதி இருக்கிறார்கள். மொத்தம் முந்நூறு பாசுரம்.  

இதை தமிழ் வேதம் என்று பெரியவர்கள் கூறுவார்கள்

தேமதுர தமிழில் படிக்க படிக்க திகட்டாத பாடல்கள். 

பொய்கை ஆழவார் எழுதிய நூறு பாடல்கள் முதல் திருவந்தாதி என்று அழைக்கப்படுகிறது. அதில் இருந்து சில பாசுரங்களை பார்ப்போம்.

நாம் சொத்து சேர்த்து வைக்கிறோம். மனை, வீடு, தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் என்று சேர்த்து வைக்கிறோம். இவை எல்லாம் நம்மது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். 

நமக்கு முன்னால் இவற்றை எல்லாம் யார் யாரோ வைத்து இருந்தார்கள். நமக்கு பின்னால் இது யார் யாரிடமோ இருக்கப் போகிறது. இந்த பிரபஞ்சத்தின் கால அளவை வைத்து பார்க்கும் போது, நாம் இவற்றை வைத்து இருக்கும் கால அளவு ஒரு சிறு நேரத்துளி. அவ்வளவு தான். கொஞ்ச நேரம் வைத்து இருக்க இந்த சண்டை, சச்சரவு, அடி தடி, கோபம், தாபம், எல்லாம். 

இந்த சொத்துகளை இதற்க்கு முன்னால் நம் தந்தை, அதற்க்கு முன்னால் நம் தத்தா வைத்து இருந்திருக்கலாம். அல்லது நாம் யாரிடம் இருந்து வாங்கினோமோ அவர்களின் தந்தை அல்லது பாட்டன் வைத்து இருந்து இருக்கலாம்.

பொய்கை ஆழ்வார் மேலும் ஆழமாக நம்மை சிந்திக்கச் சொல்கிறார். 

இந்த உலகம் முழுவதும் அவன் உருவாகினான். 

சரி, அவன் உருவாக்கினால் என்ன. ஒரு தொழிற்ச்சாலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டால் அது அந்த தொழிற்ச்சாலையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு சொந்தம் இல்லையே என்று வாதிடலாம். 

அவன் உருவாகியது மட்டும் அல்ல, அவன் அதை பிரளய காலத்தில் தன் வயிற்றில் வைத்து காப்பாற்றினான். 

காப்பாற்றியது மட்டும் அல்ல மீண்டும் நாம் அனுபவிக்க அதை நமக்குத் தந்தான். 

இது அவனிடம் இருந்து வந்தது. மீண்டும் அவனிடம் போகும். இடையில் மிக மிக சிறிது காலம் நீங்கள் அதை வைத்து இருக்கிறீர்கள்.

பாடல் 


என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.

சீர் பிரித்த பின் 

என்று கடல் கடைந்தது இவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை உணரேன் நான் - அன்று 
படைத்து உடைத்து கண் படுத்த ஆழி , இது நீ 
படைத்து இடத்து உண்டு உமிழ்ந்த பார் 

பொருள் 

என்று கடல் கடைந்தது = கடல் கடைந்தது என்று ?

இவ்வுலகம் = இந்த உலகத்தை (தானமாக பெற்றுக் கொள்ள)

நீர் ஏற்றது = மாவலியிடம் நீரை தானமாக ஏற்றுக் கொண்டது 

ஒன்றும் அதனை உணரேன் நான் = நான் அதை அறியேன். அது என்று நடந்தது என்று எனக்குத் தெரியாது

அன்று = அன்று  

படைத்து = சீதையையை அடைய கடலில் பாலம் படைத்து

உடைத்து = பின், இலங்கையில் இருந்து மீண்டு வந்த பின், அதை உடைத்து

கண் படுத்த ஆழி = நீ கண் வளர துயில் கொண்ட கடல் இது

இது = இந்த உலகம் 

நீ  = நீ

படைத்து = படைத்து

இடத்து உண்டு = உள்ளே உண்டு

உமிழ்ந்த பார் = பின் உமிழ்ந்த உலகம்

இந்த உலகமும், அதில் உள்ள எல்லா பொருளும், நீ படைத்தது, பின் காத்தது, பின் எங்களுக்கு அருளியது. 

நீங்கள் இறைவன் என்ற தத்துவத்தை நம்பாமல் இருக்கலாம். அவனோ அல்லது அவளோ அல்லது அதுவோ இந்த உலகை படைத்தது, காத்தது என்பது எல்லாம் வெறும் கதை என்று வாதிடலாம்.

ஆனால் அந்த கோணம் ரொம்ப வசீகரமானது. 

இங்குள்ள அத்தனை மக்களும், பொருள்களும் அவனிடம் இருந்து வந்தது என்று வைத்துக் கொண்டால் அனைத்திற்கும் ஒரு தெய்வ சம்பந்தம் வந்து விடுகிறது.  எல்லோரும் அவன் பிள்ளைகள் என்று கொண்டால், மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம், அவர்களை கொல்லும் எண்ணம், அவர்கள் சொத்துகளை பரித்துகொள்ளும் எண்ணம் வராது.

அனைத்து பொருளும் அவன் தந்தது என்றால், எல்லாமும் அவன் பிரசாதம். அதை பய பக்தியோடு உபயோகப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரும். பெருமாள் கோவில் பிரசாதத்தை நாம் தூர எரிவோமா ? எல்லாமே பிரசாதம் என்ற எண்ணம் வந்து விட்டால் ?

யோசித்துப் பார்ப்போம்....

1 comment:

  1. Superb. .எல்லாம் இறைவனின் பிரசாதம் என்று நினைப்பது எவ்வளவு உயர்ந்த எண்ணம். அருமையானப்பாடல்

    ReplyDelete