Monday, December 24, 2012

தேவாரம் - கொதிக்கும் நீரில் ஆமை போல் தெளிவு இல்லாதேன்


தேவாரம் - கொதிக்கும் நீரில்  ஆமை போல் தெளிவு இல்லாதேன்


ஒரு ஊரிலே ஒரு பெரிய குளம் இருந்தது. அந்த குளத்தில் ஒரு ஆமை வசித்து வந்தது. ஒரு நாள் அந்த ஊருக்கு ஐந்து மீனவர்கள் வந்தனர். வந்தவர்கள் அங்கிருந்த பெரிய குளத்தைப் பார்த்தவுடன் "ஆஹா, இதில் மீன் பிடித்தால் நிறைய மீன் கிடைக்கும் " என்று வலை வீசினர். மீனோடு கூட அந்த அமையும் சிக்கியது. 

அடடா எவ்வளவு பெரிய ஆமை என்று அதை தனியே எடுத்துப் போய், மூணு பெரிய கல்லை வைத்து, பெரிய ஒரு அண்டாவை அதன் மேல் வைத்து, அதில் நிறைய நீர் விட்டு, இந்த ஆமையை தூக்கி அதில் போட்டு, அண்டாவுக்கு கீழே நெருப்பு பத்த வைத்தார்கள். சூட்டிலே ஆமை வெந்து விடும், ஆமை கறி சாப்பிடலாம் என்பது அவர்கள் எண்ணம்.

நீர் மெதுவாக சூடு ஏற ஆரம்பித்தது. ஆமைக்கு ஒரே சந்தோஷம். வெது வெதுப்பான நீர் எதுவரை காணாத இன்பம்   இங்கும் அங்கும் நீந்தி விளையாடி கொண்டிருந்தது.  கீழே சூடு நீர் மேலே குளிர்ந்த நீர். சூடு இன்னும் முழுவதுமாக பரவவில்லை. ஆமை கீழே போகும், "ஆ...ரொம்ப சூடு" என்று மேலே வரும்..."இது ரொம்ப ஜில்லுனு" இருக்கு என்று கீழே போகும்...ஒரே கும்மாளம் தான். 

நேரம் ஆக ஆக , தண்ணீர் சூடு ஏறும்....ஆமை சூடு தாங்க முடியாமல் தவிக்கும்...போக இடம் இல்லாமல் அங்கும் இங்கும் அலையும்...இறுதியில் நொந்து வெந்து சாகும். 

அந்த முட்டாள் ஆமைக்கும் எனக்கும் என்ன வேறுபாடு ? புலன்கள் தரும் இன்பம் தான் வெது வெதுப்பான நீர். சுகமாக இருக்கிறதே என்று அது வேண்டும், இது வேண்டும் என்று அலைந்து தேடி சேர்க்கிறோம். மனைவி/கணவன் வந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமை என்று திருமணம் செய்து கொள்கிறோம், பின் பிள்ளைகள் இருந்தால் இன்னும் சுகம் என்று அவர்களை பெற்றுக் கொள்கிறோம், பின் வீடு, வாகனம், சொத்து என்று ஓடி ஓடி சேர்க்கிறோம்....எல்லாமா சந்தோஷத்தை தருகிறது ? 

அவ்வளவு ஏன், இனிப்பு பண்டங்களை சாப்பிடுகிறோம்...அடடா என்ன சுகம்...வாயில் அப்படியே கரைந்து உள்ளே போகும் போது கண் மூடி இரசிக்கிறோம் அல்லவா ...அதுவே பின் சர்க்கரை வியாதி வரும் போது ஐயோ கொஞ்சம் குறைத்து சாப்பிட்டு இருக்காலாமே என்று வருந்துகிறோம்....எல்லா இன்பங்களும் அப்படித்தான்...முதலில் சுகம்..பின் துக்கம் ....


நாவுக்கரசர் பாடல்


வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே
னென்செய்வான் றோன்றி னேனே.

சீர் பிரித்த பின் 

வளைத்து நின்று ஐவர் கள்வர்
வந்து எனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்து உலையை ஏற்றி
தழல் எரி மடுத்த நீரில்
திளைத்து நின்று ஆடுகின்ற 
ஆமை போல் தெளிவு இல்லாதேன் 
இளைத்து நின்று ஆடுகின்றேன்
என்செய்வான் தோன்றினேனே 

பொருள் 

வளைத்து நின்று = சுற்றி நின்று, தப்பிக்க முடியாமல் வளைத்து நின்று

ஐவர் கள்வர் = ஐந்து புலன்களாகிய கள்வர்கள்

வந்து எனை = வந்து என்னை

நடுக்கம் செய்யத் = பயம் உண்டாக, தளர்வு உண்டாக

தளைத்து = தளை என்றால் பிணை, கட்டு, என்று பொருள். ஐம்புலன்களும் நம்மை கட்டிப் போடுகின்றன.

வளை பட்டகை மாதொடு மக்களெனுந்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ  என்பார் அருணகிரி நாதர்


வைத்து = வைத்து

உலையை ஏற்றி = உலையை ஏற்றி (நீரை கொதிக்க விட்டு)

தழல் எரி மடுத்த நீரில் = தீயினால் சூடாகும் அந்த நீரில் (மடுத்தல் என்றால் எரிச்சல் உண்டாக்குதல். "அவன் கிட்ட சொல்லி சொல்லி நான் மடுத்தாச்சு")
 
திளைத்து நின்று ஆடுகின்ற = சுகமாக அந்த நீரில் ஆடுகின்ற 
 
ஆமை போல் தெளிவு இல்லாதேன் = மட ஆமை போல் தெளிவு இல்லாதேன்
 
இளைத்து நின்று ஆடுகின்றேன் = துன்பப்பட்டு ஆடுகின்றேன்

என்செய்வான் தோன்றினேனே = நான் என்ன செய்யப்போகிறேனோ 

சுகம் வரும் போது யோசியுங்கள்....அந்த சுகம் அப்படியே இருக்குமா...இல்லை அதுவே துன்பத்திற்கு இட்டுச் செல்லுமா என்று....

 

2 comments:

  1. இந்த வாழ்வே மாயம், துன்பத்திற்குக் காரணம் என்று பல பாடல்கள், நூல்கள், மூதோர் சொல்லி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இதுவும் ஒன்று.

    ஆமையை உதாரணம் சொன்னது நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. ஐம்புதத் தத்துவத்தை விளக்கும் அழகான பாடல். நீர் மூலகம் ஆயுளை பாதுகாக்கும் ,அது அகங்காரம் என்னும் தீயினால் அழியும் என்பதை மிக அழகாக விளக்கும் பாடல் !

    ReplyDelete