Tuesday, December 25, 2012

பெரிய புராணம் - உலகு எல்லாம் உணர்ந்து


பெரிய புராணம் - உலகு எல்லாம் உணர்ந்து 


பெரிய புராணத்தில் முதல் செய்யுள்.

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.


உலகில் உள்ளவர்கள் எல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன். நிலவு திகழும் கங்கை நீர் கொண்ட சடையை கொண்டவன். அளவு கடந்த ஜோதி வடிவானவன். அம்பலத்தில் ஆடுவான். சிலம்பு திகழும் மலர் போன்ற திருவடியை வணங்குவோம்.

சரி, இந்த பாட்டில் என்ன சிறப்பு ? 


எழுதியவர் தெய்வப் புலவர் சேக்கிழார். முதல் அடி எடுத்துக் கொடுத்தது இறைவன் என்பது நம்பிக்கை. 

பொருள்  

உலகு எல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன் : உலகு எல்லாம் என்றால் உலகில் உள்ள உயிர்களை குறிக்கும். இறைவனை வணங்குவது எளிது. என்ன கோவிலுக்குப் போகணும், இப்படி இரண்டு கையையும் சேர்த்து நடுவில் வைத்தால் வணங்குவது. இது என்ன கடினம். இயந்திரம் போல வணங்குவது எளிது தான். உணர்ந்து ஓதுவது கடினம். இறைவனை யார் உணர்கிறார்கள் ? ஏதோ கடமை என்று வணங்குகிறார்கள். அவன் நம் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன். இந்த ஐந்து புலன்களின் மூலம் அவனை அறிந்து கொள்ள முடியாது. அது இல்லை இது இல்லை என்றுதான் சொல்ல முடிகிறதே அன்றி இது தான் என்று சொல்ல முடியவில்லை. 

வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
         தானன்று நானன் றசரீரி யன்று அசரீரியன்றே.

என்பார் அருணகிரி பெருமான். 

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் என்பது அபிராமி பட்டர் வாக்கு

சரி, உணர முடியாதவன் என்றே வைத்துக் கொள்வோம். உணர முடியாதவனை நாம் எப்படி தான் அறிந்து கொள்வது ? அவன் நம் மேல் அருள் கூர்ந்து நாம் காணும் படி உருவம் எடுத்து வருகிறான்.  

நிலவு லாவிய நீர்மலி வேணியன : தலையில் நிலவையும், நீர் நிறைந்த கங்கையையும் உடையவன். நாம் அறிந்து கொள்ளும் பொருட்டு நாம் அறியும் வண்ணம் வருகிறான். 

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் அருணகிரி நாதர். 
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆட்கொண்டாய் என்பது மணிவாசகம்

அலகில் சோதிய னம்பலத் தாடுவான்அவன் அரூபமானவன். ஜோதி மயமானவன். ஜோதிக்கு உருவம் உண்டா என்றால் உண்டு. ஆனால் அதை தொட்டு உணர முடியாது. அரூபமானவன், பின் அரூபமும் - ரூபமும் கலந்த ஜோதி வடிவானனவன். அம்பலத்தில் ஆடும் உருவம் கொண்டவன். இப்படி ஆத்மாக்களின் பக்குவம் அறிந்து அவன் அவைகளுக்கு காட்சி தருகிறான்.

விறகில் தீயினன், பாலில் படு நெய் போல் 
மறைய நின்றுள்ளான் மாமணி சோதியன் 
உறவு கோல் நாட்டி உணர்வு கயிற்றினால் 
முருக வாங்கி கடைய முன் நிற்குமே என்பார் நாவுக் கரசர்.

முத்து பவளம் போன்ற மணிகளில் உள்ள ஜோதி கண்ணுக்குத் தெரியாது. உள்ளே அடங்கி கிடக்கும். 
விறகில் உள்ள தீ தெரியும் 
பாலில் உள்ள நெய் கடைந்தால் தெரியும் 

இப்படி ஆண்டவன் ஆன்மாக்களுக்கு வெவ்வேறு வடிவில் காட்சி தருகிறான்..."எம்மையும் இங்கு வந்து ஆண்டு அருள் புரியும் எம்பெருமான்" என்பார் மணிவாசகர்.

மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.அப்படி பட்டவனின் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்...




3 comments:

  1. மிக அருமையான உரை. எதோ ஒரு சிறு சொற்பொழிவு கேட்ட மாதிரி இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  2. அருமை. எத்தனை quotes. பெரிய புராணத்துடன் திருப்புகழ், திருவெம்பாவை,தேவாரம்.. பெரிய விருந்தே படைத்தது விட்டீர்கள்.

    ReplyDelete
  3. படைக்கவில்லை, பரிமாறினேன்...படைத்தது வேறு யாரோ

    ReplyDelete