Sunday, December 30, 2012

இராமாயணம் - நல்லாருக்குச் செய்த உதவி


இராமாயணம் - நல்லாருக்குச் செய்த உதவி

வாமனன் மூன்றடி நிலம் கேட்டு வந்தான். மாபலியும் கேட்ட மூன்றடி நிலத்தை தானமாக தந்தான். நீர் வார்த்து தானம் தந்தவுடன், எதிரில் நின்றவர்கள் பயப்படும்படி வானம் வரை வளர்ந்தான். அவன் எப்படி வளர்ந்தான் என்றால், நல்லவர்களுக்கு செய்த உதவி போல் வளர்ந்தானாம். 

நல்லவர்களுக்கு செய்த உதவி நாளும் நாளும் வளர்ந்து நன்மை தருவதை போல அவன் வளர்ந்தான். 

நல்லவர்களுக்குச் செய்த உதவி முடிவில்லா இன்பத்தை தருவதைப் போல முடிவில்லாமல் வளர்ந்து கொண்டே போனான். 

தீயவர்களுக்குச் செய்த உதவி மூலம் நமக்கு முதலில் நன்மை விளைவது போல் தோன்றினாலும் பின் ஒரு நாளில் அது நம்மை கீழே தள்ளி முன் இருந்த நன்மைகளையும் சேர்த்து கொண்டு போய் விடும். 

பாடல்'


கயம் தரு நறும்புனல் கையில் தீண்டலும்
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் -
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே.

கயம் தரு நறும்புனல் = கயம் என்றால் சிறிய நீர் நிலை. குளம் என்று கொள்ளலாம். 

கோட்டுப்பூப் போல மலர்ந்து, பின் கூம்பாது,
வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி; தோட்ட
கயப்பூப்போல் முன் மலர்ந்து, பின் கூம்புவாரை
நயப்பாரும் நட்பாரும் இல்

என்பது நாலடியார். 

கையில் தீண்டலும் = மாவலியின் கையில் இருந்து விழுந்த நீர் வாமனன் கையையை தொட்டதுதான் தாமதம், தீண்டிய உடன்

பயந்தவர்களும் இகழ் குறளன் = பயந்தவர்கள் என்றால் பெற்றவர்கள் . 

பொய்மையும் வாய்மை இடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்பது குறள். 

பெற்றவர்களும் இகழும் வண்ணம் உள்ள குள்ள உருவம் உள்ளவன். அப்படி என்றால் அவன் எவ்வளவு குள்ளமாய் இருந்திருக்க வேண்டும்.  

பார்த்து எதிர் வியந்தவர் வெருக் கொள = பார்த்துக் கொண்டிருந்தவர்கள் முதலில் வியந்தார்கள், பின் பயம் கொண்டார்கள். வெரு = பயம்

விசும்பின் ஓங்கினான் = விசும்பு என்றால் வானம். வானம் வரை உயர்ந்தான்
 
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே. = உயர்ந்தவர்களுக்கு செய்த உதவி போல

1 comment:

  1. Now you better open a sub blog to write for all the reference songs used in this blog. this naaladiyaar is too good.

    ReplyDelete