Tuesday, December 18, 2012

அபிராமி அந்தாதி - அபிராமி எப்படி இருப்பாள் ?


அபிராமி அந்தாதி - அபிராமி எப்படி இருப்பாள் ?


அபிராமி எப்படி இருப்பாள் ? மற்ற பெண்களை போல் இருப்பாளா ? ரொம்ப அழகான பெண்ணாக இருப்பாளோ ? அவள் கண் எப்படி இருக்கும் ? மான் போல இருக்குமா ? அவள் மார்பகங்கள் எப்படி இருக்கும் ? தாமரை மொட்டு போல் இருக்குமா ? அவளை மலை மகள் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் அவளும் ஒரு சாதாரண பெண் போலத்தானே இருப்பாள் ? 

இப்படித்தான் அவளை எல்லோரும் கூறுகிறார்கள். இதை எல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது என்கிறார் அபிராமி பட்டர். இந்த உலகை எல்லாம் ஈன்ற நாயகி இப்படி இருப்பாள், அப்படி இருப்பாள் என்று சொல்வது நகைப்புக்கு இடமானது. அதை விட்டு விட்டு அவளின் உண்மையான தன்மையையை அறிய முயலுங்கள் என்கிறார் பட்டர். 


பாடல் 


 நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு, 
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த 
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம், 
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

பொருள் 


 நகையே இது, = இது நகைப்புக்கு இடமானது. எது ?

இந்த ஞாலம் = இந்த உலகம் 

எல்லாம் பெற்ற நாயகிக்கு = எல்லாம் ஈன்றெடுத்த நாயகிக்கு
 
முகையே முகிழ் முலை = மார்புகள் தாமரை மொட்டுகள்

மானே  முது கண் = கண்கள் மானைப் போன்றவை

முடிவுயில் = முடிவே இல்லாதவள்


அந்த வகையே பிறவியும் = முடிவு எப்படி இல்லையோ, அப்படியே பிறவியும் இல்லாதவள் 

வம்பே = வம்பு தான்

மலைமகள் என்பதும் நாம் = நாம் அவளை மலை மகள் என்று கூறுவதும்
 
மிகையே = கொஞ்சம் அதிகப் படிதான்

இவள்தன் = இவளுடைய

தகைமையை = தன்மையை

நாடி விரும்புவதே = நாடி, அதை அறிந்து, விரும்புவதே (நாம் செய்யக் கூடிய செயலாகும்)

இறைவன் என்பது உருவம் அல்ல. அது ஒரு தன்மை. 

கை, கால், மூக்கு, முழி என்று இருக்கும் வடிவம் அல்ல அது. படைத்தல், காத்தல், கரத்தல், அழித்தல், அருளுதல், என்ற தன்மைகளின் தொகுப்பு தான் இறை.

ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெரும் ஜோதி அது. 

வான் அன்று, கால் (காற்று) அன்று, தீ அன்று, நீரும் அன்று
தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே 

என்பார் அருணகிரி நாதர். உருவம் கடந்தவன் என்பதால் அவன் கடவுள். 

No comments:

Post a Comment