Tuesday, January 29, 2013

புறப்பொருள் வெண்பா மாலை - ஆணின் காதல் படிகள்


புறப்பொருள் வெண்பா மாலை - ஆணின் காதல் படிகள் 

அந்த காலத்தில் (இப்ப மட்டும் என்ன வாழுகிறதாம்) ஒரு காதலன் அவனுடைய காதலியின் மேல் கொண்ட காதல் எப்படி படிப் படியாக வளருகிறது என்று காட்டுகிறது புறப் பொருள் வெண்பா மாலை. 

முதலில் பாடல்...பின்னால் பொருளை பார்ப்போம் 

காட்சி , ஐயம் , துணிவே, உட்கோள்,
பயந்தோர்ப் பழிச்சல் , நலம் பாராட்டல்,
நயப்பு உற்று இரங்கல் , புணரா இரக்கம் ,
வெளிப்பட இரத்தல் ,என இவ் ஒன்பதும்
ஆண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.

பொருள் 


காட்சி = முதலில் அவளைக் காண்கிறான். வயிற்றில் பட்டாம் பூச்சி. இவள்தானா நான் தேடும் செவ்வந்தி பூ என்று மனதிற்குள் மலர் சொரியும் பொன் வசந்தம். 

ஐயம் = ஹ்ம்ம்...அவள் எங்கே நான் எங்கே...அவ என்ன அழகு...அந்த பெண்ணின் முன்னால் ஆணாக மட்டும் அல்ல, அந்த தேவதையின் முன்னால் ஒரு பக்தனாகக் கூட நிற்க எனக்கு தகுதி இல்லை ... என்னை அவள் ஏறெடுத்துக் கூட பார்ப்பாளா என்ற சந்தேகம் 


துணிவே = துணிஞ்சு போய் அவ கிட்ட என் காதலை சொல்லி விடவா ? எத்தனை நாள் தான் இப்படி மனதுக்குள்ளேயே போட்டு வைத்து இருப்பது..சொல்லிற வேண்டியது தான் ...


உட்கோள் = (உள்ளக் கருத்து) - ஒரு வேளை என் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால், ஒரு வேளை அவள் வேறு யாரையாவது காதலித்தால் ? அது எல்ல்லாம் எனக்குத் தெரியாது, எங்க அப்பா அம்மா என்ன சொல்றாங்களோ அதுபடி தான் நான் கேட்பேன் என்று சொல்லி விட்டால் ?


பயந்தோர்ப் பழிச்சல் = பயந்தோர் என்றால் தந்தவர்கள். பழிச்சல் என்றல் புகழுதல். அவளை பெற்ற பெற்றோரை புகழுதல். இந்த மாதிரி ஒரு தேவதையை பிள்ளையாகப் பெற அவங்க என்ன தவம் செய்தார்களோ...

நலம் பாராட்டல் = ஜொள்ளு விடுதல் என்று பொருள். அவள் அழகை பாராட்டுதல். குப்புற படுத்துக் கொண்டு பக்கம் பக்கமாக புதுக் கவிதை எழுதுவது. மரபுக் கவிதை எழுத முயற்சிப்பது. படம் வரைவது. இப்படி பல பல வழிகளில் அவள் அழகை , குணத்தை பாராட்டுவது 

நயப்பு உற்று இரங்கல் = அவளோடு சேர முடியவில்லையே என்று வருந்துவது.  பள்ளி /கல்லூரி விடுமுறை விட்டு விட்டால் அவளை பார்க்கப முடியவில்லையே என்று வருந்துவது. இன்னைக்கு அவள் பள்ளிக்கோ / கல்லூரிக்கோ வரவில்லையே என்று வருந்துவது.....
 

புணரா இரக்கம் = அவளோடு சேர முடியவில்லையே என்று வருந்துவது...அவளோடு கை கோர்த்து நடக்க முடியவில்லையே, அவள் காணாமல் அவள் தாவணியின்/ சேலையின் நுனியையை தொட முடியவில்லையே, அவள் வளையலை சரி பண்ண முடியவில்லையே  என்று தன்னிரக்கம் கொள்ளுவது, 

வெளிப்பட இரத்தல் = அவ கிட்ட நேரா போய், என் காதலை எப்படியாவது ஏற்றுக் கொள் என்று கெஞ்சுவது 
 
என இவ் ஒன்பதும் = என இந்த ஒன்பதும் 

ஆண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும் = ஆணின் ஒரு தலை காதலின் வடிவங்களாகும். கை கிளை என்றால் ஒருதலை இராகம். 

இப்ப உள்ள காதல் மாதிரியே இருக்குல? 

எவ்வளவு ஆச்சரியம் ?

இதுவே பெண்ணின் காதலாய் இருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா ?





1 comment:

  1. என்ன ஒரு அருமையான விளக்கம் தந்திருக்கிறாய் இதற்கு! ஏதோ சொந்தமாக அனுபவித்த மாதிரி! பாடலை விட உன் வர்ணனை அற்புதமாக இருக்கிறது.

    ReplyDelete