Tuesday, January 29, 2013

நளவெண்பா - மை புகுந்த கண்ணீர்


நளவெண்பா - மை புகுந்த கண்ணீர் 


நளனும் தமயந்தியும் காட்டு வழி செல்கின்றார்கள். நாடிழந்து, செல்வம் எல்லாம் இழந்து செல்கின்றார்கள். 

இரவு வந்து விட்டது. இருவரும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தூங்குகிறார்கள். 

தூக்கம் வரவில்லை. முதலில் நளன் எழுந்திரிக்கிறான். தமயந்தி உறங்குவது போல் பாவனை செய்கிறாள். நளன் அவளைப் பார்த்து வருத்தம் அடைகிறான். பின் அவன் படுத்துக் கொள்கிறான். தமயந்தி எழுதிரிக்கிறாள். நளன் உறங்குவததைப் பார்க்கிறாள். 

எவ்வளவு பெரிய சக்ரவர்த்தி. எப்படி அம்ச துளிகா மஞ்சத்தில் படுத்து உறங்க வேண்டியவர்...இப்படி வெறும் தரையில் படுத்து உறங்குகிறாரே என்று வருந்துகிறாள். ...அவர் தலைக்கு வைத்து படுக்க என் முந்தானை கூட இல்லை என்று கவலை பட்டு தன் கையையை அவனின் தலைக்கு  கீழே வைக்கிறாள்...கொஞ்ச நேரத்தில் அதுவும் அவனுக்கு சுகமாய் இல்லை என்று உணர்ந்து அவன் தலையயை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொள்கிறாள்...அவனின் துன்பத்தைப் பார்த்து அவள் கண்ணில் நீர் வழிகிறது....

தன் துன்பத்தைக் கூட பார்க்காமல், அவனின் துன்பத்தை கண்டு அவள் கவலைப் படுகிறாள்....

மனதை உருக்கும் புகழேந்தியின் பாடல் ....

முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே - என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர.

பொருள் 

முன்றில்தனில் = முன்றில் என்பது இல் + முன், இல்லத்தின் முன் என்று வரும். முற்றம் என்றும் கொள்ளலாம். 

மேற்படுக்க = மேலே படுக்க 

முன்தா னையுமின்றி = முந்தானையும் இன்றி. தமயந்தி ஓராடை உடுத்தி இருந்தாள். 

இன்று துயில = என்று வெறும் தரையில் துயில 

இறைவனுக்கே = என் கணவனுக்கே 

என்றனது = என்னுடைய 

கைபுகுந்த = அவன் தலையின் கீழ் என் கை புகுந்த (என் கையை அவன் தலைக்கு தலையணையாய் வைக்க)

தென்னுடைய கால்புகுந்த = என் மடி மேல் படுத்து உறங்குகிறான் 

தென்றழுதாள் = என்று அழுதாள் 

மைபுகுந்த கண்ணீர் வர = மை புகந்த கண்களை கொண்ட தமயந்தி 

எவ்வளவு காதல் . எவ்வளவு அன்யோன்யம். கொடுத்து வைத்தவன். 

கை புகுந்த, கால்  புகுந்த, மை புகுந்த என்ற சொல்லாட்சி நினைத்து நினைத்து இன்புறத் தக்கது....

புகுந்த என்றால் அவன் உறங்கிய பின், மெதுவாக தன் காலை அவன் தலைக்கு கீழே புகுத்தினாள்...அல்லது மெல்ல தலையை எடுத்து தன் மடி மேல் வைத்துக் கொண்டாள்....

எதை எழுதி விளக்க முடியாது...நீங்களே உணர்ந்தால் தான் உண்டு....

நளன் பட்ட கவலையை இன்னொரு ப்ளாகில் பார்ப்போம் 

 

1 comment:

  1. மை புகுந்த கண்ணீர் - என்ன ஒரு அழகான சொற்பிரயோகம்!

    ReplyDelete