Monday, January 21, 2013

அபிராமி அந்தாதி - மெல் அடியார், அடியார்


அபிராமி அந்தாதி - மெல் அடியார், அடியார்


பெற்ற பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்கா விட்டால் நாம் அவர்களை வெறுத்து ஒதுக்கி விடுவது இல்லை. எப்படியாவது அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று தான் நாம் முயற்சி செய்வோம். மானிடர்களான நமக்கே நம் குழந்தைகள் மேல் இவ்வளவு பாசம் இருந்தால், அபிராமிக்கு அவளுடைய பிள்ளைகளான நம் மீது எவ்வளவு பாசம் இருக்கும் ?

அவள் தான் எல்லாம் என்று தெரியும், அவளைத்தான் அடைய வேண்டும் என்று தெரிந்து இருந்தாலும், அவள் மேல் அன்பு செலுத்துவதை விட்டு விட்டு வேறு எதை எல்லாமோ செய்து கொண்டு இருக்கிறோம். இருந்தாலும், அவள் நம் மேல் கோபப்படாமல், நம் மேல் அன்பு செலுத்துகிறாள். அவளின் கருணைக்கு எல்லை ஏது ?


பாடல் 

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே 
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும் 
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும் 
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.

பொருள் 

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது = தஞ்சம் அடைவதற்கு இதைத் தவிர வேறு இல்லை

என்று = என்று அறிந்தும்

 உன் தவநெறிக்கே = உன்னை அடையும் தவ நெறிக்கு
 
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் = உள்ளன்போடு பயில நினைக்க மாட்டேன்

ஒற்றை நீள்சிலையும் = ஒரு நீண்ட வில்லும்
 
அஞ்சு அம்பும் = ஐந்து விதமான அம்பும்

இக்கு அலராகி நின்றாய் = அன்றலர்ந்த மலராய் நின்றாய் 

அறியார் எனினும் = (குழந்தைகள்) அறியவில்லை என்றாலும் 
 
பஞ்சு அஞ்சு மெல் அடியார் = பஞ்சும் அஞ்சும் மெல்லிய அடிகளை கொண்ட தாய்மார்கள்

அடியார் பெற்ற பாலரையே.= அடிக்க மாட்டார்கள், தாங்கள் பெற்ற பிள்ளைகளை. அவர்களே அப்படி என்றால், அபிராமி, நீயும் என்னை தண்டிக்க மாட்டாய்

2 comments:

  1. நல்ல பாடலை கொடுத்ததற்கு நன்றி.
    இந்த பாடலில் பட்டர் தான் செய்ய தவறியதாக சொல்லி நாம் அந்த நல் வழியில் செல்ல வேண்டும் என்று அழகாக சொல்லி காண்பித்து இருக்கிறார். அபிராமி மட்டும் இல்லை. பட்டரும் நம் மேல் கருணை உடையவரே.

    ReplyDelete
  2. கடைசி வரி பிரமாதம். நன்றி.

    ReplyDelete