Tuesday, March 19, 2013

பெரிய புராணம் - திருநீலகண்டர் - 4


பெரிய புராணம் - திருநீலகண்டர் - 4


இளமை அழகா ? முதுமை அழகா ?

இளைய பெண் அழகாய் இருப்பாளா ? வயதான கிழவி அழகாய் இருப்பாளா ?

இளமை தானே அழகு ? அதில் ஒன்றும் சந்தேகம் இல்லையே ?

சேக்கிழார் அப்படி சொல்லவில்லை. அழகான, வடிவான மூப்பு என்கிறார்.

திருநீலகண்டரும் அவர் மனைவியும் அப்படி ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் பல காலம் வாழ்ந்தனர்.

இளமை போய் விட்டது.

தலை சாய்ந்து விட்டது ? ஏன் ? உடல் சாய்ந்ததால்....கூன் விழுந்ததால். உடலில் ஒரு தளர்வு வந்துவிட்டது.  வலிமை போய் விட்டது.

வயது முதிர்ந்து மூப்பு வந்து விட்டது. ஆனால் அழகாக இருக்கிறார்கள். எப்படி ?

வாழும்போது நிறைவாக வாழ்ந்தால், வயோதிகம் அழகாக இருக்கும். வாழ் நாள் பூராவும் ஏக்கத்திலும், கோபத்திலும், பொறாமையிலும், எரிச்சலிலும், பேராசையிலும் சென்றால்  முதுமை வெம்பி போன பழம் மாதிரி அழகு இல்லாமல் , சுவை இல்லாமல் போகும்.

திருநீலகண்டரும், அவர் மனைவியும் மெய் இன்பம் பெறவில்லை.  அவர்களுக்கு குழந்தை இல்லை.

ஒருவர் மேல் ஒருவர் அன்புடன், இறை பக்தியுடன் வாழ்ந்து வந்ததால், "வடிவுறு மூப்பு " அடைந்தார்கள்.

உடல் வலிமை போனாலும் இறைவன் மேல் கொண்ட அன்பு கொஞ்சம் கூட தளரவில்லை.

 பாடல்


இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற
அளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல 
வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து 
தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார் 



பொருள் 





இளமையின் மிக்குளார்கள் = இளமை பருவம் மிகுந்த அவர்கள்

இருவரும் அறிய நின்ற = இருவர் மட்டுமே அறிய நின்ற. அறிவதோடு மட்டும் அல்ல, அதன் படி நின்ற (நிற்க அதற்குத் தக என்று வள்ளுவர் கூறிய மாதிரி)


அளவில் சீர் ஆணை போற்றி = என்ன அளவு ? திருநீலகண்டத்தின் மேல் கொண்ட அன்பின் அளவு, சிவன் மேல் வைத்த ஆணையை போற்றி

ஆண்டுகள் பலவும் செல்ல = ஆண்டுகள் பலவும் செல்ல

வள மலி இளமை நீங்கி = வளமை மலிந்து நிற்கும் இளமை நீங்கி

வடிவுறு மூப்பு வந்து  = வடிவான, அழகான மூப்பு வந்து

தளர்வொடு சாய்ந்தும் = உடல் தளர்ந்தும், தலை சாய்ந்தும் நின்ற போதிலும்

அன்பு தம்பிரான் திறத்துச் சாயார் = இறைவன் மேல் வைத்த அன்பு குறையாமல் நின்றார் 

உள்ளத்தில் கணவனுக்கு மனைவி மேலும், மனைவிக்கு கணவன் மேலும் அன்பு, இறைவன் மேல் அதைவிட பக்தி, உள்ளத்தில் உறுதி இவை எல்லாம் சேரும்போது  முதுமையும் அழகாக இருக்கும். 

சேக்கிழாரின் தமிழ். என்றோ நாம் செய்த புண்ணியம், இது எல்லாம் அறியக் கிடைக்கிறது. 


சமயம் கிடைத்தால் பெரிய புராண மூல நூலை படித்துப் பாருங்கள். தெவிட்டாத தேன் தமிழ். 

இதுவரை சொன்னது, அறுபத்து மூன்று நாயன்மார்களில், ஒருவரின் வரலாறு. அது கூட இன்னும் பூர்த்தி பண்ணவில்லை. எவ்வளவு இனிமையாக இருக்கிறது . முழுவதும் படித்தால் எப்படி இருக்கும் ?  


2 comments:

  1. Excellent.Thodar kathai padikira mathiri irunthathu.For me it is very difficult to understand the poem without your word by word meaning.Thanks a lot.

    ReplyDelete
  2. திருநீலகண்டரின் குற்றத்தை அந்த அம்மையார் மன்னிக்கவே இல்லையா? "போனால் போகிறது" என்று இருவராலேயுமே விட முடியவில்லையா? அப்படி ஒரு வைராக்கியம் இருக்கக் கூடும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே, இருந்தாலும் அப்படி மன்னிப்பே இல்லாமல் வாழ்வதுதான் நல்லதா?

    அருமையான கதை. நன்றி.

    ReplyDelete