Friday, March 1, 2013

இராமாயணம் - இரண்டு மனம் வேண்டும்


இராமாயணம் - இரண்டு மனம் வேண்டும் 


எத்தனை படித்தாலும், எத்தனை பட்டம் பெற்றாலும் மனிதன் காமத்தை வெல்ல முடிவதில்லை.

காமம் தலைக்கு ஏறும் போது எல்லாம் மறக்கிறது.

காதலால், காமத்தால் முடி துறந்த மன்னர் எத்தனை, உயிர் துறந்த மனிதர்கள் எத்தனை எத்தனை....

காமம் வரலாற்றின் போக்கை மாற்றி இருக்கிறது....மேதைகளை மண்டியிட வைத்திருக்கிறது, இரத்த ஆற்றில் ரோஜா செடி நட்டிருக்கிறது, உயிர் பறித்து உடல் கருக்கி சோகப் புன்னகை சிந்தி இருக்கிறது....

காமம் யாரை விடவில்லை .... இந்திரனை, சந்திரனை, விச்வாமிதிரனை, சந்துனுவை, இராவணனை ... யாரையும் விடவில்லை...

சீதையின் நினைவால் இராவணன் உருகுகிறான் .....


சிற்றிடச் சீதை என்னும் நாமமும் சிந்தைதானும்
உற்று, இரண்டு ஒன்று ஆய் நின்றால், ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ? மறக்கல் ஆம் வழி மற்று யாதோ?
கற்றவர் ஞானம் இன்றேல், காமத்தைக் கடக்கல் ஆமோ?



பொருள்

சீதையின் பெயர் அவன் மனதில் ஆழப் படிந்து .விட்டது. எவ்வளவு ஆழம் என்றால் ஒன்றிலிருந்து  ஒன்றைப் பிரிக்க முடியவில்லை. அவ்வளவு தூரம்
அவளுடைய பெயர் அவன் மனத்தில் கலந்து விட்டது. அவள் இல்லாத மனம் என்று ஒன்று உண்டா என்று கேட்கிறான்.அவளை மறந்து இருக்க இன்னொரு மனம் வேண்டும் என்கிறான்.

காமம் அவனை வாட்டுகிறது.

கம்பன் கேட்க்கிறான்.....கற்றவர்கள், ஞானம் இல்லாவிட்டால் காமத்தை கடக்க முடியுமா என்று. படிப்பு அறிவு இருந்தால் மட்டும் போதாது. ஞானம் வேண்டும்.

இராவணனிடம் கற்ற அறிவு இருந்தது. ஞானம் இல்லை






சிற்றிடச் சீதை = சின்ன இடை உள்ள சீதை


என்னும் நாமமும் = சீதை கூட இல்லை, அவளுடைய பெயர் மட்டும்

சிந்தைதானும் உற்று = சிந்தையில் உற்று

இரண்டு ஒன்று ஆய் நின்றால் = சீதை என்ற பெயரும், அவனுடைய சிந்தையும் ஒன்றாகி விட்டது. இது வேறு அது வேறு அல்ல.

ஒன்று ஒழித்து = ஒன்றை விட்டுவிட்டு

ஒன்றை உன்ன = மற்றொன்றை நினைக்க

மற்றொரு மனமும் உண்டோ? = இன்னொரு மனம் உண்டோ ? இந்த மனம் தான் அவளுடைய பெயரோடு ஒன்றாகக் கலந்து விட்டது. பிரிக்க முடியாது. பிரித்து வாழ இன்னொரு மனமும் உண்டோ ?

மறக்கல் ஆம் வழி மற்று யாதோ? = இன்னொரு மனம் இல்லாமல் அவளை மறக்க வேறு வழி என்ன ? அவளை மறப்பது என்றால், அவளுடைய நினவு மனதில் இல்லாமல் இருக்க வேண்டும். அது தான் முடியாதே மனமும், அவளும் ஒன்றாக ஆகி விட்டதே

கற்றவர் = கற்றவர்கள்

ஞானம் இன்றேல் = ஞானம் இல்லாவிட்டால்

காமத்தைக் கடக்கல் ஆமோ? = காமத்தை கடக்க முடியுமா ?

காமம் தாக்கும் போது உன்னை நினைக்கும் அறிவை தா என்று வேண்டுவார் அப்பரடிகள். (மதன் எனும் பாறை தாக்கி மாறியும் போது அறிய ஒண்ணாது, உன்னை உன்னும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே )

காமக் கடலில் விழுந்து கரை காணாமல் தவிக்கிறான் இலங்கை வேந்தன்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

காமத்தை வெல்லும் ஞானத்தை பெறுவது எப்படி ? அது என்ன ஞானம் ? அதை எப்படி பெறுவது ?

கதையாக, இலக்கியமாக மட்டும் பார்க்காமல் அங்கங்கே உள்ள செய்திகளையும் அறிந்து கொள்வோம்....







1 comment:

  1. இதைப் படித்துவிட்டுத்தான் கண்ணதாசன் "இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன், நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று" என்று எழுதினாரோ?!

    'கற்றவர் ஞானம் இன்றேல், காமத்தைக் கடக்கல் ஆமோ?" என்ற வரியும் அற்புதம்.

    ReplyDelete