Wednesday, March 6, 2013

திருக்குறள் - ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்


திருக்குறள் - ஆக்கமும் கேடும் நினைக்கப்படும் 




அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் 
நினைக்கப் படும் 

வள்ளுவர்: கெட்டவனின் ஆக்கம் பெரிதா ? நல்லவனின் கேடு பெரிதா ? என்று நினைக்க வேண்டும்.

நாம்: இது என்னங்க பெரிய விஷயம்....அவன் ரொம்ப நல்லா இருக்கான், இவன் ரொம்ப மோசமா இருக்கான்..இதுல நினைக்க என்ன இருக்கு ?

வள்ளுவர்: கெட்டவன் எவ்வளவு தான் செல்வம் கிடைத்தாலும் திருப்த்தி அடைய மாட்டான். இன்னும் வேணும் இன்னும் வேணும் என்று நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டே இருப்பான். அவனுக்கு கிடைத்த ஆக்கத்தை கட்டி காக்க படாத பாடு படுவான். அந்த ஆக்கம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

நாம்: சரி, அது சரினே வச்சுக்குவோம் ... நல்லவனுக்கு வரும் கேடு எப்படி நல்லதா இருக்க முடியும்....

வள்ளுவர்: நாடிழந்து காட்டுக்குப் போவது நல்லதா கெட்டதா ?

நாம்: கெட்டது தான்....

வள்ளுவர்: இராமன் நாடிழந்து காட்டுக்குப் போனான்....அது நன்மையில் முடிந்ததா கேட்டில் முடிந்ததா ? நல்லவனுக்கு வரும் கேடு கூட நன்மை பயக்கும். கெட்டவனுக்கு வரும் ஆக்கம் கூட கேட்டினை விளைக்கும்.


நாம்: நீங்க சொல்றது சரிதான்....வேற என்னங்க இருக்கு ?


வள்ளுவர்: நல்லவனுக்கு கொஞ்சம் கேடு வந்தால், ஏதோ விதி வசம் என்று பொறுமையாக இருப்பான். அதே வறுமை கெட்டவனுக்கு வந்தால் என்ன செய்வான் ? என்ன வேண்டுமானாலும் செய்வான்....கொலை செய்வான், ஆட்களை கடத்துவான்...அந்த விதத்தில் அவன் பெற்ற ஆக்கமும், இவன் பெற்ற கேடும் நாட்டுக்கு நல்லது தானே ? நினைத்துப் பார்.

நாம்: அது சரிதான்...இருந்தாலும்....

வள்ளுவர்: இன்னும் முடியவில்லை...கெட்டவனுக்கு வந்த செல்வம் எப்படி வந்திருக்கும் ? நல்ல வழியிலா வந்திருக்கும் ? சிந்தித்துப் பார். அப்படி கெட்ட வழியில் வரும் செல்வம் சிறந்ததா ? எண்ணிப் பார்.

நாம்: சிந்திக்க வேண்டிய விஷயம் தான்...

வள்ளுவர்: கேட்டவன் பெற்ற ஆக்கம்...அதை அவன் எந்த வழியில் செலவழிப்பான்..நல்ல வழியிலா செலவழிப்பான்...ஒருக்காலும் மாட்டான்...இன்னும் தீமை தான் செய்வான்...அது நல்லதா ? எண்ணிப் பார்.


நாம்: நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்....

வள்ளுவர்: இப்படி கெட்ட வழியில் பணம் சேர்த்து, கெட்ட வழியில் செலவழிப்பவனுக்கு எப்படிப் பட்ட நண்பர்களும் உறவினர்களும் கிடைப்பார்கள் ? யோசித்துப் பார்.


நாம்: எல்லாமே அயோக்கிய பயல்கலாகத்தான் இருப்பாங்க ஐயா


வள்ளுவர்: இப்படி எந்நேரமும் தீயவர்கள் சூழ இருப்பது நல்லதா ? எண்ணிப் பார்.

இப்படி பலப் பல விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்...அப்போதுதான் உண்மை புலப்படும்...






4 comments:

  1. "நினைத்துப் பார். மேலோட்டமாக முடிவு செய்யாதே" என்கிறார் போலும் வள்ளுவர்.

    மிக நல்ல விளக்கம்.

    நன்றி.

    ReplyDelete
  2. எது சரி என்று யார் தீர்மானம் செய்வது.
    அவனவனுக்கு ஒரு காரணம் இருக்கிறது.
    ஒரு ஏழை விவசாயி ,ஒரு பணக்காரனிடம் திருடுவது குற்றமா?
    அந்த பணக்காரன் படிப்பு, அறிவு , திறமை, என்றெல்லாம் சொல்லி பல அடுக்கு மாடிகளும் , செல்வங்களும் கொண்டு உள்ளான். உண்மை உடல் , மன உழைப்பு இல்லை. இவனிடம் திருடுவது எப்படி குற்றம்.
    ஒரு பிடி நெல் பயிர் செய்ய விவசாயி தருவது தன் உயிரை. நிலத்தை பண் படுத்தி, விதை வாங்கி , விதைத்து , நீர் விட்டு , மழை பார்த்து ஏங்கி , உரம் இட்டு, தினம் இரண்டு மூன்று முறை பயிர்களை பார்த்து , களை எடுத்து , பூச்சிகளில் இருந்து காத்து , குழந்தையை போல் தூக்கமில்லாமல் வளர்த்து அறுவடை போது மழை பெய்தால் இழந்து , கடைசியில் நெல்லை விற்று அவனுக்கு என்ன கிடைகிறது.? அவனுக்கு கிடைக்கும் பணம் அவன் குடும்பத்துக்கு எப்படி போதுமாக இருக்கும் ? நகரத்தில் இருந்து நாலு படித்து விட்டு சுக வாழ்வு உள்ளவர்களுக்கு இந்த சிரமம் தெரியுமா? விவசாயி எப்போது சுகவாழ்வு பெறுவான்? அவன் வாழ்வை திருடிய சமுதாயம் அவனுக்கு என்ன தரும்?

    எதோ ஒரு விதத்தில் எல்லோரும் திருடுகிறார்கள் . எதோ வழியில் முன்னுக்கு வருஜின்றனர்.(திறமை /தகுதி என்று புளுகி) தன் மனதுக்கு சமாதனம் சொல்லிக்கொண்டு போகிறார்கள். நல்லவன் , கெட்டவன் என்பதற்கு என்ன அளவுகோல். அது யாரோ தங்கள் வசதிக்கு சொல்லி போனது ..ஏழைகளுக்கு என்று நீதி கிடைத்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. Generally, I do not reply to Anonymous mails. I would like to know to whom I am communicating with.

      ஈன்றாள் பசிக் காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை என்பது வள்ளுவர் வாக்கு.

      திருடுவது என்று ஆரம்பித்துவிட்டால் காரனத்திற்கா பஞ்சம். எந்த தீய செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும். அந்த காரணம் அந்த தீய செயலை ஞாயப்படுத்தி விடாது.

      ஒரு இளம் பெண்ணை கற்பழிப்பவன் கூட அதற்க்கு ஒரு காரணம் சொல்ல முடியும். அதனால் அது சரியாகி விடுமா ?

      ஒரு தவறு இன்னொரு தவறை ஞாயப்படுத்தி விடாது.

      ஏழை விவசாயி, படித்துவிட்டு வேலை இல்லாமல் துன்பப்படும் வாலிபன், வருமானம் போதாத குடும்பத்தலைவன் , முதலாளியால் சுரண்டப்படும் தொழிலாளி என்ற பட்டியல் முடிவில்லாதது. எல்லோரும் தவறு செய்ய ஆரம்பித்து விட்டால் ?

      Delete