Monday, March 11, 2013

இராமாயணம் - இராம நாமம் பிறந்த கதை

இராமாயணம் - இராம நாமம் பிறந்த கதை

மெய் சிலிர்க்கும் பாடல்

முதன் முதலில் "இராமன்" என்ற பெயர் பிறந்த கதை.

ஒரு நாட்டை ஆயிரம் ஆண்டுகளாக, எத்தனையோ தலைமுறைகளாக மந்திரம் போல் கட்டி போட்ட நாமம் பிறந்த கதை.

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை
தன்னையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை

அந்த இராம என்ற நாமம் பிறந்த கதை      இது.

இராமன் என்ற பெயரை முன்தான் முதலில் யார் சொன்னது தெரியுமா ?


இராமன், இலக்குவன் பரதன், சத்ருகன் என்ற நால்வரும் பிறந்திருக்கிறார்கள்.

வசிட்டனிடம் பெயர் வைக்கச் சொல்லி தசரதன் வேண்டினான்.

அதிலும் ஒரு பாடம் நமக்கு. யார் பெயர் வைப்பது என்று. ஆசாரியனை கொண்டு பெயர் வைக்கச் சொல்கிறான் தசரதன்.

வசிட்டன் நால்வருக்கும் பெயர் வைக்கிறான்.

முதல் பெயர் இராமனுக்கு. முதன் முதலாய் இராம நாமம் காப்பியத்தில் பிறந்த இடம்.






கரா மலை. தளர் கைக் கரி எய்த்தே.
‘அரா-அணையில் துயில்வோய்!’ என. அந் நாள்.
விராவி. அளித்தருள் மெய்ப்பொருளுக்கே.
‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனன் அன்றே.


அன்று பாம்பணையில் துயில்பவனே என்று முதலையால் பிடிக்கப்பட்ட யானை அழைத்த போது வந்து அருளிய மெய் பொருளுக்கே இராமன் என்று பெயர் ஈந்தான்.

பாடலின் அர்த்தம் அவ்வளவுதான்.

படிக்க படிக்க ஊற்று போல் பொங்கி வரும் அர்த்தங்கள் ஆயிரம் உள்ள பாடல்.

ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

பெயர் ஈந்தனன் - இல்லாதவனுக்கு கொடுப்பது ஈதல். பரம் பொருளுக்கு என்ன இல்லை ? அவனுக்குப் போய் ஈந்தனன் என்று கம்பன் ஏன் சொல்ல வேண்டும் ? இதற்கு அர்த்தம் மாணிக்க வாசகரில் போய் பார்க்கலாம்...


ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!

இறைவனுக்கு ஒரு நாமம் கிடையாது. பாவம். பெயர் இல்லாதவன். அவனை என்ன பெயர் இட்டு அழைப்பது. எதை சொன்னாலும் அது முழுமையாக இருக்க முடியாது. அவனே நினைத்தாலும் அவனுக்கு ஒரு பெயரை வைத்துக் கொள்ள முடியாது. அப்படி பெயர் இல்லாதவனுக்கு ஒரு பெயரை வசிட்டன் "ஈந்தான் " என்பது தானே சரியாக இருக்கும் ?


மாணிக்க வாசகர் ஒரு படி மேலே போகிறார் ...ஒரு நாமம், ஒரு உருவம் ...ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ என்று பாடுகிறார்.


மெய்ப்பொருளுக்கே - மெய் பொருள் என்று நிறுத்தி விட்டார் கம்பர். ஆணா, பெண்ணா என்று ஒன்றும் சொல்லவில்லை. மெய் பொருள். உண்மையில் உள்ள பொருள் அது மட்டும் தான். மற்றது எல்லாம் பொய்.

முதலை காலை பிடித்தபோது யானை "ஆதி மூலமே " என்று அழைத்தது. அது பெயர்ச் சொல் அல்ல. வினைச்சொல். எல்லாவற்றிக்கும் மூலமே என்று அழைத்தது.



கரா மலை. தளர் கைக் கரி எய்த்தே.
‘அரா-அணையில் துயில்வோய்!’ என. அந் நாள்.
விராவி. அளித்தருள் மெய்ப்பொருளுக்கே.
‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனன் அன்றே.

கரா மலை = கரா என்றால் முதலை. முதலை காலை கவ்விக் கொள்ள



தளர் = தளர்ந்த

கைக் கரி எய்த்தே = கையை உடைய யானை (கரி) கூவி அழைக்க
.
‘அரா-அணையில் துயில்வோய்!’ = பாம்பணையில் துயில்பவனே

 என. அந் நாள். = என்று அந்த நாள்

விராவி = விரைவில் வந்து சேர்ந்து

அளித்தருள் மெய்ப்பொருளுக்கே = அளித்து அருளும் மெய் பொருளுக்கே

‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனன் அன்றே = இராமன் என பெயர் ஈந்தனன் அன்றே

இராமன் என்றால் அழகன் என்று பொருள்.

அந்த மெய் பொருள் தான் அவதாரம் பண்ணியது. அந்த மெய் பொருளுக்கு இராமன் என்று நாமம் ஈந்தனன்.

இறைவனை "மெய்யே" என்று அழைப்பார் மணிவாசகர்.

மெய்யா , விமலா, விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓதி ....என்பது மணிவாசகம் 

யானைக்கே அருள் புரிய நடந்து கூட இல்லை ஓடி வந்தான் (விராவி...என்றால் விரைந்து...தட்டு தடுமாறி - விரவிக் கொண்டு வருதல்) என்றால் உங்களுக்கு வரமாட்டானா ? அந்த யானையை பிடித்தது ஒரு முதலை....வாழ்க்கையில் உங்களை எத்தனை முதலைகள் விழுங்க காத்திருகின்றன...யானைக்குத் தெரிந்திருந்தது...அதனால் நீரில் முதலையோடு சண்டை இட்டு வெல்ல முடியாது என்று...இறைவனை துணைக்கு அழைத்தது...சரண் அடைந்தது ...


படித்து படித்து இன்புறத் தக்க பாடல் 





2 comments:

  1. Fantastic Explanation.Rama namathukku thani Magimai.Thanks for sharing.

    ReplyDelete
  2. இராமன் என்றால் அழகன் என்று பொருளா?! இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

    யானை, "ஆதி மூலமே" என்று அழைத்ததா, அல்லது "பாட்பணையில் துயில்பவனே" என்று அழைத்ததா? எனக்கு "ஆதி மூலம்" பிடித்திருக்கிறது.

    அது சரி, நான்கு பிள்ளைகள் பிறக்கும் வரை, யாருக்குமே பெயர் இடவில்லையா?!?

    ReplyDelete