Thursday, March 21, 2013

திருக்குறள் - அகர முதல


திருக்குறள் - அகர முதல 


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

"அ " எழுத்துக்கு எல்லாம் முதல். அது போல் இறைவன் உலகத்திற்கு எல்லாம் முதல். 

வள்ளுவர் எந்த அளவிற்கு யோசித்து எழுதி இருக்கிறாரோ, அந்த அளவிற்கு அதை உணர்ந்து உரை எழுதி இருக்கிறார் பரிமேல் அழகர்.

இந்த குறளில் அப்படி என்ன சிறப்பு என்று பார்ப்போம்.

மாணவன்: ஐயா, இறைவன் இருக்கிறானா ? 

வள்ளுவர்: இறைவன் இருக்கிறான்.. 

மா: இருக்கிறான் என்றால் எங்கே இருக்கிறான் ?

வ: நீக்கமற எல்லா இடத்திலும் இருக்கிறான்.

மா: அப்படிஎன்றால் அவன் எல்லா உயிர்களிலும், பொருள்களிலும் இருக்கிறான்...அப்படிதானே ?

வ: அப்படித்தான். 

மா: அப்படி என்றால், அவன் தனித்து இருக்க மாட்டானா ? ஏதோ ஒன்றை சார்ந்துதான் இருப்பானா ?

வ: நான் அப்படி சொல்லவில்லையே ...அவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான், அவன் தனித்தும் இருக்கிறான். 

மா: குழப்பமாக இருக்கிறதே...அது எப்படி ஒரு ஆள் எல்லாவற்றிலும் இருப்பான், தனித்தும் இருப்பான் ? ஒரு பொருள் ஒன்றில் இருக்கிறது என்றால் அது மற்றவற்றில் இல்லை என்று தானே பொருள்....நீங்கள் சொல்லுவது மாதிரி எல்லாவற்றிலும் இருக்கும், தனித்தும் இருக்கும் என்பது மாதிரி ஒன்றை உதாரணமாக காட்ட முடியுமா ? அப்படி ஒன்று இருக்க முடியுமா ? நீங்கள் அப்படி ஒன்றை காட்டினால், எனக்கு இறைவனை நீங்கள் சொல்வது மாதிரி புரிந்து கொள்ள முடியும்....

வ: ஓ, காட்டலாமே....நீ இந்த "அ " என்ற எழுத்தைப் பார்த்து இருக்கிறாயா ? 

மா: ஆம். தெரியும். பார்த்திருக்கிறேன். 

வ: அதில் இருந்துதான் எல்லா எழுத்தும் வருகிறது என்று தெரியுமா ? 

மா: இல்லை ஐயா. தெரியாதே. அது எப்படி..

வ: தொல்காப்பியம் என்ற நூலைப் படித்துப் பார். எழுத்துக்கள் எப்படி பிறக்கின்றன என்று தொல்காபியர் சொல்லி இருக்கிறார். 

மா: ஐயா, நீங்களே சொல்லுங்களேன்....

வ: சுருக்கமாகச் சொல்லுகிறேன்...மேலே வேண்டுமானால் நீ தொல்காப்பியம் படித்து தெரிந்து கொள்....அ, ஆ  இந்த இரண்டு எழுத்தும் விகாராம் இல்லாமல் பிறக்கும். அதாவது உராய்வு இல்லாமல் பிறக்கும். அதாவது, மூச்சை எழுத்து வாய் வழியே விட்டால் அ, ஆ என்ற இரண்டு சொல்லும் பிறக்கும். "ஹ" என்ற சப்த்தம் பிறக்கிறது அல்லவா ? அந்த அ என்ற எழுத்துதான் உயிர் நாடி. 

மா: சரி ஐயா, மத்த எழுத்துகள் எப்படி வருகின்றன ?

 வ: இந்த அ என்ற எழுத்தில் இருந்து வரும் ஒலியை நாக்கு, பல், அன்னம், உதடு இவற்றின் மூலம் நெருக்கியும், நீட்டியும், சுருக்கியும் மத்த எழுத்துகள் உருவாகின்றன. தொல்காப்பியர் சொல்கிறார் ....

இ, ஈ, எ, ஏ, ஐ, என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன;
அவைதாம்
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.  உரை
   
உ, ஊ, ஒ, ஓ, ஓள, என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்.
இப்படி, எல்லா எழுத்துகளும் அ என்ற எழுத்தில் இருந்து பிறக்கின்றன. மெய் எழுத்திற்கும் அடி நாதம் அ என்ற ஒலி தான். 

மா: சரி ஐயா...அ  என்ற ஒலி எல்லாவற்றிற்கும் மூல ஒலி என்று வைத்துக் கொள்வோம்...அதற்க்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம் ?

வ: அ என்ற எழத்து தனித்தும் நிற்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் வரும். இது புரிகிறதா ?

மா: புரிகிறது. 

வ: அ என்ற எழுத்திற்கு வேறு எந்த எழுத்தும் மூல எழுத்து கிடையாது. ஆனால், எல்லா எழுத்திற்கும் அ என்ற அந்த எழுத்துதான் மூல எழுத்து. புரிகிறதா ?

மா: ம்ம்...புரிகிறது

வ: அது தான் நீ கேட்ட உதாரணம். எல்லாவற்றிற்கும் மூலம், அதுக்கு முன்னால் எதுவும் கிடையாது, தானாக தனித்து இயங்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்...இறைவனுக்கு உதாரணம் அ  என்ற அந்த எழுத்து. 

மா: புரிகிறது ஐயா...ஆனால் , அ  என்ற அந்த எழுத்து தமிழுக்கு மட்டும்தானே முதலில் வருகிறது ...அப்படி என்றால் இறைவனும் தமிழனுக்கு மட்டும்தானா ?

வ: இல்லையப்பா...அ  என்ற அந்த ஒலி எல்லா மொழிகளிலும் அதுதான் முதல் எழுத்து ...அதனால் தான்...அகர முதல எழுத்து எல்லாம் என்று கூறினேன்...எல்லாம் என்றால் எல்லா மொழிகளுக்கும் என்று அர்த்தம். 

அனைத்து உலகங்களும் அவனில் இருந்து பிறக்கின்றன, அவன் எதில் இருந்தும் பிறப்பது இல்லை, அவன் தனித்தும் இருக்கிறான், உயிர்களோடு கலந்தும் இருக்கிறான் ...

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு 


வ: புரிகிறதா  ?

மா: மிக நன்றாக புரிகிறது ஐயா...நன்றி ....


4 comments:

  1. Today only i understood the real meaning of the kural.Great Kural with an outstanding explanation.Many Many Thanks.

    ReplyDelete
  2. இது ரொம்ப டிரிக் ஆனா விஷயமா இருக்கே! சில பக்திமான்களைக் கேட்டால், "ஓம்" என்ற ஒலிதான் எல்லா ஒலிகளுக்கும் முதல் என்று சொல்வார்கள். எல்லாம் அவரவர் வசதிப்படி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    ஆனால், தொல்காப்பியத்துக்கும், திருக்குறளுக்கும் தொடர்பு இருப்பதை இன்றுதான் கேட்டேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஓம் என்ற எழுத்து அ + உ + ம் என்று வந்ததுதான் என்று பக்த கோடிகளும் ஒத்துக் கொள்வார்கள்.

      அகரம், உகரம், மகரம் சேர்ந்ததுதான் ஓம்.

      ஓம் என்று எடுத்துக்கொண்டால், அதற்க்கும் அடிப்படை நாதம் அகரம் தான்.

      அவற்றுள்,
      அ, ஆ, ஆயிரண்டு அங்காந்து இயலும்.

      என்பது தொல்காப்பியம். காற்று இயல்பாக வெளிப்படும் போது உண்டாகும் நாதம் அ அல்லது ஆ.

      Delete
  3. தெளிவான சிந்தனை, தேர்ந்தெடுத்த எழுத்துக்கள், எளிதாக புரிய வைக்க எடுக்கும் முயற்சி, அனைத்தும் அருமை.சில நாட்களாக உங்கள் பக்கங்களை படித்து வருகிறேன். படிக்கும் போது, ஒரு சுகமும், நிம்மதியும், ஒருங்கே கிடைக்கிறது. இது தான் தமிழமுது என்பதா? உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete