Thursday, March 7, 2013

திருக்குறள் - எய்தாப் பழி

திருக்குறள் - எய்தாப் பழி 


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் 
எய்துவர் எய்தாப் பழி 

ஒழுக்கம் உடையவர்கள் மேன்மை அடைவார்கள். இழுக்கம் உடையவர்கள் பழி அடைவார்கள்.

இது கோனார் தமிழ் உரை.

அவ்வளவுதானா ? இதை சொல்ல வள்ளுவர் வேண்டுமா ?

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை - அப்படினா என்ன ? மேன்மை அடைய ஒழுக்கம் வேண்டும். ஒழுக்கம் இல்லாமல் மேன்மை அடைய முடியாது. கல்வி கூட அந்த படியலில் இல்லை. பணம், செல்வாக்கு, அதிகாரம் கல்வித் தகுதி இது எல்லாம் இருந்தாலும் மேன்மை அடைய முடியாது. ஒழுக்கம் இருந்தால் தான் மேன்மை அடைய முடியும்.

இராவணனிடம் எல்லா நற் பண்புகளும் இருந்தது....கல்வி, கேள்வி ஞானம், தைரியம், வீரம், செல்வம், செல்வாக்கு, ஆரோக்கியம் எல்லாம் இருந்தது. அவன் மேன்மை அடைந்தானா ? இல்லையே . ஏன் ..அவனிடம் ஒழுக்கம் இல்லை.


என்ன இருந்தாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் மேன்மை அடையவே முடியாது.

 இழுக்கத்தின்  எய்துவர் எய்தாப் பழி - அது என்ன எய்தாப் பழி ?  ஒருவன் ஒழுக்கம் இல்லாமல் இருந்தால், அவன் செய்யாத பழியை கூட ஏற்க வேண்டி வரும். ஒரு முறை ஒருவன் போலீஸ் ஸ்டேஷன் ரெகார்டில் ஏறி விட்டால்...பின் அந்த ஏரியாவில் என்ன குற்றம் நடந்தாலும் போலீஸ் அவன் மேல சந்தேகப் படும். இவன் செய்திருப்பான், முன்னாடி செய்தவன் தானே என்று அவன் செய்யாத குற்றத்திற்கும் பழி ஏற்க்க வேண்டி வரும். அது எய்தாப் பழி.

இன்னொரு அர்த்தம். தீய ஒழுக்கம் உள்ள ஒருவன் எவ்வளவு தான் நல்லது செய்தாலும் உலகம் அவனை மதிக்காது. படிக்கறது இராமாயணம் , இடிக்கிறது பெருமாள் கோவில் என்று அவனை தூற்றும். எந்த பாவத்தை போக்க இந்த தர்ம காரியங்களை செய்கிறானோ என்று அவன் நல்லது செய்தாலும் உலகம் அவனை பழிக்கும். அது எய்தாப் பழி.


செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெறுவது போல எய்தாப் பழி என்று வள்ளுவர் கூறினார்

திருக்குறளை படிக்க முடிந்ததற்காக நாம் பெருமை பட்டுக் கொள்ளலாம்.

என்ன வருத்தம் என்றால் வருங்கால சந்ததி இதை எல்லாம் அறியாமலே போய் விடும் என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம் வரத்தான் செய்கிறது.








1 comment:

  1. "எய்தாப் பழி" என்ற பதத்திற்கு உன் விளக்கம் நன்றாக இருக்கிறது. நான் இதைப் பற்றி யோசித்ததே இல்லை - கோனார் தமிழ் உரையோடு சரி!

    ReplyDelete