Saturday, March 30, 2013

இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது


இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது


அலுவகலத்தில் நீங்கள் பதவி உயர்வை எதிர்ப்பார்த்து காத்து இருகிறீர்கள். உங்கள் மேலதிகாரி சொல்லிவிட்டார் இந்த வருடம் உங்களுக்கு பதவி
உயர்வு கட்டாயம் உண்டு என்று.

உங்கள் மனைவியடம் சொல்லிவிட்டு போகிறீர்கள் ...இன்னைக்கு சாயங்காலம் வரும் போது பதவி உயர்வு (promotion ) கடிதத்தோடு வருவேன்...சினிமாவுக்கு போயிட்டு அப்படியே ஹோட்டலுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்லிவிட்டு சந்தோஷமா அலுவகலம் போகிறீர்கள்...பதவி உயர்வு கடிதத்திற்கு பதில் உங்களை வேலையை விட்டு தூக்கி விட்டோம் என்று சொல்லி ஒரு கடிதம் கொடுத்தால் எப்படி இருக்கும் ?

இராமனுக்கு அப்படி தான் இருந்தது....

சக்கரவர்த்தி ஆக போகிறோம் என்று நினைத்து போனவனிடம், சகரவர்த்தி எல்லாம் ஒண்ணும் கிடையாது நீ ஊருக்குள்ளேயே இருக்கக் கூடாது, காட்டுக்குப் போ , அதுவும் பதினாலு வருஷம் என்று சொன்னால் எப்படி இருக்கும் ....

சரி இப்ப கதைக்கு வருவோம்...பதினாலு வருடம் கானகம் போ அன்று சொன்ன அந்தத் தருணத்தில் யார் யார் இருந்தார்கள் அந்த இடத்தில் ?

இராமனும், கைகேயியும் மட்டும் இருந்தார்கள். வேறு யாரும் இல்லை. வேண்டுமானால் கடவுள் இருந்தார், அவருக்குத் தெரியும் என்று சொல்லலாம்.

இராமன் முகம் எப்படி மாறியது என்று யாருக்குத் தெரியும் ?

கம்பன் கூறுகிறான் .... அவன் முகம் எப்படி மாறியது என்று எம்மை போன்ற கவிஞர்களால் சொல்லுவது எளிது அல்ல. யாராலும் சொல்ல முடியாத அருமையான குணங்கள் கொண்ட இராமனின் முகம் அந்த வாசகத்தை கேட்பதற்கு முன்னால், கேட்க்கும் அந்த தருணம், அந்த நொடி, கேட்ட பின் இந்த மூன்று சமயத்திலும் அப்பொழுது மலர்ந்த செந்தாமரை போல இருந்தது என்றார்

ஒரு கணம் கூட முகம் வாடவில்லை. ஏன் இப்படி என்ற சந்தேகம் குறி கூட இல்லை முகத்தில்.

இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன். செய்து காண்பித்தான் இராமன்.

எவ்வளவு பெரிய அதிர்ச்சி...எவ்வளவு பெரிய ஏமாற்றம்..சிரித்த முகத்தோடு ஒரு சின்ன  மாற்றம் கூட இல்லாமல் ஏற்றுக் கொண்டான்...

அதை விடவா நமக்கு பெரிய இழப்பும், நட்டமும் வந்து விடும்.....

வாழ்வில் எதையும் sportive ஆக எடுத்துக் கொள்ள பழக வேண்டும்...


பாடல்


இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!

பொருள்





இப்பொழுது = அது நடந்த எத்தனையோ காலத்திருக்குப் பின், இப்போது

எம்மனோரால் = எம் போன்ற கவிஞர்களால்

இயம்புதற்கு எளிதே? = சொல்லுவது எளிமையான காரியமா (இல்லை என்பது பொருள்)

யாரும் = யாராலும்

செப்ப = சொல்ல முடியாத

அருங் குணத்து = அருமையான குணங்களின்


இராமன் = இராமனின்

திருமுகச் செவ்வி நோக்கின் = திருமுகத்தின் செம்மையை பார்த்தால்

ஒப்பதே = ஒப்பிடும் படி இருந்தது


முன்பு பின்பு = முன்பும் பின்பும்

அவ் வாசகம் = கானகம் போ என்று சொன்ன அந்த வாசகம்

உணரக் கேட்ட = உணரும் படி கேட்ட. அதாவது, எங்க சரியா கேட்க்காம, ஒரு வேலை கைகேயி ஏதோ கிண்டலுக்கு சொல்லுகிறான் என்று நினைக்காமல், அவள் சொல்வதை உணர்ந்த

அப் பொழுது = அந்த ஒரு கணத்தில்

 அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா! = அப்போதுதான் மலர்ந்த செந்தாமரையை  வென்றது அவன் முகம்.


அப்பொழுது என்ற வார்த்தையை இரண்டு இடத்திருக்கும் போட்டுக் கொள்ளுங்கள்

உணரக் கேட்ட அப்பொழுது
அப்பொழுதுதான் மலர்ந்த செந்தாமரை

நாம் நினைத்தது, எதிர் பார்த்தது நடக்காவிட்டால் உடைந்து போய் விடக்கூடாது. அதை விட ஏதோ பெரியது கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்....



2 comments:

  1. Congratulations! On behalf of all your blog readers WISH YOU A VERY VERY HAPPY BLOG ANNIVERSARY. Keep writing. Keep enjoying. THANK YOU FROM ALL OF US.

    ReplyDelete
  2. Every piece of the blog is an intellectual and literary treat. Please continue the laudable service. Please include a separate portion for your Bhagavad Gita explanations which are awesome
    CA. TRRamanathan, Tirupur

    ReplyDelete