Friday, March 8, 2013

இராமாயணம் - மரம் குடைந்த தும்பி போல்


இராமாயணம் - மரம் குடைந்த தும்பி போல்


சீதையின் எண்ணம், அவள் மேல் கொண்ட காதல் இராவணனின் மனதை துளைத்து கொண்டே இருக்கிறது. அவன் இதயம் எப்படி பட்ட இதயம் ?

எட்டு திக்கும் காவல் காக்கும் யானைகளோடு இராவணன் ஒரு முறை சண்டையிட்டான். அவற்றின் தந்தம் அவன் மார்பில் சொருகியது. அதை அப்படியே உடைத்தான். தந்தம் பாய்ந்த மார்புகள். அவ்வளவு பலம் வாய்ந்த மார்பு.

அப்படி பட்ட பலமான மார்பை, மன்மதனின் மலர் அம்புகள் துளைத்து விட்டன .

எப்படி தெரியுமா ? மரத்தை குடைந்து எடுக்கும் வண்டு போல. பெரிய தேக்கு மரம் தான். வண்டு என்னவோ சின்னது தான். இருந்தாலும் துளை இட்டு விடுவது இல்லையா ? அது போல் உரம் பாய்ந்த அவன் மார்பை சீதை மேல் கொண்ட காதல் துளைத்து சென்றது....

பாடல்


பரம் கிடந்த மாதிரம் பரித்த, பாழி யானையின்
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன் -
மரம் குடைந்த தும்பிபோல், அனங்கன் வாளி வந்து வந்து
உரம் குடைந்து, நொந்து நொந்து உளைந்து உளைந்து-ஒடுங்கினான்

பொருள்


பரம் = உலகம்.


மரத்தை மறைத்தது மாமத  யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே என்பது திருமந்திரம்



கிடந்த மாதிரம் = மாதிரம் என்றால் திசை , திக்கு. உலகின் எல்லா திசைகளிலும் கிடந்த

பரித்த = சூழ்ந்த

பாழி யானையின் = வலிமை மிக்க யானையின்

கரம் கிடந்த = கரம் என்றால் கை. தும்பிக்கை உள்ள யானையின்

கொம்பு ஒடிந்து = தந்தத்தை ஒடித்து

அடங்க வென்ற காவலன் = அவை அடங்கும் படி வென்ற காவலன்

மரம் குடைந்த தும்பிபோல்  = மரத்தை குடைந்த தும்பி போல்

அனங்கன் வாளி = மன்மதனின் அம்பு

வந்து வந்து = வந்து வந்து (மீண்டும் மீண்டும் வந்து )

உரம் குடைந்து = அவன் வலிமையை குடைந்து

நொந்து நொந்து = நொந்து நொந்து

 உளைந்து உளைந்து = உளைந்து உளைந்து

ஒடுங்கினான் = வலிமை குன்றினான்

1 comment:

  1. வந்து வந்து, நொந்து நொந்து, உளைந்து உளைந்து - என்ன அருமையான சொற்பிரயோகம்! உவமையின் அருமையோ சொல்ல வேண்டியதில்லை!

    யானையின் கொம்பு உடைந்தது அவன் மார்பில் என்பது பாடலில் வெளிப்படையாக இல்லா விட்டாலும், அந்த இனிமையான பொருளை வெளிக் கொணர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete