Saturday, March 16, 2013

திருக்குறள் - நோய் செய்தார்


திருக்குறள் - நோய் செய்தார்


நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் வரும் கடைசிக் குறள் (319).

எளிய உரை - மற்றவர்களுக்கு துன்பம் செய்தால் அது நமக்கே வரும். நமக்கு துன்பம் வேண்டாம் என்றால் பிறருக்கு துன்பம் செய்யக் கூடாது.

சொல்லுவது வள்ளுவர். ஆழமான அர்த்தம் ஏதும் இருக்கும்.

நோய் என்ற சொல் இங்கே துன்பம் என்ற பொருளில் வந்தது. மருந்து என்ற அதிகாரத்தில் நோய் எப்படி வருகிறது என்று வள்ளுவர் கூறுகிறார்.

மனிதனுக்கு நோய் வெளியில் இருந்து வருவது இல்லை. மனிதனுக்கு நோய் உள்ளே இருந்துதான் வருகிறது என்பது வள்ளுவரின் முடிபு.

நம் உடம்பில் மூன்று விஷயங்கள் குறைந்தாலும், மிகுந்தாலும் நோய் வரும் என்கிறார் வள்ளுவர்.

எப்படி நோய் நம்மால் வருகிறதோ அது போல் நமக்கு வரும் துன்பங்களும் நம்மால் தான் வருகின்றன

சரி, ஒரு சில துன்பம் வேண்டுமானால் அப்படி இருக்கலாம்...எல்லா துன்பமும்  அப்படியா ? பிறர் நமக்கு துன்பம் செய்வதே இல்லையா என்று நீங்கள் கேட்பீர்கள் என்று வள்ளுவருக்குத் தெரியும்

"நோய் எல்லாம்" என்றார். ஒரு விதி விலக்கும் கிடையாது. உங்களுடைய எல்லா துன்பங்களுகும்  நீங்கள் தான் காரணம். நீங்கள் பிறருக்கு துன்பம் செய்தால் ஏதோ அவனுக்கு கொஞ்சமும், உங்களுக்கு கொஞ்சமும் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதை மறந்து விடுங்கள். நீங்கள் யாருக்கு என்ன துன்பம் செய்தாலும் அந்த துன்பம் "எல்லாமே" உங்களுக்குத்தான் வரும். அவனுக்கு கொஞ்சம் கூட போகாது.

உங்களுக்குத் துன்பம் வேண்டாம் என்றால், நோய் செய்யார், நோய் இன்மை வேண்டுபவர்


  பிணி என்பது உடலுக்கு வருவது மட்டும் அல்ல....உடற் பிணி, உள்ளப் பிணி, காமப் பிணி  என்று பல நோய்களை கூறுகிறார் வள்ளுவர்.

தரையில் ஓங்கி அறைந்தால், தரைக்கு எவ்வளவு வலிக்கும் உங்கள் கைக்கு எவ்வளவு வலிக்கும் ?

உங்களுக்கு துன்பம் வேண்டாம் என்றால், பிறருக்கு துன்பம் தருவதை நிறுத்துங்கள் என்கிறார் வள்ளுவர்.

நான் யாருக்குமே துன்பம் செய்ததே இல்லையே...எனக்கு ஏன் துன்பம் வருகிறது  என்று சிலர் கேட்கலாம்...

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் = கடைசி இரண்டு எழுத்து "ஆம்" என்றால் ஆகும், வரும் என்று அர்த்தம். இப்ப செய்திருக்க மாட்டீர்கள், முன் எப்போதாவது செய்தது இப்போது "ஆகி" வருகிறது.

ஆகும், ஆகாமல் போகவே போகாது...

எவ்வளவு ஆழமான அர்த்தம் உள்ள குறள். படியுங்கள். குறிப்பாக அடுத்த தலைமுறைக்கும் சொல்லுங்கள்

நாம் சேர்த்த, பெற்ற சொத்துகளை நம் பிள்ளைகளுக்கு பயன்படும்படி விட்டு செல்வதுதானே ஒவ்வொரு பெற்றோரின் கடமை. திருக்குறள் என்ற பொக்கிஷம், சொத்து நீங்கள் பெற்றது. இப்படி ஒன்று இருக்கிறது என்று பிள்ளைகளிடம் சொல்லி வைத்துவிட்டு போங்கள்.


1 comment:

  1. அப்பா! என்ன ஒரு குறள் ! அதற்க்கு எப்படி ஒரு விளக்கம்! தமிழ் தெரிந்ததற்காக பெருமை படும் தருனங்களில் ஒன்று!!!
    Thank you

    ReplyDelete