Wednesday, March 6, 2013

திருக்குறள் - நினைக்கப் படும்

திருக்குறள் - நினைக்கப் படும் 


நாம் வாழ்க்கையில் கெட்டவர்கள் சுகமாகவும், செல்வத்துடனும் நல்லவர்கள் வறுமையில் துன்பப்படுவதையும் பார்க்கிறோம்.

நேர்மையாக நடப்பதால் ஒரு நன்மையையும் இல்லை என்று தோன்றும்.

இதை பார்க்க பார்க்க நம் பிள்ளைகளுக்கு நீதியையும், நேர்மையையும், வாய்மையையும் எப்படி சொல்லித் தர முடியும் ?

வள்ளுவரிடமே கேட்போம் :

நாம்: ஐயா, ஊருக்குள்ள பார்த்தால் கெட்டவன் எல்லாம் கோடிக் கணக்கில் பணம் சேர்த்து சுகமாக இருக்கிறான். நல்லவன் பிள்ளைகளை படிக்கக் வைக்கக்  கூட காசு இல்லாமல் துன்பப் படுகிறான். இதை எல்லாம் பார்த்தால் நீதி, நேர்மை இது எல்லாம் செத்துப் போய் விட்டது என்றே தோன்றுகிறது. பேசாமல் நாங்களும் ஏதாவது பொய் பித்தலாட்டாம் பண்ணி வாழ்க்கையில் முன்னேறுவது தான் சரி என்று படுகிறது.  நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? இதற்க்கு ஒரு விடை சொல்லுங்கள்.

வள்ளுவர்: சிரித்துக் கொண்டே ....

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் 
நினைக்கப் படும் 


நாம்: அப்படினா என்ன ஐயா ?

வள்ளுவர்:  அவ்விய நெஞ்சம், செவ்விய நெஞ்சம் அப்படின்னு இரண்டு இருக்கு. செவ்விய நெஞ்சம்னா தெரியும்ல ? செம்மையான நெஞ்சம், மனம். அதாவது நீதி, நேர்மை, வாய்மை, ஒழுக்கம் இதன் படி வாழும் நெஞ்சம். அதற்க்கு எதிர்மறை அவ்விய நெஞ்சம். புரியுதா ?

 நாம்: புரியுதுங்க ஐயா. மேல சொல்லுங்க.

வ: கெட்ட மனம் கொண்டவனின் சிறப்பும், நல்ல மனம் கொண்டவனின் துன்பமும் நினைக்கப் படும்.

நாம்: என்னங்க இப்படி சொல்றீங்க. நினைக்கப் படும் அப்படினா, என்னங்க ? உங்கள்ளுக்குத் தெரியாதா ? யாருங்க நினைக்கணும். புரியலையே...கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க...

வ: நினைக்கப் படும் என்றால் நினைக்கப் + படும். நினைத்தால் புரியும் என்று அர்த்தம்

நாம்: புரியலீங்க. ரொம்ப நினைச்சு பார்த்துட்டேன்க....ஒண்ணும் விளங்கலீங்க...நீங்களே சொல்லிருங்க


வ: ஆக்கமும் எல்லாம் ஆக்கமும் அல்ல. கேடு எல்லாம் கேடும்  அல்ல.

நாம்: அது என்னங்க புது கோட்பாடு ?

வ: இப்ப நீ ஒரு கெட்டவன் செல்வச் சிறப்போடு இருப்பதை பார்க்கிறாய் அல்லவா ? அவன் சந்தோஷாமாக இருப்பானா என்று நினைத்துப் பார். எப்போதும் பயம். கைது பண்ணப் படலாம், யாரவது அவனை கவிழ்த்து விடலாம், கூட இருப்பவனே அவனை போட்டு தள்ளி விடலாம்...யாரையும் அவன் நம்ப முடியாது...நிம்மதியா தூங்க முடியாது ... இது ஒரு ஆக்கமா ? சிந்தித்துப் பார்.

நாம்: நீங்க சொல்றது சரிதான்...இருந்தாலும்....

வ: நல்லவன் துன்பப் படுகிறான்...அந்த துன்பத்தில் இருந்து விடுபட அவன் நேர்மையான வழியில் முயற்சி செய்வான்....முயற்சி திருவினை ஆக்கும் என்று நான் சொல்லி இருக்கிறேன். அந்த முயற்ச்சியால் அவன் பெருமை அடைவான்...அவனுக்கு புகழும் பணமும் கிடைக்கும்...எனவே செவ்விய நெஞ்சத்தான் கேடு ஒரு கேடே அல்ல.... அது அவனை உயர்த்த கிடைத்த வாய்ப்பு.

நாம்: ஹ்ம்ம்...அதாவது கெட்டவனுக்கு கிடைத்த ஆக்கமே அவனை மேலும் மேலும் கெடுதலை செய்யத் தூண்டி அவனை துன்பத்தில் ஆழ்த்தும் அதே சமயம் நல்லவனுக்கு ஏற்பட்ட துன்பம் அவனை மேலும் மேலும் முயற்சி செய்யத் தூண்டி அவனை உயர்ந்தவனாக்கும்....புரியற மாதிரி இருக்கு....

வள்ளுவர்: இன்னும் இருக்கு தம்பி...இதை பற்றி மேலும் சொல்கிறேன் ...அது வரை நீயும் இதை பற்றி நினைத்துக் கொண்டிரு ....








3 comments:

  1. "நினைக்கப் படும்" என்றால் என்ன? யாரால் நினைக்கப்படும்?

    ReplyDelete