Wednesday, April 10, 2013

இராமாயணம் - பிழை காண்பது


இராமாயணம் - பிழை காண்பது 


வெளியே போக வேண்டும் என்று மனைவி சொல்லி இருப்பாள். கணவன் வேண்டாம் என்று சொல்லி இருப்பான். பின் கொஞ்சம் பேச்சு வார்த்தைக்கு பின், சரி வா என்று கணவன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றிருப்பான்.

போன இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும்..பணப் பை (purse ) தொலைந்து இருக்கலாம், கல் தடுக்கி கீழே விழுந்து அடி பட்டிருக்கலாம்...

உடனே கணவன் மனைவியை பார்த்து " எல்லாம் உன்னால் தான்...நான் அப்பவே சொன்னேன்...பேசாமல் வீட்டில் இருக்கலாம் என்று...கேட்டாத் தானே" மனைவி செய்யாத தவறுக்கு அவளை கணவன் திட்டுவதை பார்த்து இருக்கிறோம்.

இந்த மாதிரி சம்பவங்கள் வீட்டில் மட்டும் அல்ல, அலுவலகத்தில் கூட நடக்கலாம். ஏதோ ஒரு முடிவு எடுத்து, அது தவறாகப் போனால் யாரையாவது  பிடித்து பலி கடாவாக ஆக்கி விடுவார்கள்.

நடந்த தவறுக்கு யாருமே காரணமாய் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் வரும் கோபத்தில் யாரையாவது குறை கூறுவது என்பது மனித இயல்பு.

இராமனின் மணி முடியை பறித்து அவனை காட்டுக்கு போகச் சொல்லி விட்டார்கள் .

இலக்குவனுக்கு அடங்காத கோபம். விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி என்று புறப்பட்டான்.

அவனை தடுத்து, இராமன் சமாதனம் கூறுகிறான்.

தவறு நடந்தது என்றே கொண்டாலும் அதற்க்கு யாரும் காரணம் இல்லை

நதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் குற்றம் அன்று.. மழை பொழியாத இயற்கையின் குற்றம்.

நான் கானகம் போவதற்கு காரணம் தசரதன் காரணம் இல்லை, கைகேயி காரணம் இல்லை, பரதன் காரணம் இல்லை...விதியின் பிழை என்று கூறுகிறான்.

நாமாக இருந்தால் தசரதனை குறை கூறி இருப்போம், அல்லது கைகேயியை அல்லது பரதனை குறை கூறி இருப்போம்.. அவர்கள் மேல் கோபம் கொண்டு இருப்போம்.. கோபம் வெறுப்பை தந்திருக்கும்

இராமன் அவர்கள் யாருமே தவறு செய்யவில்லை. எல்லாம் விதிப் பயன் என்று நினைத்தான். எனவே அவர்கள் மேல் அவனுக்கு கோபம் வரவில்லை.


பாடல்

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.

பொருள்







நதியின் பிழையன்று = நதியின் பிழை அல்ல

 நறும்புனல் இன்மை; = நல்ல தண்ணீர் இல்லாதது. இதில் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் இன்னொரு பொருள் கூட தோன்றும். நதியில் நீர் இருக்கிறது...ஆனால் நல்ல தண்ணீர் அல்ல...கழிவு நீராக இருக்கிறது.. "நறும் புனல் இன்மை "

 அற்றே = அது போல்

பதியின் பிழையன்று = தசரதன் பிழை அன்று

பயந்து நமைப் புரந்தாள் = அன்போடு நம்மை வளர்த்த  கைகேயின் 

மதியின் பிழை அன்று;= அறிவின் பிழை அன்று 

மகன் பிழை அன்று;= பகரதன் பிழை அன்று

மைந்த! = மைந்தனே

விதியின் பிழை; = விதியின் பிழை 

நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.= நீ ஏன் இதற்க்கு கோபப் படுகிறாய்

அடுத்த முறை உங்கள் மனதிற்கு பிடிக்காத ஏதாவது நடந்தால், யாரை குறை கூறலாம் என்று ஆள் தேடாதீர்கள் .... யாரும் தவறே கூட செய்திருந்தாலும்...

அதிலும் குறிப்பாக உங்கள் குடும்பத்தில் நடக்கும் வருத்தமான சம்பவங்களுக்கு   யாரையும் பழி சொல்லாதீர்கள்....

நினைத்திருந்தால் இராமன் யாரையாவது பழி சொல்லி இருக்கலாம்...அப்படி செய்யவில்லை....

அது நமக்கு ஒரு உதாரணம்...ஒரு வழிகாட்டுதல்....

முயன்று பார்ப்போமே...நம் குடும்ப உறவுகள் பலப்டும்...மற்றவர்களுக்கு உங்கள் மேல் உள்ள மதிப்பும் அன்பும் உயரும்.... நல்லதுதானே....  



6 comments:

  1. பிறர் மேல் கோபப்படக்கூடாது என்பது சரிதான். ஆனால், நமக்கு நடக்கும் எல்லாவற்றையும் விதி என்று விட முடியாது, விடவும் கூடாது. எதை விட வேண்டும், எதை விடக்கூடாது என்பதைத் தீர்மானிப்பது எப்படி?

    ReplyDelete
  2. அதிலும் குறிப்பாக உங்கள் குடும்பத்தில் நடக்கும் வருத்தமான சம்பவங்களுக்கு யாரையும் பழி சொல்லாதீர்கள்....

    ReplyDelete
  3. இராவணன் சீதையை கொண்டு சென்ற போது, "விதியின் பிழை" என்று இருக்கவில்லை இராமன்.

    வாலி பிழை செய்தபோது விதியே என்று இருக்கவில்லை.

    நம் மனதுக்கினியவர்கள் தவறு செய்யும் போது அவர்கள் மேல் பழி போடாமல், "நம் மேல் அன்பு கொண்ட ஒருவர் நமக்கு துன்பம் தரும் செயலை செய்தால் அது விதியின் பலன் என்று நினப்பது நமக்கும் அவருக்கும் நன்மை பயக்கும் " என்பது பொருள்....

    ReplyDelete
  4. கைகேயி இராமனைக் காட்டிற்க்கு அனுப்பியது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு.ஆனால் இராவணன் செயத்து அநீதி. இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.அது இராமனுக்கு்த் தெரிந்திருந்த்து.

    ReplyDelete